நல்ல செய்தி - 12

அலுமினியத்தட்டிலிருந்து, ஆதரவற்றோர்களின் அட்சயபாத்திரம் ஆன "அசாத்திய இந்தியர்" முருகன்

குடிகார தந்தையுடனும், தினக்கூலி வேலைக்கு சென்று வரும் தாயுடனும் சிறு வயதில் தெருவோரத்தில் வசித்து வந்த முருகன், உணவுக்காக, குப்பைத்தொட்டிகளில் கிடைக்கும் மீதமான உணவு, முன் பின் அறியாதவர்களிடமிருந்து கேட்டுப் பெற்ற உணவ் இவற்றையே உண்டு வளர்ந்த‌வன். ஒரு கட்டத்தில், காவல்துறையினரால் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்தான். அங்கு, அன்னை தெரசா, ஸ்ரீ நாராயண குரு ஆகியோரின் வாழ்வு, உபதேசங்களை மனதில் இருத்திக்கொண்டான்.

7 வருஷங்கள் "சைல்டுலைன்" எனும் அமைப்புக்காக வேலை செய்து கிடைத்த தனது சேமிப்பில் ஒரு ஆட்டோ ரிக் ஷா வாங்கிய முருகன், ஆதரவற்றுக் கிடக்கும் வயதானவர்களை, மன நலம் குன்றியவர்களை தேடித்தேடி அவர்களை பராமரிக்கும் இல்லத்தில் சேர்த்து வந்தார்.

சமூக சேவை செய்ய வேண்டும் என்ற பல வருஷக் கனவுக்கு 2007ல், 'தெருவோரம்" எனும் அமைப்பைத் தொடங்கியதன் மூலம் செயல்வடிவம் கொடுத்தார்.

கொரோனா ஊரடங்கு சமயத்திலும், முருகனின் தெருவோரம் அமைப்பினர், தெருக்களில் ஆதரவற்று கிடந்தோரை கண்டு, பாதுகாப்பான இடங்களில் அவர்களை சேர்த்தனர். அப்படி கண்டெடுத்தவர்களில் 90 விழுக்காடுக்கும் மேற்பட்டோர், பிற மாநிலங்களிலிருந்து, வாழ்வாதாரத்துக்காக, கேரள மாநிலத்திற்கு வந்திருந்தவர்களாக இருந்துள்ளனர்.

அவர்களில் பலர் போதை பழக்கம், குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உடல் - மன அளவில் நோய்வாய்பட்டுள்ளவர்களாக உள்ளனர்.

ஏப்ரல் மாத இறுதி வரை, கேரளத்தில் 6 மாவட்டங்களிலில் 617 ஆதரவற்ற நபர்களை கண்டெடுத்து பாதுகாத்துள்ளனர். கேரள திரைத்துறை அமைப்பான "அம்மா" தெருவோரம் அமைப்புக்கு ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளனர். பொதுமக்கள் வழங்கும் நன்கொடைமூலம் ஆதரவற்றர்களுக்கான அன்றாடத் தேவைகளை கவனிக்கின்றனர்.

தான் பட்ட கஷ்டம், தனது பிள்ளைகள் படக்கூடாது என்று குடும்பங்களில் நினைக்கும் நிலை போல, அதையும் தாண்டி, சமுதாயத்திலேயே அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்று முனைப்புடன் செயல்படும் முருகன், 2012ல் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்தும், 2015ல் பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்களிடமிருந்து
"அசாத்திய இந்தியர்" எனும் விருதும் பெற்றிருப்பது, முருகனின் இடையறாத சமுக சேவைக்கான அத்தாட்சிகள் !

Post a Comment

0 Comments