பாரதம் தலை நிமிர்கிறது, டாக்டர் மன்மோகன் வைத்யா -2

வெளியுறவுக் கொள்கை என்று பார்த்தால் எப்போதும் அணி சேரா நாடு பற்றி பேச்சு இருந்தது. உலக அரங்கில் பாரதம் வலுவான இடம் பெறும் வரை, வியூக ரீதியாக அணி சேரா நாடு என்று பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அது நமது வெளியுறவுக் கொள்கையின் நிரந்தர அடிப்படையாக இருக்க முடியாது!

ஏனெனில், அணி சேரா கொள்கை பேசும் இரு வல்லரசுகளின் தேசிய வாழ்க்கை, அவர்களின் கருத்தியல் அடிப்படை, அவர்களின் தேசிய, சமூக மானுட வாழ்க்கை அனுபவம் ஆகியவை மிகவும் வளர்ச்சியடையாதவை, பாரதத்தின் தேசிய, சமூக, கருத்தியல் அடிப்படையிலிருந்து வளர்ச்சியடையாதவை, முழுமையற்றவை, முதிர்ச்சியற்றவை. நம்முடைய கொள்கையை அவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கும் யோசனை அடிமைத்தனத்தின் மனநிலையை பிரதிபலிப்பதாகவே அமையும். அந்த நேரத்தில் அமெரிக்காவும் அந்த நாள் ரஷ்யாவும் வல்லரசுகள்; அவர்களின் தேசிய வாழ்க்கை 500 ஆண்டுகள் கூட இல்லை. அவர்கள் சார்ந்திருந்த சித்தாந்தத்திற்கு 100 வருட அனுபவம் கூட இல்லை. மறுபுறம் பாரத வரலாறு, தேசிய வாழ்க்கை குறைந்தது 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

ஆன்மநேயம், பூரணத்துவம், உலகு தழுவிய பார்வை

ஆன்மீக அடிப்படையிலான பாரத வாழ்க்கை ஆன்மநேயம், பூரணத்துவம், உலகு தழுவிய பார்வை கொண்டது. அதனால்தான் வலுவான நிலையில் இருந்தாலும் பாரதம் மற்ற நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. வர்த்தகத்திற்காக உலகின் தொலைதூர மூலைகளுக்குச் சென்ற போதிலும், பாரதம் அந்த நாடுகளை காலனியாக்கவோ சுரண்டவோ இல்லை; கொள்ளையடிக்கவோ, மதமாற்றவோ அல்லது அடிமைப்படுத்தி வியாபாரம் செய்யவோ முயலவில்லை. நம் மக்கள் அங்குள்ள மக்களை செழுமைப்படுத்தியுள்ளனர், அனைத்தையும் உள்ளடக்கிய பாரதத்தின் இந்த பண்டைய உலகப் பார்வையும் உலகில் பாரதத்தின் அடையாளமாகும். அதன் விளைவாக, அதே பார்வை நமது வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையாகவும் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் பாரதத்தின் முதல் பிரதமர் மீது கம்யூனிசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, ஆன்மநேயம், பூரணத்துவம், உலகு தழுவிய பார்வை கொண்ட பாரதத்தின் அடையாளத்தை நிராகரித்து, நவீனத்துவத்தின் பெயரில் கவர்ச்சிகரமான மேற்கத்திய சொல்லாடல் மோகத்தில் பாரதத்தின் கொள்கையின் திசையே மாற்றப்பட்டது.

பின்னர், காங்கிரசில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்தது, இறுதியில் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கின் கீழ் வந்தது. இதனால், பாரத்த்திலிருந்து பாரதம் விலகலாயிற்று. பல நூற்றாண்டுகளாக உலகுக்குத் தெரிந்த பாரதம், பாரதத்தின் சுய அடையாளத்தை மறுக்க, தன்னை முற்போக்கான, தாராளவாத, புத்திஜீவி என்று அழைத்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் சமுதாயத்தில் இடையறாமல் நடந்து வரும் சமூக, தேசிய விழிப்புணர்வின் காரணமாக, 2014 தேர்தலில், காங்கிரஸ் அல்லாத கட்சி சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரு தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது. இது மட்டுமல்லாமல், நமது வேர்களுடன் இணைத்து, தற்போதைய சூழலில் நமது கலாச்சார பாரம்பரியத்தை விளக்கி, நாடு தழுவிய மறுமலர்ச்சி கண்டு, முற்போக்கான சிந்தனையின் பெயரில், பாரத சமுதாயத்தின் மீது காலனித்துவ சிந்தனையை திணித்தவர்களை நிராகரித்த, நாடு முழுவதும் இயங்கும் சுறுசுறுப்பான சமுதாயத்தின் வெற்றியாகவும் அது அமைந்தது. 2019 ல் அதிக மக்கள் ஆதரவோடு மீண்டும் ஆட்சிக்கு வந்தது 2014 ல் தொடங்கிய மாற்றத்தின் அடுத்த அத்தியாயம் ஆயிற்று.

லோக்சபா தேர்தல் முடிவுகள் 2014 மே 16 அன்று அறிவிக்கப்பட்டன, , முழுப் பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசமைக்க நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜகவுக்கு அழைப்பு வந்தது. மே 18 தேதியிட்ட 'சண்டே கார்டியன்' தலையங்கம் "இன்று, 2014மே 18, பிரிட்டன் இறுதியாக இந்தியாவை விட்டு வெளியேறிய நாளாக வரலாற்றில் பதிவு செய்யப்படலாம்" என்று தொடங்கியது. “அதிகாரக் கட்டமைப்பும் தன்மையும் பிரிட்டன் இந்திய துணைக்கண்டத்தை ஆட்சி செய்த காலங்களிலிருந்து வேறுபடாத ஒரு நீண்ட சகாப்தத்தின் முடிவைக் குறித்தது, தேர்தல்களில் நரேந்திர மோடியின் வெற்றி. இந்தியா பல வழிகளில் காங்கிரஸ் கட்சியின் கீழ் பாரதம் பிரிட்டிஷ் தர்பாரின் இழை அறுபடா நீட்சியாகவே தொடர்ந்தது...” தலையங்கத்தின் இந்த தொடக்கமே ஏற்பட்ட மாற்றத்தின் அசல் விளக்கமாக அமைந்தது..

அதே நேரத்தில் ஸ்ரீ ஷிவ் விஸ்வநாதன் எழுதிய கட்டுரையொன்று வெளியனது. இந்த கட்டுரையில் ஆசிரியர் ஒரு முக்கியமான ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ’மோடி என் போன்ற லிபரல்களை தோற்கடித்தது எப்படி?’ என்ற அதன் தலைப்பே எல்லா விஷயத்தையும் சொல்லி விடுகிறது.

ஷிவ் எழுதுகிறார் - “மதச்சார்பின்மையால் நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் நம்பிக்கைகள், அணுகுமுறைகள் குறித்து வெட்கம் அடைந்து தயங்கினார்கள். அந்த அளவிற்கு மதச்சார்பின்மை விபரீத சூழலை உருவாக்கி வைத்திருந்த்து. அது ஒரு முட்டுக்கட்டை ஆகிவிட்டிருந்த்து. யதார்த்தத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாக, நடுத்தர வர்க்கம் கூசி ஒதுங்கும் ’சிம்போசிய’க் கூட்டங்களோடு நின்றுபோய்விட்டது.

நரேந்திர மோடி 2014 மே 17 அன்று மீண்டும் காசிக்கு விஜயம் செய்தார். காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜை செய்தார்.. அதன் பிறகு, அவர் கங்கை ஆற்றின் கரையில் தசாஸ்வமேத கட்டம் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். …… எல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது, நிகழ்வு முழுமையும் வர்ணனை இல்லாமல் ஒளிபரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பினர். மறுபுறம், சிலர் இதுபோன்ற ஒரு சடங்கு வெளிப்படையாகக் காட்டப்படுவது இதுவே முதல் முறை என்று கூறிக்கொண்டிருந்தார்கள். காசி கோயில் நிகழ்ச்சியில் மோடி இருந்ததே ’நாம் நமது சமயப் பற்று குறித்து வெட்கப்படத் தேவையில்லை’ என்ற செய்தியைத் தெளிவாகத் தெரிவித்துவிட்டது. இதுபோல இதற்கு முன்பு நடந்திருக்க முடியாது.

முதலில் நான் இதனால் எரிச்சலடைந்தேன், ஆனால் பின்னர், நான் இது பற்றி யோசித்துப் பார்த்தேன். என்னுடைய சக ஊழியர் ஒருவர், ’ஆங்கிலம் பேசும் மதச்சார்பின்மைவாதிகளான நீங்கள், அதிரடியாகப் பேசியே பொதுமக்களை மிரட்டிவந்தீர்கள். அதனால் பெரும்பான்மையினர் கூசி ஒதுங்கினார்கள்’ என்றார். இந்த கருத்து கசப்பான மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தாலும், என்னைப் போன்ற தாராளவாதிகள் இவ்வளவு பெரிய விஷயத்தில் குற்றவாளிகளாக இருக்க முடியும் என்பதை நான் அந்த நேரத்தில் உணர்ந்தேன்!” – இவ்வாறு ஷிவ் எழுதினார்.

இது புதிய பாரதம் என அனைத்து பாரதியர்களும் உலகத்தார் அனைவரும் அனுபவ பூர்வமாக உணர்கிறார்கள். ஆனால் உண்மையில் இது முற்றிலும் புதிதல்ல. இது நாள் வரை பொய்ப் பிரச்சாரத்தின் காரணமாக ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டுக் கிடந்த தேசம், பல நூற்றாண்டுகள் பழமையானது, என்றென்றும் முன்னைப் பழம் பொருளாய் இன்றும் புத்தம் புதிதாய் விளங்குவது. தன்னுணர்வு பெற்று வலிமை வாய்ந்ததாக எழுச்சி பெற்று நிற்கும் ’நம்ம’ பாரதம் இது. பாரத சித்தாந்தம் ”வசுதைவ குடும்பகம்", "ஸர்வே சுகின ஸந்த்து” என்பதாகவே இருந்து வந்திருக்கிறது. ஆதலால், பாரதம் தன் நிஜ இயல்பு உணர்ந்து கொண்டதாலோ தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றிருப்பதாலோ யாருக்கும் பயம் ஏற்படத் தேவையில்லை, ஏனென்றால் இது பாரதமேதான், விழித்தெழும் பாரதம்.

தேசமே கொரோனா தொற்றுநோய் போன்ற ஒரு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுகையில் தன் நிலபரப்பை விரிவாக்க சர்வாதிகார சீனா முன்வைக்கும் சவாலையும் தடுத்து நிறுத்த வேண்டிய இந்த வேளையில் ஒட்டுமொத்த பாரத சமுதாயமும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும், ஒன்றுபட்டு நிற்கிறது. தேசிய பாதுகாப்பு, யுத்த தந்திரம் இவற்றில் ராணுவம் அரசு இவற்றின் முடிவெடுக்கும் திறனில் நம்பிக்கை வைத்து அனைத்து மக்களும் கட்சிகளும் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவது மிக அவசியம். அரசியல் லாப நஷ்டங்களையோ யாருக்கு வெற்றி – யாருக்குத் தோல்வி என்பதையோ தீர்மானிக்க இது நேரம் அல்ல.

(நிறைந்தது)

(கட்டுரையாளர் ராஷ்ட்ரீய ஸ்யம்சேவக சங்கத்தின் சஹ சர் கார்யவாஹ் – அகில பாரத இணை பொதுச் செயலாளர்)

Post a Comment

0 Comments