நல்ல செய்தி - 11

சுத்தம் செய்யும் எளிய அஸ்ஸாம் சேவகனின் 

வாழ்க்கையை மாற்றிய‌ கொரோனா; வாழ்த்திப் பாராட்டிய நெட்டிசன்கள் ! 

முக நூல் பதிவால் பிரபலமான துலு பாஸ்பர்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துகள் வந்துகொண்டிருந்தன. இவற்றுக்கு மத்தியில் பீதியடைந்த குரலில் ஒரு நலம் விசாரிக்கும் அழைப்பொன்று வந்தது. தொலைபேசியின் எதிர்முனையில் அவரது தாய், "ஏன்ப்பா உனக்கு கொரோனா பாஸிட்டிவாமே..." என்று சோகம் கலந்த அக்கறையுடன் கேட்டார். 

அஸ்ஸாமின், கோல்பாரா மாவட்ட. ஒரு ஹோட்டலில் 31வயது, துலு பாஸ்பர் இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தனது தாய் இப்படி கவலைப்படுகிறார் என்பதை புரிந்துகொண்ட பாஸ்பர், “எனக்கு கொரோனா பாஸிட்டிவ் இல்லை, வெறுமனே தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன், பொய்த்தகவலை நம்பி வீண் கவலை கொள்ளாதே" என்று அம்மாவிடம் சொன்னவர், தனக்குள்ளும் இப்படித்தான் ஏப்ரல் முதல் வாரத்தில் சொல்லிக்கொண்டார். 

ஆம், கடந்த ஏப்ரலில் கோல்பாரா சிவில் மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்கள், கொரோனா வார்டில் பணிசெய்ய‌ முடியாது என்று மறுத்த சமயத்தில், மருத்துவமனை மேலதிகாரி திகைத்துதான் போனார். ஆனால், அந்த சமயத்தில் துலு பாஸ்பர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டு, வார்டு முழுவதும் சுத்தம் செய்யும் பணியை தைரியத்துடன் மிகச்சிறப்பாக செய்துகொண்டிருந்தார். 

தந்தையை இழந்த துலு பாஸ்பர், 2006ல் குவாஹாட்டியிலிருந்து, 150கி.மீ தொலைவில் உள்ள கோல்பாராவில் உள்ள 200 படுக்கை கோல்பரா சிவில் மருத்துவமனைக்கு எடுபிடி வேலை செய்து, தானாகவே மருத்துவமனையின் தரை சுத்தம் செய்ய தொடங்கினார். அவர் மருத்துவமனைப் பணியாளரும்ல்ல, ஒப்பந்த தொழிலாளரும் அல்ல. அவர் செய்யும் தூய்மைப்பணி சிறப்பாக இருக்கவே மருத்துவர்களும் நிர்வாகிகளும் அவரை ஏன் இதையெல்லாம் செய்கிறாய் என்று பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவரவர் முடிந்த அளவு கொடுத்த பணத்தை சேர்த்து வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தார். 

கொரோனா சிகிச்சை சமயத்தில் கோல்பாரா அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள், பணிக்கு வர மறுக்க, மருத்துவர்களும், மருத்துவமனையில் உயர் கண்காணிப்பாளர் சௌத்ரியும் கொடுத்த நம்பிக்கையின் பேரில், பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து, சுத்தம் செய்யும் பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கிறார் துலு. 

கொரோனா ஆபத்துக்கு மத்தியிலும் இடையறாது பணியாற்றிய துலு பாஸ்பரின் ஈடுப்பாட்டை கவனித்த சௌத்ரி, அஸ்ஸாம் சுகாதார துறை அமைச்சருக்கு துலுபாஸ்பர் பற்றிய தகவலை தெரிவித்தார். நாளொன்றுக்கு 1,000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்த கண்காணிப்பாளர், தேசிய ஆரோக்கிய பணியாளர் மையத்தின் மூலமாக நிரந்தரப் பணி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார். 

இதுவரை மாதம் ரூ.2000 முதல் ரூ.2500வரை மட்டுமே சேர்த்து வந்த துலு பாஸ்பர், ஆனந்த கண்ணீரில் நன்றியை தெரிவித்து விட்டு பணியைத் தொடர்ந்தார். கட்டாய தனிமைப்படுத்தலின் தனக்கு கொரோனா நெகட்டிவ் என்று தெரிந்தவுடன், தனக்கு நிரந்தரப் பணி கிடைக்க இருக்கும் வாய்ப்பைத் தெரிவிக்க‌ ஊரில் உள்ள‌ தன் மனைவியையும் ஒரு வயது குழந்தையையும் காண‌ மகிழ்ச்சியோடு சென்றிருக்கிறார். 

அவரது இந்த தைரியமான, அர்ப்பணிப்பான பண்புக்குத்தான், நெட்டிசன்கள், அவரது ஒளிப்படத்தின் மீது "ஜெய்ஹிந்த்" என்றெழுதி, பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

கடமையில் முழு ஈடுபாடு உள்ள எளிய சேவகனின் வாழ்க்கை சம்பவத்தில், சமுதாயமும் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது அல்லவா?

Post a Comment

0 Comments