தேசம் தயார்
லடாக் பகுதியில் சீனா, இந்தியாவுடன் மோதல் போக்கை ஆரம்பித்தது. இதனால், ஜூன்15 அன்று 20 இந்திய வீரர்கள்வீர மரணம் அடைந்துள்ளனர்.
தேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும், சீனாவின் மீது கோபத்தை, எல்லா விதத்திலும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தேசபக்தியின் வெளிப்பாட்டை, உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களிலிருந்தும் கேட்க முடிந்தது. அதில் சிலரின் உணர்வுகள், நமது கவனத்திற்கு:
போர்முனையில் சீன ராணுவத்துடன் சண்டையிட்டு உயிர்த்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரன் குந்தன் குமாரின் தந்தை கூறுவதைக் கேளுங்கள், "என் மகன் வீரமரணம் அடைந்தான். கவலை இல்லை. எனக்கு இரண்டு பேரன்கள் உள்ளனர். அவர்களை இந்திய ராணுவத்திற்கு அனுப்பி வைப்பேன்". என்று தனது ஒரு மகனை இழந்த நிலையிலும், நாட்டுக்காக, எனது பேரன்களை அனுப்பிவைப்பேன் என்று, இந்தியாவிலிருந்து ஒரு கைப்பிடி மண் கூட எடுக்க விடமாட்டோம் என்று உறுதியோடு சொல்கிறார் வீர மரணம் அடைந்த குந்தன் குமாரின் தந்தை தேசபக்த விவசாயி நிர்மிந்திர யாதவ்.
வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு தெலுங்கானாவை சேர்ந்தவர். மகனின் வீர மரணம் பற்றி அவரது தாயார் மஞ்சுளா, "எனது மகனை ராணுவ வீரனாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே சிறுவயதிலேயே ராணுவ பள்ளியில் சேர்த்தேன். அதன்பிறகு ராணுவ அகாடமியில் படிக்க வைத்தேன். ஒரு தாயாக எனது மகனின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் தாய் நாட்டிற்காக என் மகன் உயிரிழந்தது கவுரவமாக உள்ளது" என்கிறார்.
உத்தரப் பிரதேசம், அலிகார் அருகிலுள்ள அம்ரத்பூர் எனும் கிராமத்து சிறுவர்களுடைய தேசபக்தி, மெய்சிலிர்க்க வைக்கிறது..! நமது வீரர்கள் வீரமரணம் அடைந்ததைப் பற்றி கேள்விப்பட்ட அம்ரத்பூர் கிராம சிறுவர்கள், தங்கள் ஊரிலிருந்து தேசிய நெடுஞ்சாலையை நோக்கி கூட்டமாக நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளூர் காவல்துறையை சேர்ந்த இருவர், என்ன; ஏது என்று விசாரித்த போது, அந்த சிறுவர்கள், தாங்கள் லடாக் பகுதிக்கு செல்கிறோம். சீனாவை ஒரு கை பார்க்கப் போகிறோம் என்று மிகவும் உறுதியாகக் கூறினார்கள். இதனை பார்த்த காவல் அதிகாரிகள், சிறுவர்களை நோக்கி, "உங்களின் தேசபக்தியை கண்டு எங்களின் மனம் மகிழ்கிறது. இந்தியாவை காக்க அடுத்த தலைமுறை தயாராகிவிட்டது. இருந்தாலும், நீங்கள், பெரியவர்களாகி, முறையாக ராணுவத்தில் சேர்ந்து எதிரிகளை ஒடுக்க வேண்டும் என்றார்கள்." அதை கேட்டு புரிந்து கொண்டு, சிறுவர்களும் வீடு திரும்பினார்கள்.
வீர மரணம் அடைந்த மற்றொரு ராணுவ வீரரான 26 வயது ராஜேஷ் ஒரங், மேற்கு வங்காளத்தின் பல்கேரியா எனும் வனவாசி கிராமத்தை சேர்ந்தவர். தனது மகன் வீரமரணம் அடைந்து விட்டான் எனும் செய்தியைக் கேள்விப்பட்டு, ராஜேஷின் தந்தை சுபாஷ் ஒரங், "எனது மகனைப் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன். இந்திய ராணுவம், சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இது மட்டுமே எனது கோரிக்கை" என்று கூறியிருக்கிறார்.
உயிர்த் தியாகம் செய்திருக்கும் பஞ்சாபை சேர்ந்த சத்நாம் சிங்க்கின் இளைய சகோதரர், ராணுவத்தில் சுபேதாராக இருக்கும் சுக்சைன் சிங், "தனது சகோதரனின் வீர மரணத்திற்கு காரணமான சீன ராணுவத்தைப் பழிவாங்குவேன்" என்று சூளுரைத்தார்.
தமிழகத்தில், விழுப்புரம், காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர்கள் ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகத்தை கேள்விபட்டு, அஞ்சலி கவிதைகள், ராணுவத்தில் நானும் சேர்வேன் எனும் உறுதிமொழிகள், நிஜ ஹீரோக்களான ராணுவ வீரர்கள் மட்டுமே இனிமேல் எங்களின் ரோல் மாடல் என்று உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திவருகின்றனர்.
0 Comments