பெற்றோர் மனதில் பெரிய கேள்வி: இனி வகுப்பறை என்னென்ன வடிவம் எடுக்கும்?

“பாட்டு வாத்தியார்!” அம்மா குரல் கேட்டதும் வீட்டு வாசலில் கோலிகுண்டு ஆடிக்கொண்டிருக்கும் தம்பி, கூடத்தில் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருக்கும் அக்கா இருவரும் பரபரவென்று கால் கை சுத்தம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு பாட்டு வாத்தியார் அமர்வதற்கு பாய் விரித்து பக்கத்தில் சுருதிப் பெட்டி, குடிநீர் வைத்து பாட்டு நோட்டும் கையுமாகக் கை கட்டி நிற்பார்கள். வகுப்பறை தயார். பாடம்? இசைதான், சங்கீதம் தான் கர்நாடக சங்கீதம் தான்! தமிழகம் 200 ஆண்டுகளாக பல்லாயிரம் வீடுகளில் கண்ட காட்சி இது.

கர்நாடக சங்கீதத்தை ரசிக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உருவானது இப்படித்தான். மேடை போட்டு கச்சேரி செய்யும் சங்கீத வித்வான்களுக்கு ஆடியன்ஸ் ரெடி. பாட்டு வாத்தியார் அல்லது பாட்டு டீச்சர் வயிற்றுப்பாட்டுக்கும் வழிபிறந்தது. கர்நாடக சங்கீதத்தையும் வளர்த்து விட்டோம். ஒரு கல்லில் பல மாம்பழம்!

வீடு வீடாகச் சென்று பாட்டு சொல்லிக் கொடுத்து வந்த பாட்டு வாத்தியார் அல்லது பாட்டு டீச்சர் யுகத்துக்குத் திரும்பிப் போகலாமா என்று ஒரு நப்பாசைதான். கொரோனா படையெடுத்து வந்த பிறகு பள்ளி கல்லூரிகள் அடைத்து மூன்று மாதம் ஆகி விட்ட நிலையில் பள்ளி கல்லூரி பாடங்களை வீட்டு முன்னறையில் சொல்லிக் கொடுக்கிற பாட்டு வாத்தியாராக கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட், ஐ பேடு, மொபைல் என்று அவதாரங்கள் படையெடுத்தாயிற்று.

அன்றும் பாட்டு வாத்தியாருக்கு சம்பளம் கொடுத்துக் கட்டுபடி ஆகாது என்று நினைத்த குடும்பங்கள் உண்டு. போன வாக்கியத்தில் சொன்ன அந்தக் கருவி எதுவும் வாங்க முடியாத நிலையில் உள்ள குடும்பங்கள் இன்றும் உண்டு. என்ன செய்யலாம் என்று ஆளாளுக்கு யோசனை சொல்கிறார்கள்.

மாணவ மாணவிகள் கையில், வீட்டு முன்னறையில் தான் என்றாலும், இந்த குறுந்திரைக் கருவிகளை கொடுத்தால் என்ன எல்லாம் நடக்குமோ என்று பயப்படுகிறார்கள், பயமுறுத்துகிறார்கள். சரி, பாட்டு வாத்தியார் யுகத்துக்கு திரும்பலாமா என்றால் தலையைச் சொறிகிறார்கள்.

ஆசிரியர்கள் என்று ஒரு பெரிய சமூகம் தன் வாழ்வாதாரம் பறிபோவதை விரும்புமா? ஒரு வகுப்பறையில் 30, 40 மாணவ மாணவிகளை உட்கார வைத்துப் பாடம் சொல்லத்தான் ஆசிரியருக்குத் தெரியும். அவரையே வீட்டு வாத்தியார் ஆக்கினாலும் வீட்டு முன்னறையில் எத்தனை பேரை உட்கார்த்தி வைக்க முடியும்? வீட்டாரின் அன்றாட வேலைகள் பாதிக்குமே? இப்படியெல்லாம் இடைஞ்சல்கள் உண்டு.

நம் வீட்டுக் குழந்தைகளை ஒரு வருட காலம், அல்லது இந்த கல்வி ஆண்டின் எஞ்சிய பகுதி முழுதும், ’குறுந்திரை குரு’மார்களின் கவனிப்பில் விட்டுவிடுவோமா, வகுப்பறைப் படிப்பை எல்லாம் அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம். அதற்குள் கொரோனா விடை பெறுகிறதா, நமது பொறுமை விடைபெறுகிறதா என்று பார்ப்போம்.

எத்தனை காலம் ஆனாலும் சமூக இடைவெளி அவசியம் என்பதால் சின்ன வகுப்புப் படிக்கும் குட்டிப் பிள்ளைகளை துணிந்து வகுப்பறைக்கு அனுப்ப எந்தப் பெற்றோருக்கு மனம் வரும்? பெரிய வகுப்புப் பிள்ளைகள் என்றாலாவது ஓரளவு ஜாக்கிரதையாக இருப்பார்கள். அதுவும் வளரிளம் பருவம் என்பதால் வால்தனம் இருக்கத்தானே செய்யும்?

வளைத்து வளைத்துப் பேசிக்கொண்டு இருப்பதற்கு பதிலாக ஒரு வெற்றிகரமான பரிசோதனையை கண்திறந்து பார்ப்போமா? ஏகல் வித்யாலயா முறை என்று அதற்குப் பெயர். துவக்கப்பள்ளி கூட பக்கத்தில் இல்லை, வெகுதூரம் நடக்க வேண்டும் என்றால் வீட்டு வாசலுக்கு வகுப்பறை வந்துவிடும். அதுதான் ஏகல் வித்யாலயா. துவக்கப்பள்ளி பாடங்கள் மட்டுமே சொல்லிக் கொடுத்தாலும், சொல்லிக் கொடுப்பவர் உள்ளூர் படித்த இளைஞன் / யுவதி என்றாலும், பாரத நாடு நெடுக பல பத்தாண்டுகளாக பல்லாயிரக் கணக்கான ஏகல் வித்யாலயாக்கள் (ஒரு லட்சம் என்று சொல்கிறார்கள்) செயல்பட்டு வருகின்றன. ஏழைகளான கிராமப்புற குடிசைவாழ் மக்களும் மலைவாழ் மக்களும் பயன்பெறுகிறார்கள், வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள், ஏகலுக்கு நன்றி சொல்கிறார்கள். நடக்கிற தூரத்தில் பள்ளிக்கூடம் இல்லை என்பதால் படிப்பே ஏழைக் குழந்தைகளுக்கு எட்டாக்கனி என்ற எண்ணத்தை ஏகல் வித்யாலயா தகர்த்துவிட்டது.

மத்திய அரசு நவோதயா வித்யாலயங்கள் மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளியிறுதி வரை இலவசக் கல்வியும் உண்டுறை வசதியும் தருகிறது. அது கரோனா இல்லாத காலத்தில். பரிசோதனை என்று பார்த்தால் பாரம்பரிய குருகுல முறையைக் கூட பரிசீலிக்கலாம். ஏதாவது ஒரு கல்வி முறை மூலம் நமது பிள்ளைகளுக்கு நல்ல படிப்பையும் நல்ல எதிர்காலத்தையும் நம்மால் தர முடிகிறதோ இல்லையோ, இப்போதைக்கு அவர்கள் கையில் மொபைலைக் கொடுப்போம்.

Post a Comment

0 Comments