கிலாபாத் இயக்கம் - அவசியமும் பிரச்சாரமும்
ஸ்ரீரங் கோட்போலே
ஸ்ரீரங் கோட்போலே
முதல் உலகப் போரிற்குப் பிறகு துருக்கியில் உள்ள ஓட்டோமான் ஆதிக்கம் முடிவடைந்து துருக்கி கலிஃபா பதவி இழந்த சூழ்நிலையில் பாரத முஸ்லிம்களின் கிளர்ச்சியே கிலாபாத் இயக்கம். கலிஃபாவை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப் பட்டதே கிலாபாத் இயக்கம். கலிஃபா என்பவர் உலகிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைவராக பார்க்கப்பட்டார்.
இந்த ஆண்டு கிலாபாத் இயக்கத்தின் நூற்றாண்டு. நூறு ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த இயக்கத்தைப் பற்றி விவாதம் தொடர்கிறது. கிலாபாத் இயக்கம் ஒரு தனிப்பட்ட வரலாற்று சம்பவம் அல்ல. அதற்கு பின்புலமாக மதப் பின்னணியும் வரலாற்று முன்னோடியும் உள்ளது. இந்த இயக்கம் பரவத் துவங்கிய கால கட்டத்தில், பாரத சுதந்திரப் போராட்டத்தின் மீது தாக்கம் உண்டாக்கியதோடு தேசப் பிரிவினையையும் ஊக்கப் படுத்தியது. கூர்ந்த மற்றும் அறிவார்ந்த பார்வையுடன் இந்த சம்பவத்தை நோக்குவது மிக அவசியம். பொய்யான பிரச்சாரத்தின் மூலம் உண்மை குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
பல பாரதீயர்களுக்கு, கிலாபாத் இயக்கத்திற்கும் ஒத்துழையாமை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு தெளிவாக தெரியவில்லை. “21 மார்ச் 1919 தேதியிட்ட ரௌலட் சட்டத்திற்கும் 13 ஏப்ரல் 1919 அன்று நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பிறகும், பிரிட்டிஷ் அரசிற்குக் கொடுத்து வந்த ஆதரவை இந்திய தேசிய காங்கிரஸ் விலக்கிக் கொண்டு தன்னாட்சி மற்றும் முழு ஸ்வராஜ்யம் அடையும் பொருட்டு” காந்திஜியால், 4 செப்டம்பர் 1920 அன்று துவங்கப்பட்டதே ஒத்துழையாமை இயக்கம் என்று பல தலைமுறைகளாக பாரதீயர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்துள்ளது. படித்தவர்களின் களஞ்சியம் என்று தற்பொழுது கூறப்படும் விக்கிபீடியாவில் உள்ள செய்தியும் இதுதான்.
கிலாபாத் இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும்
"ஒத்துழையாமை இயக்கத்துடன் கிலாபாத் இயக்கத்தை இணைப்பதன் மூலம், பாரதத்தின் இரண்டு பெரிய மதத்தினர், ஹிந்துக்கள் முஸ்லிம்கள், இணைந்து காலனி ஆதிக்கத்திற்கு முடிவு கட்டலாம் என்று காந்திஜி நம்பினார்" என்பது தான் வரலாற்று ஆசிரியர்கள் என்ற போர்வையில் உள்ள கட்சி சிந்தனையாளர்கள் பொது மக்களிடையே பரப்பிய கருத்து. இந்த இயக்கங்களின் மூலம், காலனி பாரதத்தில் எப்பொழுதும் இல்லாத வகையில் மக்கள் எழுச்சி நிகழ்வுகள் பல நிகழ்ந்தன (Themes in Indian History Part III, Textbook of History for Class XII, published by NCERT, p.350). இந்திய தேசிய காங்கிரஸின் அதிகார பூர்வ வரலாற்றைப் படிப்பவர்கள், சுயராஜ்ஜியம் அடைவதற்காக காங்கிரெஸால் துவக்கப்பட்டதே ஒத்துழையாமை இயக்கம் என்ற தவறான கருத்திற்கு வருவர் (The History of the Indian National Congress, Pattabhi Sitaramayya, CWC, Madras, 1935, pp. 334, 335). உண்மை வரலாற்றின் தாய் என்றால், வரலாற்று ஆசிரியர்கள் ஏன் உண்மைக்கு பாராமுகமாக இருந்தனர் என்று யோசிக்க வேண்டி உள்ளது.
ஆழ்ந்த மற்றும் உணர்வுகளுக்கு இடமில்லாத பார்வையுடன் கிலாபாத் இயக்கத்தை நோக்குவது அவசியம். பொய் பரப்புரை மூலம், உண்மையை மங்கச் செய்யவும் குழு தோண்டி புதைக்கவும் முடியும். பெரும்பாலும் இத்தகைய பரப்புரைகள், அரசியல் மற்றும் சித்தாந்த ரீதியான எண்ணங்களால் உந்தப்படும். கிலாபாத் இயக்கம் இதற்கு விதி விலக்கு அல்ல.
அரசியல் பிரச்சாரம்
இந்திய தேசிய காங்கிரஸின் அதிகாரபூர்வ இணையதளம் தனது 25 அக்டோபர் 2018 நாளிட்ட கட்டுரையில் கிலாபாத் இயக்கத்தைப் பற்றி கூறுகையில், "பிரிட்டிஷ் அரசிடம் இருந்து தன்னை பாரதம் விடுவித்துக் கொள்ள ஒரு முக்கியமான இயக்கமாக கிலாபாத் இயக்கம் இருந்தது. பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இந்திய தேசிய காங்கிரஸின் மேற்பார்வையில் இணைந்து கிலாபாத் இயக்கம் மூலமாக போராடினர். மகாத்மா காந்தி தனது ஒத்துழையாமை இயக்கத்தை கிலாபாத் இயக்கத்துடன் இணைத்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒருமித்த குரலில் போராட வழி வகுத்ததின் காரணமாக வெற்றி மேலும் வலுவானது. சுரண்டல் மற்றும் ஆதிக்கத்திற்கு எதிராக ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றாக இணைக்க ஒரு அற்புதமான வாய்ப்பாக மகாத்மா காந்தி கிலாபாத் இயக்கத்தை பார்த்தார். "ஸ்வராஜ்யம்" எனப்படும் சுய ஆட்சி முறையை கிலாபாத் இயக்க குறிக்கோள் மற்றும் கோரிக்கைகளுடன் இணைத்து ஒத்துழையாமை திட்டத்தை வகுத்தார். பாரத சுதந்திர போராட்டத்தில் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் இணைத்து போராட வழி செய்ததில் கிலாபாத் இயக்கதிற்கு பெரும் பங்கு இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களும் கிலாபாத் இயக்கத் தலைவர்களும் ஒன்று சேர்ந்ததால் இது சாத்தியமானது. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து போராடினால் மட்டுமே பிரிட்டிஷிடம் இருந்து நமக்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற மகாத்மா காந்தியின் சிந்தனையோடு இந்த ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஒத்துப் போனது" (https://www.inc.in/en/in-focus/the-khilafat-movement-a-landmark-movement-in-indias-journey-to-freedom).
பாடத் திட்டத்தின் மூலம் பிரச்சாரம்
சில பொய் பிரச்சாரங்கள் 'வரலாற்று ஆசிரியர்கள்' மூலம் அவரவர் கோணத்திற்கேற்ப செய்யப் பட்டன. கிளர்ந்த ஹிந்து தேசியவாதத்திற்கு எதிர் வினையானது கிலாபாத் இயக்கம் என்று ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சர் ஹாமில்டன் கிப் (1895 - 1971) வர்ணிக்கிறார். "உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் பாரத்தில் உள்ள முஸ்லிம்கள் மட்டும் 'உலகளாவிய இஸ்லாம்' என்ற கோஷத்தை முன் வைத்தது, ஹிந்து தேசியவாதத்திற்கு எதிராக முட்டுக் கொடுக்கவே" என்று அவர் எழுதுகிறார் (Whither Islam? A survey of the modern movement in the Moslem world, 1932, Routledge, p 73). பல சமயங்களில் வரலாற்று ஆசிரியர்களின் கோணம் முட்டாள் தனமாக தாழ்ந்து போவதுண்டு.
கனடா நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் திரு வில்பிரட் கான்டவெல் ஸ்மித் (1916-2000), "பாரதத்தில் தற்கால இஸ்லாம்" என்கிற தனது புத்தகத்தில் (மினர்வா புத்தகம், லாஹூர்), "கலீபா என்கிற வார்த்தைக்கு கிராமப்புறங்களில் ஒரு வினோத அர்த்தம் கற்பிக்கப் பட்டது" என்று எழுதுகிறார். "கிலாபாத் என்பது உருது வார்த்தையான 'கிலாஃப்' (எதிர்ப்பது அல்லது எதிரானது) என்பதன் மருவல் என்றும் எனவே அது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டம் என்றே மக்கள் நினைத்தார்கள்" என்று அவர் கூறுகிறார். "அவர்கள் எப்பொழுதும் போல் இஸ்லாத்தில் உள்ளதை அறிந்தவர்கள், ஆனால் முஹம்மது பற்றி அறியாதவர்கள் (பக்கம் 234)". இதே முட்டாள் தனத்தை திரு D G டெண்டுல்கர் தான் எழுதிய "மகாத்மா : மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாழ்க்கை" (புத்தகம் 2, பக்கம் 47) என்ற புத்தகத்தில் செய்தார். அப்போதைய பிரதமர் திரு ராஜிவ் காந்தி வெளியிட்ட இந்திய தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு (1885 - 1985) விழா மலரிலும் (Academic Foundation, டெல்லி, 1985, புத்தகம் 2 பக்கம் 66) இதே தவறு செய்யப் பட்டிருந்தது. இந்த மலரை தொகுத்து அளித்தவர்கள் நேருவின் செகுலரிசம் பாசறையில் இருந்து வந்த திரு ரவீந்தர் குமார் மற்றும் திரு B P பாண்டே என்பதை எளிதில் கணிக்க முடியும்.
மற்றொரு 'புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்' பேராசிரியர் போஜானந்தன் பிரசாத் சிங் என்கிற தான் எழுதிய இந்திய வரலாற்று காங்கிரஸின் குறிப்புகள் (புத்தகம் 63, 2002, பக்கங்கள் 615 - 621) என்கிற புத்தகத்தில் கிலாபாத் இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்திலுள்ள மதச்சார்பற்ற தன்மைகளை கண்டறிய முற்பட்டார். "இந்த இயக்கங்களின் மத ரீதியான கோணத்தை மட்டும் வலியுறுத்தி மதச்சார்பற்ற தன்மைகளை மறைப்பது திட்டமிட்ட ரீதியில் குழப்பம் விளைவிக்கும் செயல்" என்று அவர் குற்றம் சாட்டுகிறார். அதிகார பூர்வமாக இந்த இயக்கங்களைப் பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டன. திரு ரஃபிக் சக்கரியா எவ்வாறு தனது "கிலாபாத் இயக்கம் பற்றிய உண்மைகள்" (தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், புது டெல்லி, 24 ஆகஸ்ட் 1997) என்கிற கட்டுரையில் இதை எவ்வாறு எதிர்த்தார் என்றும் வர்ணிக்கிறார். மகாத்மா காந்தி நினைத்த 'மதச்சார்பற்ற தேசியம்' அடைவதற்கான வழி இது என்று 'புகழ் பெற்ற' வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.
அவருடைய இன்னபிற பொன்மொழிகள் - "காந்தியின் ஒத்துழையாமை இயக்கமும் கிலாபாத் இயக்கமும் பல்வேறு மதத்தினர் சகோதரத்துவத்துடன் இணக்கமாக சேர்ந்து வாழும் சுதந்திர மற்றும் ஜனநாயக நாடாக பாரதத்தை மாற்றும் மதச்சார்பற்ற தேசிய இயக்கங்கள். ஒத்துழையாமை இயக்கத்திற்கும் கிலாபாத் இயக்கத்திற்கும் அஹிம்சை கொள்கையே அடிப்படை".
வரலாற்று மறுப்பு
மதப் பின்னணியும் வரலாற்றுப் பின்னணியும் இல்லாமல் திடீரென நடந்த ஒரு சம்பவமாக கிலாபாத் இயக்கம் காண்பிக்கப் பட்டது. அதன் பின்னணியில் உள்ள ஹிந்து மத வெறுப்புடன் அதை வேறுபடுத்த முயற்சி நடந்தது. மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதே 'உலகளாவிய இஸ்லாம்' கொள்கை என்று பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டது. தனது "Mainstream" (புத்தகம் LVIII எண் 6, புது டெல்லி, 25 ஜனவரி 2020) கட்டுரையில் திரு கார்கி சக்ரவர்த்தி, "மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் 'உலகளாவிய இஸ்லாம்' தாத்பர்யம் 1911ம் ஆண்டு வரை பாரதத்தில் வேரூன்றவில்லை. இத்தாலிக்கும் துருக்கிக்கும் போர் நடந்த போது, பிரிட்டிஷ் ரகசியமாக இத்தாலியுடன் கூட்டு சேர்ந்தது. இதனால், பாரதத்திலுள்ள முஸ்லிம்கள் பிரிட்டிஷிடம் இருந்து அன்னியப் பட்டனர். இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அழிக்க முற்படுவதாக அவர்கள் நினைத்தார்கள். 'இஸ்லாத்திற்கு ஆபத்து' என்கிற அபாய மணி கிறிஸ்துவத்திற்கு எதிராகவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் எழுப்பட்டதே அல்லாமல் ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல" என்று எழுதுகிறார். "உலகமயமாக்கலும் மத வேற்றுமைகளும் : பிரச்சினைகள், கோணங்கள் மற்றும் காந்திய கொள்கைகளின் அவசியம்" என்ற பெயரில் அம்பேத்கர் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் (டென்மார்க்) உடன் இணைந்து ஜனவரி 8 முதல் 14ம் தேதி வரை International Winter Schoolல் நடந்த மாநாட்டில் திரு சக்ரவர்த்தியின் கட்டுரை வெளியிடப்பட்டது.
செகுலர்வாதிகளின் லட்சணமே இவ்வாறு இருக்க, இஸ்லாமியர்களின் கூக்குரலுக்கு கேட்க வேண்டுமா ? டிரினிடாட் டொபாகோ நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தில் அதிகாரியாக பணி ஆற்றிய திரு ஷேக் இம்ரான் ஹுசேன் 1985ல் இஸ்லாம் மத பிரச்சாரத்திற்காக தனது பணியை ராஜினாமா செய்தார். கிலாபாத் இயக்கத்தைப் பற்றி அவர் கூறுகையில், "பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம், கத்தி முனையில் ஐரோப்பிய அரசியல் மதச்சார்பின்மையை இஸ்லாத்திற்கு மாற்றாக திணித்தது. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து ஐரோப்பிய மதமான 'மதச்சார்பின்மைக்கு' சவால் விட்டு தங்கள் சொந்த அரசியல் கலாச்சாரத்தை நிறுவ முற்பட்டனர். மேற்கத்திய ஆதிக்க சக்திகள், 'வெள்ளையர் அல்லாதோர்' மீது திணிக்க முயன்ற ஐரோப்பிய அரசியல் மதச்சார்பின்மையையும் அரசியல் சட்ட ஜனநாயகத்தையும் கிலாபாத் இயக்கம் எதிர்த்தது. முஸ்தபா கமால் தலைமையில் புதிதாக எழுந்த மதச்சார்பற்ற மக்கள் குடியாட்சி துருக்கியில், அவருடன் இணைந்து பிரிட்டிஷ் அரசு கலீபா அரசை ஒழிக்க திட்டம் வகுத்தது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஹிந்து முஸ்லீம் இணைய காரணமான கிலாபாத் இயக்கத்தை வீழ்த்தவும் சதி செய்தது (கிலாபாத்இன் வருகை)." இவ்வாறாக, கிலாபாத் இயக்கம், நமது நாட்டின் பூர்விக கலாச்சாரத்தை பேணிக் காக்கவும் இன வெறியை எதிர்க்கவும் வல்ல ஓர் இயக்கமாக காண்பிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை
வரலாற்று ஆசிரியர்கள் என்ற போர்வையில், பல்வேறு சித்தாந்தங்களின் புரவலர்கள், கிலாபாத் இயக்கம் பாரதத்தில் தாங்கள் நீண்ட நாட்களாக எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி ஆற்றும் திரு ஞான் பிரகாஷ், சென்ற ஆண்டு சட்டமாக்கப் பட்ட 'குடியுரிமை திருத்தச் சட்ட'த்திற்கு எதிரான போராட்டத்தையும் கிலாபாத் இயக்கத்தையும் ஒப்பிடுகிறார். "RSS உந்துதலால் தங்கள் மீது நடத்தப் படும் தாக்குதல்களுக்கு மத்தியில், 'பாரதீயர்கள் ஆனால் முஸ்லிம்கள்' என்ற கோணத்தில் இருந்து 'பாரதிய முஸ்லிம்கள்' தாங்கள் என்பதை ஆணித்தரமாக உரைக்கின்றர்" என்று அவர் எழுதுகிறார். முஸ்லிம்களுடைய ஓர் பிரச்சினையின் மூலமாக கிலாபாத் இயக்கம் என்ற ஒரு தேசிய இயக்கத்தை பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக காந்தி பயன் படுத்தியதை நினைவில் கொள்ள வேண்டி உள்ளது. முஸ்லிம்களையும் பாரதத்தையும் இணைக்க இது ஒரு வழி" (Why the protests remind us of Gandhi’s Khilafat movement , Economic Times, 12 Jan, 2020).
கிலாபாத் இயக்கத்தைப் பற்றிய தற்போதைய எண்ண ஓட்டத்தை பின்வரும் சொற்றொடர் நமக்கு உணர்த்துகிறது. "நசுக்கப்பட்ட ஒரு சமுதாய மக்கள் தங்கள் காலனி ஆதிக்க வேட்கையாளர்களுக்கு எதிராக முஸ்லீம் அல்லாத சகோதரர்களையும் இணைத்து மகாத்மா காந்தியின் சீரிய தலைமையில் துவங்கப் பட்டதே கிலாபாத் இயக்கம்". 'காலனி ஆதிக்க வேட்கையாளர்கள்' என்பதற்கு பதில் 'ஹிந்து பெரும்பான்மைத்தனம்' என்றும் 'முஸ்லீம் அல்லாத சகோதரர்களையும்' என்பதற்கு பதில் 'ஹிந்து சாதிக் கொடுமையினால் ஒடுக்கப் பட்ட பிரிவினரையும்' என்று மாற்றி கூறிப் பார்த்தால் இன்றைய கோஷத்தின் அடிப்படை விளங்கும்.
கிலாபாத் இயக்கத்தைப் பற்றி உற்பத்தி செய்யப் பட்டு உலா வரும் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டியது மிக அவசியம். கிலாபாத் இயக்க பின்னணியில் உள்ள அதே மனப்போக்கு 100 ஆண்டுகளுக்குப் பிறகும் உயிர் துடிப்புடன் விளங்குவதால், அதைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம். ஏழாம் நூற்றாண்டு நாகரிகத்திற்கு நம்மை இட்டுச் செல்ல இந்த மனப்போக்கு விழைகிறது. வரலாற்றை மறப்பவர், முன் செய்த பிழையை மீண்டும் செய்வர். அதே போல், வரலாற்றை மாற்றி சொல்பவர் அந்த பிழையை மீண்டும் செய்ய இருக்க மாட்டார். ஆகவே, பொய்யை ஆணித்தரமாக நிரூபிக்க வேண்டியது அவசியம்.
(இதன் ஆசிரியர் இஸ்லாம், கிறிஸ்துவம், தற்கால பௌத்தர்கள்-முஸ்லிம்கள் உறவு, சுத்தி (Shuddhi) இயக்கமும் மத ரீதியான மக்கள் தொகை ஆகியவை பற்றி புத்தகங்கள் எழுதியுள்ளார்).
0 Comments