" நாட்டில், தேசியம், சுதேசியம் மீது விவாதம் உருவாக்க சரியான தருணமிதுவே" தத்தாத்ரேய ஹொஸபலே, இணை பொதுச்செயலாளர், ஆர்.எஸ்.எஸ்
"ஆத்ம நிர்பர் பாரத்" (சுயசார்பு பாரதம்) பற்றி சமீபத்தில், 'பிரஜாவாணி' என்ற கன்னட பத்திரிக்கைக்கு திரு தத்தாத்ரேய ஹொஸபலே அளித்த பேட்டியின் சாராம்சம்:
உலகை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவை இந்திய மக்கள் சமாளித்த விதம் :
கொரோனா பேரிடர், நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளது. கொரோனா எங்கு எப்படி உருவானது என்பதை விசாரணை செய்ய 61 நாடுகள் கோரியுள்ளன. மிக அற்புதமாக நட்புறவு கொண்டிருந்த நாடுகள் இப்போது ஒன்றையொன்று சந்தேகத்துடன் பார்க்கின்றன. பொருளாதார பாதிப்புகள் மிக அதிகம். உயிரிழப்பு மட்டுமின்றி, கரோனாவின் தாக்கங்கள் பற்பல.
சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. நாகரீகத்தில் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்திருந்த போதிலும், இயற்கையின் மீது நமது ஆளுமை மிகவும் குறைவானதே என்பதை ஒவ்வொருவரும் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி செய்துகொள்ளத் தெரிந்து கொண்டனர். இந்தியா, பல நாடுகளுக்கு மருந்துப்பொருள்களை அனுப்பி உதவியது.
நீண்டகாலமாகவே நாம் நமது அரசு ஊழியர்கள், காவலர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பிற தொண்டு பங்கீட்டு நிறுவனங்களை ஒரு மன நெருடலுடனேயே பார்த்துவந்தோம். ஆனால், கடந்த நான்கு மாதங்களாக, நமது அரசுப்பணியாளர்கள், போலீஸ், மருத்துவர்கள், செவிலியர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் நாட்டு மக்களைக் காக்க ஆற்றிய தன்னலமற்ற சேவையை நேரில் கண்டோம்.
துப்புரவுப்பணியாளர்களின் சேவையை சிறப்பாகச் சொல்ல வேண்டும். முன்பு அவர்களைப்பற்றி நாம் சிந்தித்ததே இல்லை. ஆனால் இப்போது அவர்களுக்கு மாலை அணிவிக்கத் தயாராக இருக்கிறோம். இதைத்தான் "ஒருவரோடொருவர் சார்ந்திருத்தல்" என்று சொல்கிறேன். அது மக்களை நெருக்கமாகக் கொண்டுவந்திருக்கிறது.
ஆத்மநிர்பர் (சுயசார்பு) மற்றும் சுதேசிப் பொருள் விரும்புதல்
நாம் ஏற்படுத்திய பொருளதார முன்மாதிரிகள் எல்லாக்காலங்களுக்கும் ஏற்றவையல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வயிற்றுப்பிழைப்புக்காக தம் இருப்பிடம் விட்டு வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் (migrant workers), இப்போது தத்தம் குடும்பத்துடன் இருக்க விழைகிறார்கள். அடிப்படையான உணர்வுதான். ஆனால், தம் வீடுகளுக்குத்திரும்பிய பின், இன்றைய காலகட்டத்தில், என்ன செய்யப்போகிறார்கள்? நாட்டின் பொருளாதார நிலை மாற வருடங்கள் ஆகலாம். அதுவரை அவர்கள், எப்படி தம் குடும்பத்தை நடத்துவார்கள்?
நாட்டில், தேசியம், சுதேசியம் மீது விவாதம் உருவாக்க சரியான தருணமிதுவே. ஆகவேதான், நம் முதன்மந்திரி அவர்கள் " சுயச்சார்பு பாரதம் (ஆத்மனிர்பர் பாரத்)" என்ற கோஷத்தை எழுப்பியிருக்கிறார். சுயச்சார்பிற்கு, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புக்கள் திருத்தி அமைக்கப்படவேண்டும் மற்றும் பன்முகப்படுத்துதல் (decentralisation) இன்றியமையாதது.
இன்று, தனிக் கிராமமாக நின்று தன்னிறைவு அடைதல் என்பது இயலாது. ஆகவே, கிராமக்கூட்டமைப்புகள் (village clusters) உருவாக்கப்பட வேண்டும். தொழிற்துறைக்கும் வேளாண்துறைக்கும் தனித்தனியாக உருவாக்க வேண்டும்.
வழக்கமான மின்சாரம் மட்டுமல்லாமல், மாற்று மின் சக்தி ஆதாரங்கள் (sources) ஆய்வுசெய்யப்பட்டு வருகின்றன.
கொச்சி விமான நிலையம் முழுவதும் சூரிய சக்தி மின்சாரத்தால் இயங்குகிறது.
உள்ளூர் கைவினைப்பொருட்களை, உள்ளூர் தொழில்களை சர்வதேச சந்தையில் வெளிப்படச் செய்ய வேண்டும். உள்ளூர் பொருட்களை உலகறியச்செய்யவேண்டும். உலகளாவிய வாய்ப்புக்களை எப்போதும் எதிர்நோக்கி இருக்க வேண்டும்.
காந்திஜி, லோஹியா மற்றும் தீனதயாள் உபாத்யாயா ஆகியோர், பொருளாதார வளர்ச்சியுடன் கலாச்சார மறுமலர்ச்சிக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். சர்வோதயாவை அறிமுகப்படுத்தும்போது காந்திஜி கூறியது உணவுக்கும், உடைக்கும் மட்டுமே பொருந்துவதல்ல. பொருளாதார வளர்ச்சியே முடிந்த முடிவாகிவிடாது. பொருளாதாரதிட்டங்கள் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப அமல்படுத்தப்பட வேண்டும். பல ஆராய்ச்சிகள் இதன்மீது மேற்கொள்ளப்பட்டன. சித்ரகூடத்தில் நானாஜி தேஷ்முக் கூடமேற்கொண்டார்.
தொழில் நுட்பத்தின் மூன்று தூண்கள் பொருளாதாரம் {economy}, சூழலியல் (Ecology) மற்றும் நெறிமுறைகள் (ethics} என்று தீனதயாள் உபாத்யாயா கூறியிருக்கிறார்.
தொழில்நுட்பமானது, பணிகளைக் கபளீகரம் செய்யவோ வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கவோ கூடாது.
கரோனாவின் போது, தற்காப்புக்கருவிகள் (PPE), முகமூடி, வெண்டிலேட்டர் ஆகியவற்றின் திடீர் தேவைகளைப் புரிந்து கொண்டோம். ஆனால் இன்று தினமும் நம்மால் 2.5 லட்சம் பிபிஈக்களை உற்பத்தி செய்ய முடியும்.
தங்கள் வீடு திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு (migrant workers)சிறு தொழில் மற்றும் குடிசைத்தொழில் ஆகியவைகளில் தொழிற்திறன் (skill) பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கென்று சொந்தமான நிலம் ஏதும் கிடையாது, இருந்தால் மிகச்சிறியதாக இருக்கலாம். கால்நடை வளர்ப்பு, காய்கறிப்பண்ணை, பூவளர்ப்பு, வாழ்வாதார விவசாயம் அல்லது குடிசைத்தொழில்கள், கைவினைப்பொருள் செய்தல் போன்ற உறைவிடம் சார்ந்த சாத்தியமான தொழிற்திறமைகள் பெருமளவில் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதற்கு, அரசு, சுயஉதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஆர் எஸ் எஸ் ஏற்கனவே ஐந்தாறு மாநிலங்களில் இதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது.
ஆர் எஸ் எஸ்ஸின் பணி :
பாதிக்கப்பட்டோருக்கு உடனடி சேவை செய்வதை ஆர் எஸ் ஏஸ் என்றுமே முக்கியமாகக் கருதுகிறது. மற்ற பிரச்சனைகளில் பாதிப்பை நேரில் காண இயலும். ஆனால் கோவிட்19ல் அது இயலவில்லை. போதாக்குறைக்கு, சமூக விலகல் மற்றும் முடக்குதல் ஆகியவற்றால் சேவை செய்தல் எளிதாக இல்லை.
மக்கள் தாராளமாக அளித்த நன்கொடைகளை ஆர் எஸ் எஸ், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கியது. சமைக்கப்பட்ட உணவு & ரேஷன் பொருட்கள், முகமூடி, ஸானடைசர் ஆகியவை எல்லா மாநிலங்களிலும் வழங்கப்பட்டன. வட இந்தியாவின் பெரும்பகுதிகளிலும், தமிழ் நாட்டிலும் நோய் எதிர்ப்பு சக்தியைக்கூட்டும் கஷாயம் (ஆரோக்ய திரவ மருந்து) வழங்கப்பட்டது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அப்போது அவர்களுக்கு, மூச்சுப்பயிற்சி, விளையாட்டு ஆகியவை கற்பிக்கப்பட்டது. அத்தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஊர் திரும்பும்போது ஒவ்வொரு நாளும் சுயம் சேவகர்கள் எல்லோருக்கும் காலணியும் உணவும் வழங்கினர். குழந்தைகளை வைத்திருக்கும் அன்னையர்களுக்கு பால் வழங்கப்பட்டது.
கோவில்களில் விடப்பட்ட பசுக்கள், எருமைகள், ஆடுகள் ஆகியவற்றிற்கும் உணவு வழங்கப்பட்டது. பசு பட்சிகள் மீதும் கவனம் செலுத்தப்பட்ட்து. கோவிட்19 அல்லாத நோயாளிகளுக்கும் உதவி அளிக்கப்பட்ட்து. தேவைப்பட்ட இரத்தத்திற்காக சுயம் சேவகர்கள், நாடு முழுவதும் இரத்த தான முகாம்கள் நடத்தினர்.
எங்களுடைய அடுத்த நடவடிக்கை, தொழிற்திறன் உருவாக்கம் மற்றும் குடும்பநல ஆலோசனை மையங்கள் அமைத்தல். மன உளைச்சலுக்கு உள்ளான தம்பதிகள், சமூகப்பொருளாதார நெருக்கடிகளால் கல்வி கற்க முடியாத குழந்தைகளுள்ள கூட்டுக்குடும்ப சகோதரர்கள் போன்றோருக்கு உதவும் திட்டம். சிறு தொழில் செய்வோர் மற்றும் பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஆலோசனை தேவைப்படுகிறது.
புனே, டில்லி, பங்களுரு நகரங்களில், சுயம் சேவகர்கள், அத்தகைய ஆலோசனை மையத்தை நடத்த பயிற்சி அளிக்கப்பெற்றிருக்கிறார்கள்.
கரோனா பரவலில் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டு பற்றி:
மோஹன்ஜி பக்வத் சொன்னஇரண்டு விஷயங்களை நினைவுகூற விரும்புகிறேன்.
ஒரு குழுவினர் செய்த குற்றத்திற்காக, ஒரு சமூகத்தினர் அனைவரையுமே குறை சொல்வது சரியல்ல. இரண்டாவதாக, ஒரு சமூகமே தவறிழைக்காமலிருக்க, ஒவ்வொரு சமூகத்திலும் பொறுப்புள்ள ஒரு தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். உலகளாவிய ஒரு பேரிடர் ஏற்படும்போது, தனது பொறுப்பிலிருந்து யாரும் நழுவ முடியாது. நிலைமையின் முக்கியத்துவத்தை தனது சமூகத்திற்குப் புரிய வைப்பதும் நெறிமுறைகளை அவர்கள் பின்பற்ற வைப்பதும் ஆன்மீகத்தலைவர்களின் கடைமையாகும். தேசியப்பேரிடர் சமயத்தில், சமூகத்தின் நல்லிணக்கம் நிலை நிறுத்தப்படுவது அவசியம். நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்.
கரோனாவிற்குப்பின், பொருளாதார நிலையைப் புனருத்தாரணம் செய்ய வழிகள்:
நகர்ப்புர வாழ்க்கைமுறை எளிமைப்பட வேண்டும்,
இயற்கையுடனும் சமூகத்துடனும் இயைந்து வாழத்தெரிந்து கொள்ளுதல்,
இனிவரும் தலைமுறைக்கு இந்தப்பேரிடரை சமாளித்த விதத்தினை விளக்கிச் சொல்லுதல்.
தத்தம் அளவில், தனக்குத்தெரிந்த முறையில் மக்கள் பலரும் சேவை செய்துகொண்டிருக்கிறார்கள். திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட்டும், பல மடங்களும் ஆலயங்களும் கரோனா நிவர்த்திக்கு உதவியாக, நன்கொடைகள் அளித்துள்ளன. அதிக அளவில் சாமான்ய மக்கள் " பி எம் கேர்ஸ் பண்டி"ற்கு நன்கொடை அளித்துள்ளனர்.
நமது சமூகம் நிரந்தரமான ஆற்றல் கொண்டது. அந்த ஆற்றலை நமது வாழ்க்கையின் நல்லிணக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். அதற்கேற்ப சமூக அரசியல் முறை, தொழில் நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்துதல் மற்றும் பொருளாதாரப் புனர்நிர்மாணம் ஆகியவை நடைபெற வேண்டும்.
0 Comments