நல்ல செய்தி -14

தனி ஒருவன் துணிந்து விட்டால்....


(சென்னை மாநகரில், கொரோனா தடுப்பு நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்களுக்கு தலைமை தாங்கும் இளைஞர்)

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் திறன் பயிற்சியாளரான 27 வயது ஹரி கிருஷ்ணன், கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளை,

களத்தில் சிறப்பாக முன்னின்று செய்துவருகிறார். அரசு பள்ளியில் படிப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும்பொழுதே பகுதி நேர வேலை என ஆரம்பித்த்து ஹரியின் வாழ்க்கைப் பயணம், எம்பிஏ பட்டதாரியான‌ அவர், இப்பொழுது முழு நேர தொழில் முனைவர்.

வர்தா புயல் (2016), கேரள வெள்ளம் (2018), மற்றும் கஜா சூறாவளி (2018) போன்ற இயற்கை பேரிடர் நெருக்கடி சமயங்களில் நிவாரணம் , பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு என தொடர்ந்த்து அவரது பயணம். பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செய்யும் சமூக சேவை நடவடிக்கைகளில், நன்கொடை அளிக்கும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு பைசாவும் த‌னது பாக்கெட்டிலிருந்தும் வருவதை உறுதி செய்கிறார்.

இந்த COVID-19 தொற்றுநோயால், உருவான ஊரடங்கு கட்டுப்பாடு ஏழைகளுக்கு உதவ மற்றொரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.

ஹரிகிருஷ்ணனே தொடர்கிறார்….

"மார்ச் 27 அன்று, நகரத்தில் உள்ள ஒரு அனாதை இல்லத்திலிருந்து எனக்கு மருந்துகள், உதவி கேட்டு அழைப்பு வந்தது. அங்கு சென்றதும், அடிப்படை மளிகைப் பொருட்கள் கூட எதுவும் கிடைக்காத நிலையில், நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்தேன். அந்த இல்லம், பொதுமக்கள் வழங்கும் நன்கொடையை மட்டுமே நம்பியுள்ளது. அத்தகைய ஆதரவற்றோர் இல்லங்களின் பட்டியலை நான் தயார் செய்து, எனது சேமிப்பிலிருந்து வாங்கிய நிவாரணப் பொருட்களுடன் அவர்களுக்கு உதவ ஆரம்பித்தேன். ஒரு நாள், ஆதரவற்றோர் இல்லம் செல்ல, ரயிலில் பயணித்தபோது, பல்லாவரம் ரயில் நிலையம் அருகே பார்வைக் குறைபாடுள்ள சிலரை பார்த்தேன். அவர்களில் ஒருவர் என்னிடம், சென்னையில் மட்டும் சுமார் 15,000 பார்வையற்றவர்கள் இருப்பதாக சொன்னார். சில நாட்களில், நான் அவர்களை பற்றிய விஷயங்களை ஆராய்ந்தேன். நகரம் முழுவதும் சிதறிக்கிடக்கும் 1,500 பார்வைக் குறைபாடுள்ளவர்களின் பெயர்களைப் பெற்று. அவர்களில் 200 பேரை மிகவும் கஷ்டபடுகிறவர்கள் எனும் பட்டியலில் அவர்களின் பெயர்களை பதிந்தேன்.

அதைப்போலவே, சென்னைப் புற நகர் உட்பகுதிகளில், அத்தியாவசியப் பொருட்கள் கூட இல்லாமல், பலர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். ஏப்ரல் முதல் வாரத்தில், தினசரி காலை 7மணிக்கு ஆரம்பிக்கும் எனது மோட்டார் சைக்கிள் பயணம் பொன்னேரி, திருவள்ளூர் உள்பகுதிகளில் 180கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, ஒரு வீட்டுக்கு ரூ.1,000 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை. ஒரு நாளைக்கு குறைந்தது 20 வீடுகள் என வழங்கி, வீடு திரும்ப இரவு 11மணி ஆகும். பார்வையற்றவர்களின் வீடுகளை, அந்தப்பகுதியில் கண்டறிவதே கடும் சவாலாக இருந்தது. என் உறவினர் ஒருவர் ஆட்டோ வசதி செய்து கொடுக்க, மற்றொருவர், நிவாரணப்பொருட்களை வைக்க, இடவசதியளித்து உதவினார்."

தனி ஒருவனாக சேவைப்பணிகளை ஆரம்பித்த ஹரிகிருஷ்ணன், விஷயங்களை முக நூலில் பதிவிட, அவரது நண்பர்கள், பிற சமுக செயல்பாட்டாளர்கள் உதவிக்கரம் நீட்டினார்கள்.

இவரது அருமை அதிகார வட்டரத்திற்குப் புரிந்த்து. சென்னையில் உள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்கான நிவாரணப்பொருட்கள் அளிக்கும் துறையில் 5 மண்டலங்களுக்கு பொறுப்பாளராக இவரை நியமித்தார்கள். அடுத்த ஒரு வாரத்திற்குள் 15 மண்டலங்களில் பணிபுரியும் 47தன்னார்வலர்களின் தலைமை பொறுப்பாளராக நியமித்தார்கள். 

8,000 பிற மாநில சகோதரர்களுக்கும், ஆதரவற்றோர், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என சென்னை வாழ் 15,000 குடும்பங்களுக்கும், சென்னை மாநகராட்சியின் சார்பில், ஹரிகிருஷ்ணன் தலைமையிலான தன்னார்வலர்கள் குழு மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மே மாத இறுதியில் ஹரிகிருஷ்ணனின் வங்கிக்கணக்கில் ரூ.2,000தான் இருந்தது. அப்போதுதான், அவர் அதுவரை தனது திருமண செலவுகளுக்காக சேமித்து வைத்திருந்த ரூ.2லட்சம் ரூபாயை சேவைப்பணிகளுக்கு செலவிட்டிருப்பதை உணர்ந்தார்.


Post a Comment

0 Comments