RSS ABKM 2016 General Secretary Statement in Tamil

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் சமீபத்தில் நடந்த
ஜிகாதி பயங்கரவாதம் குறித்து ஆர்எஸ்எஸ் அறிக்கை

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத கார்யகாரி மண்டல்(தேசிய செயற்குழு கூட்டம்) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாக்யநகரில் சமீபத்தில் நடந்தது. 4நாள் நடந்த அந்த கூட்டத்தில் தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் நடந்த ஜிகாதி பயங்கரவாதத்தை கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கை:

தீவிரவாத ஜிகாதி கும்பல்கள் சமீபகாலங்களில் நடத்திய கொடூரமான மத வன்முறைகளையும், அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா கேரள மாநில அரசுகளையும் ஆர்எஸ்எஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற கொடூர வன்முறைகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க, தீவிரவாதக் கும்பல்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்குப்பின் அதிகரித்து வரும் இந்துக்களுக்கு எதிரான மத வன்முறையில் பலர் பலியாகி வருகின்றனர். ஏராளமானோர் படுகாயமடைந்து வருகின்றனர். பல கிராமங்களில் இந்துக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கோயில்களும் விக்ரகங்களும் அவமதிக்கப்படுகின்றன. இந்துக்கள் அவர்களின் சொந்த கிராமங்களில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர்.

அதுபோன்ற பயங்கர சம்பவங்களில் ஒன்றாக, நாடியா மாவட்டம் பி.எஸ்.ஹன்ஸ்கலியில் உள்ள தெற்கு கன்ஜாபாராவில் வசித்துவந்த தலித் சிறுமியான மோ ரஜாக்கை, ஒரு கும்பல் அவளது வீட்டில் புகுந்து தாக்கி அக்டோபர் 10ம் தேதி படுகொலை செய்தது.. சமீபத்தில், துர்க்கா பூஜைக்காக பந்தல்களை அமைக்க விடாமல் இந்துக்களைத் தடுத்துள்ளதோடு, 12க்கும் மேற்பட்ட இடங்களில் துர்க்கா தேவி விஸர்ஜன ஊர்வலங்களின்போது தாக்குதல் நடந்துள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தவேண்டிய காவல்துறை, வெறுமனே வேடிக்கை பார்த்ததோடு, இந்த சம்பவங்கள் பற்றி எப்ஐஆர் பதிவு செய்யக்கூட மறுத்துள்ளது. துர்க்கா சிலைகளை விஸர்ஜனம் செய்ய அநியாயமாகக் கெடு விதித்த அரசின் அப்பட்டமான பாரபட்ச அணுகுமுறையை, ‘சிறுபான்மையினரின் ஆதரவு தேடுதல்’ என்று கல்கத்தா ஐகோர்ட்டே கடுமையாகக் கண்டித்துள்ளது.

இதே வகையில், தென் பாரதத்தில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களிலும் தலையெடுத்து வரும் ஜிகாதி கும்பல்கள், இந்துக்கள் மீது, குறிப்பாக பல தேசியவாத அமைப்புகளில் பணியாற்றிவரும் ஸ்யம்சேவக்குகள் மீது பல கொடூரத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்துார், மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் ஆர்எஸ்எஸ், விஎச்பி, பாஜ மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த பலர் மீது கடந்த இரு மாதங்களில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டிய அமைப்புகளின் அலட்சியம் காரணமாக தீவிரவாதக் கும்பல்கள் துணிச்சல் பெற்று வருவதின் விளைவாக, சங்க ஸ்வயம்சேவகர்கள் பலர் கொலையாகியுள்ளனர். இந்துக்களின் பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்து பெண்கள் மீது பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன. ஆம்பூரில் பெண் போலீஸ் படை மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கர வன்முறை, நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரவாதக் கும்பல்கள் தலையெடுத்திருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

ஒரு மதவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவர், ‘நேரடி நடவடிக்கை’ என்று அழைப்பு விடுத்ததை, எதிர்காலம் இன்னும் அபாயகரமாக மாறும் என்பதற்கான எச்சரிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். இந்த தீவிரவாதக்கும்பல்களை ஒடுக்க விருப்பம் இல்லாமல் அவர்களுக்கு அடிபணியும் அரசு இயந்திரம், தேசநல சக்திகளை துன்புறுத்தி வருவது மிகவும் வேதனையளிக்கிறது.

கர்நாடகாவில் இந்த மாதத்தில் சங்க ஸ்வயம்சேவகர் ஒருவர், பெங்களூரின் ஜனநடமாட்டம் மிகுந்த ஒரு சாலையில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் இதுபோன்ற பல சம்பவங்கள் சமீபகாலத்தில் நடந்துள்ளன. முட்பிட்ரி, குடகு, மைசூர் ஆகிய பகுதிகளில் 4க்கும் அதிகமான இந்து அமைப்பினர் ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவையெல்லாம், உள்ளூர் சார்ந்த தனித்தனி சம்பவங்கள் அல்ல; தென்மாநிலங்களில் உள்ள ஜிகாதி கும்பல்களுக்கும் ஐஎஸ் போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கும் வளர்ந்து வரும் நெருக்கத்தின் விளைவுகள் என்பதற்கு, கேரளா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சமீபத்தில் நடந்த கைதுகளே சாட்சி.

இந்த சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும், சமூக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

Post a Comment

0 Comments