1 பாரதநாட்டினர் தன்னலமற்ற பெரியோர்களை சித்தர் என்றும் ரிஷி என்றும் போற்றுவது மரபு. திருமூலர் நமக்கு சித்தர்; பதஞ்சலி நமக்கு ரிஷி. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற பொதுநல நோக்கில்தான் திருமூலர் யோகத்தை ’திருமந்திர’மாக அருளினார். பதஞ்சலி ’யோக சூத்ர’ வடிவில் வழங்கினார்.
2 திருக்கயிலாயத்திலிருந்து சுந்தரநாதன் என்ற சிவயோகியார் அகத்தியரை சந்திக்க தென் திசை வந்தார். திருவாடுதுறை அருகே சாத்தனூரில் மாடு மேய்க்கும் மூலன் ஆயுள் முடிந்ததால் சடலமாகக் கிடந்தான். அவனுக்காகப் பசுக்கள் அழுவதைப் பார்த்த இவர் மூலனின் உடலில் பரகாயப் பிரவேச முறையில் புகுந்தார். பசுக்கள் மகிழ்ந்தன. மூலனாகவே வாழ்ந்து (திருமூலர் ஆகி) திருமந்திரம் தந்தார் அந்த சிவயோகியார். ஆதிசேஷனே பதஞ்சலியாக அவதரித்து தென் கடலோரம் தவம் செய்து சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின் திருநடனம் கண்டபின் யோக சூத்திரம் வழங்கினார். யோகாவை உலகுக்கு அருளிய இருவரில் யார் எந்த திசை என்ற பேச்சுக்கே இடமில்லை.
3 சிலப்பதிகாரம் அருளிய இளங்கோவடிகள் தன் காப்பியத்தில் மாதவியை பத்மாசனத்தில் அமர்த்தி கையில் வீணையும் கொடுக்கிறார் கோவலன் சண்டையிட்டு மாதவி கடுங்கோபத்துடன் ஏழாவது உப்பரிகையில் வந்து அமர்கிறார். “நன்பால் அமர்ந்த இருக்கையள்” என்கிறார் இளங்கோவடிகள். இதை “பத்மாசனம்” என்று விளக்குகிறார் சிலப்பதிகார உரையாசிரியர் (90 ஆண்டுகளுக்கு முன்). பதஞ்சலியும் திருமூலரும் தந்து சென்றுள்ள யோகாவின் அம்சம் தானே ஆசனங்கள்?
4 பாரதியாரை கவிஞராக நமக்குத் தெரியும். பதஞ்சலி அருளிய யோக சூத்திரத்திற்கு உரை எழுதியவர் என்ற பரிமாணம் தெரியுமா? யோக சூத்திர நூலின் முதல் பாதத்திற்கு பாரதியார் சரளமான உரை எழுதி தமிழனுக்கு யோகாவை ஞாபகப்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார். பகவத்கீதைக்கு இவர் உரை எழுதியது கூட யோகா என்ற பார்வையில் தான்.
5 சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதை பகுதியில் சாதுவன், சாரணன், காரணன், சித்தன், பெரியவன், செம்மல் என்று பட்டியலிடும் வரி வருகிறது. இதில் சித்தன் என்பதற்கு அணிமா, மகிமா, கரிமா, லகிமா உள்ளிட்ட 8 சித்திகளையும் அதாவது அட்டமா சித்திகள் கைவரப் பெற்றவன் என்று உரையாசிரியர் உ வே சாமிநாதையர் பொருள் தருகிறார். யோகாவினால் இதுபோன்ற சித்திகளையும் அடைவது சாத்தியம் என்பதுதானே பதஞ்சலியும் திருமூலரும் சொன்னது?
6 கொல்லாமையை, திருடாமையை, தவத்தை, தெய்வ பக்தியை வலியுறுத்தி திருவள்ளுவர் திருக்குறள் செய்தாரே, அது வேறு என்ன என்று நினைக்கிறீர்கள்? பதஞ்சலியும் திருமூலரும் அருளிச் சென்ற யோகாவின் அரிச்சுவடி போன்ற யமம் நியமம் முதலிய எட்டு அங்கங்கள் கொண்ட அஷ்டாங்க யோகமேதான்!
7 “தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி - விண்ணக மாதர்க்கு விருந்து” இவ்வாறு கண்ணகி என்ற மானுடப் பெண் தெய்வமானதை சிலப்பதிகாரம் பேசுவதில் ஒரு யோக சாஸ்திர கருத்து அடங்கியுள்ளது. ஒருவரது நல்வினைப் பயன் காரணமாக அவரால் தெய்வ நிலையை அடைய முடியும் என்கிறது பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம். திருமூலர் அன்பே சிவம் என்று பேசினார். அதன் உட்பொருளும் இதுதான்.
8 “வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி / மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும் / தேசுடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே / தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்” – இது பாரதி பாட்டு. யோகாவின் இறுதி இலக்கு இறைவன் திருவடி என்று சொல்லாமல் சொல்கிற பாரதியார் “ஈஸ்வர ப்ரணிதானத்தால்” என்றொரு பதஞ்சலி யோக சூத்ரம் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். பாரதி யார்? யோகத்தின் ஆழம் கண்ட தமிழன்!
9 நாகை மாவட்டம் பொய்கை நல்லூரில் சமாதி கொண்டுள்ள கோரக்கர் தமிழன் அறிந்த 18 சித்தர்களில் ஒருவர். இவரது சீடர் ஆத்மாராம யோகீந்திரர் அருளிச்செய்த நூல் ’ஹட யோக பிரதீபிகை’. இந்த நூல் யோக விளக்கமும் ஆசன வகைகளும் செயல் முறைகளும் குறித்து விளக்குகிறது. போதுமா தமிழ்மண் உலகிற்கு தந்தது யோகா என்ற ஈடுஇணையற்ற பொக்கிஷம் என்பதற்கான சான்றுகள்?
10 யோகாவை நாடிவரும் எல்லா நாட்டு மக்களும் பாரதத்தில் தலைசிறந்த நாலைந்து யோக மையங்களை சென்றடைகிறார்கள். அவற்றில் தலையாயது பிஹாரில் மாங்கேர் நகரில் அமைந்துள்ள யோக மையம். இந்த உன்னதமான அமைப்பைத் தோற்றுவித்த மூல புருஷர் ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர். நமது நெல்லை மாவட்டம் பத்தமடை தான் இவரது ஜன்மபூமி!
0 Comments