ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு (ABKM), இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஜம்மு காஷ்மீரிலும் முழுமையாக அமல்படுத்தியதை வரவேற்கிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என்று யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்டது பாராட்ட தக்க முடிவு. மத்திய அரசு மற்றும் இந்த துணிச்சலான முடிவுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு ABKM வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இது தொடர்பாக மதிப்புற்குரிய பிரதமர் கடைபிடித்த ராஜதந்திரம் மற்றும் அரசியல் உறுதியும் போற்றத்தக்கது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் தேசம் முழுவதற்கும் பொருந்தும் என்று கருதியிருந்த வேளையில், தேசப்பிரிவினைக்கு பிறகு பாகிஸ்தானின் அத்துமீறல்கள் காரணமாக 370வது சட்டப்பிரிவு தற்காலிமாக அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது. பின்னர் இந்த 370வது சட்டப்பிரிவை காரணம் காட்டி, நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு சட்டங்களில் இருந்து, ஜம்மு காஷ்மீருக்கு விலக்கு அளிக்கப்பட்டது அல்லது திருத்தியமைக்கப்பட்டது. 35A சட்டப்பிரிவு குடியரசு தலைவர் ஒப்புதலின் பேரில் நுழைக்கப்பட்டது, இதுவே பிரிவினைவாதத்திற்கு வழி வகுத்துவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் பட்டியல் இனத்தவர், பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், கூர்க்கா, பெண்கள், துப்புரவு தொழிலாளர்கள், மேற்கு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் உள்ளிட்டோர் பெரும் பாகுபாட்டிற்கு உள்ளார்கள். ஜம்மு, லடாக் பிரதேசங்களுக்கு, சட்டமன்றத்தில் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை மற்றும் நிதி ஒதுக்கப்படுவதிலும் பாகுபாட்டை சந்தித்தன. இது போன்ற தவறான கொள்கைகளால், மாநிலத்தில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் அதிகரித்து, தேசிய சக்திகள் புறக்கணிக்கப்பட்டன.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளால்அரசியலமைப்பு சட்டத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கும் என்று ABKM நம்புகிறது. ஒரே தேசம், ஒரே மக்கள் எனும் தத்துவத்தை ஒட்டியும், நமது அரசியலமைப்பை எழுதிய அறிஞர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இது உள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பின் மூலம் அனைத்து தரப்பினருரின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் தோன்றியுள்ளதாக ABKM கருதுகிறது. லடாக் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும் இந்த மறுசீரமைப்பு மூலம் நிறைவேறியுள்ளது. அங்கிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பும் விரைவில் நிறைவேறும் என்று ABKM நம்புகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹிந்துக்களின் பாதுகாப்பிற்கும், வாழ்வாதாரத்திற்கு அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் மஹாராஜா ஹரிசிங் கையொப்பம் இட்டுள்ளார் என்பது வரலாற்று உண்மை. 370 சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து பிரஜா பரிஷத் ஆந்தோலன் சத்யாகிரகிகளும் மற்றும் பல தேசிய சக்திகளும் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜீ மற்றும் பண்டித பிரேம் நாத் டோக்ரா தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டை காக்கவும், நமது தேசிய கொடியின் மாண்பை காக்கவும் போராடினார்கள். கடந்த 70 ஆண்டுகளில், ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள எண்ணற்ற தேசிய சக்திகள் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடி வந்துள்ளார்கள், பலர் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் நாட்டின் ஒற்றுமையை காக்க, வீரத்துடன் போராடியுள்ளார்கள், பலர் உயிர்தியாகம் செய்துள்ளார்கள். இவர்கள் அனைவர்க்கும் ABKM தனது நன்றியை காணிக்கையாக்குகிறது.
இந்த நாட்டில் உள்ள குடிமகன்கள் அனைவரும் தங்கள் அரசியல் வேறுபாட்டை மறந்து நமது அரசியலமைப்பு சட்டத்தின் மாண்பு மற்றும் சிறப்பை காக்கவும், தேச ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையிலும் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை நல்கிட ABKM கேட்டுக்கொள்கிறது. அங்குள்ள மக்களின் மனதில் உள்ள சந்தேகங்களை போக்கி, அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, சிறந்த நிர்வாகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யுமாறு அரசை ABKM கேட்டுக்கொள்கிறது.
0 Comments