எழுச்சி பெறுவது என்பது தொடர் நடவடிக்கை: டாக்டர் அனிருத் தேஷ்பாண்டே

"எழுச்சிமிகு பாரதம் - இன்றைய செயல்பாட்டை சார்ந்து எதிர்காலம்” என்ற தலைப்பில், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி சென்னையில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், ஐடி மிலன் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 500 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். அகில பாரத சம்பர்க ப்ரமுக் டாக்டர். அனிருத் தேஷ்பாண்டேஜி, மஹாநகர் சங்கசாலக் திரு.சந்திரசேகர்ஜி, ஸோகோ இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு. ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். 

துவக்க பாடலை திரு.ராம் பிரசாத் பாடினார். ஐடி மிலன் பொறுப்பாளர் திரு. பிரசாத வரவேற்புரையாற்றினார். அப்போது, இந்த நிகழ்ச்சி குறித்து டுவிட்டரில் சிலர் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் நிகழ்ச்சிக்கான இடத்தை அளித்த ராமானுஜம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைவர் திரு.ஜகன்னாதனுக்கும், நிகழ்ச்சியில் உறுதியுடன் பங்கேற்ற டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.கோபால் ஸ்ரீனிவாசன், திரு.ஸ்ரீதர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். 

தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தி தனது உரையைத் தொடங்கிய ஸோகோ நிறுவனத்தின் தலைவர் திரு.ஸ்ரீதர்ஜி, தமிழ் வழியில் பயின்று தான் வளர்ந்த விதத்தைக் குறிப்பிட்டார். சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தனது அனுபவத்தைப் பகிர்ந்த அவர், அந்த நாடுகள் தொழில்நுட்பத்தில் வளர்ந்தாலும் தங்களது பாடத்திட்டங்களில் தாய்மொழியையே பிரதானமாக வைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். 

உலகத்துக்கு பொருளாதார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் இந்தியா வழிகாட்டும் என்ற ஸ்ரீதர்ஜி, வரும் 2024-இல் இந்தியா இளைஞர்கள் அதிகமாக வாழும் நாடாக இருக்கப் போவதாகக் குறிப்பிட்டார். பொருளாதாரம் என்பது வெறும் ஜிடிபி அல்ல என்றும், அது கலாசார, சமூக வாழ்வியலை உள்ளடக்கிய முழுமையான சிந்தனை என்றார். 

அடுத்து, மானனீய ஸ்ரீ. டாக்டர் அனிருத் தேஷ்பாண்டே சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், சுதேசி பற்றிய காந்திஜியின் வார்த்தைகளைக் குறிப்பிட்டார். ஒரு பொருளை முதலில் நம் சுற்றுப்புறங்களில், பிறகு உள்நாட்டில், பிறகு சர்வதேச சந்தைகளில் தேடுவதே சுதேசி அணுகுமுறை என்றார். எழுச்சி என்பது தொடர் நடவடிக்கை என்றும், அது ஒரு தேசமானது படிப்படியாக வளருவதைக் குறிப்பிடுவதாகவும் கூறினார். 

பாரதம் என்ற வார்த்தை நமது தேசிய பெருமிதம் என்று குறிப்பிட்ட அவர், நமது வளர்ச்சியானது பொருளியல் முன்னேற்றம் மட்டுமல்லாது, ஆன்மிக முன்னேற்றமும் உள்ளடக்கியது என்றார். 

ஊரகப் பகுதிகளில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் நகர்வதற்கு கவலை தெரிவித்த டாக்டர் அனிருத்ஜி, மகாராஷ்டிரத்தில் மட்டும் 18 சதவீத மக்கள் ஆண்டுதோறும் நகர்ப்புறங்களுக்கு நகர்வதாகவும், ஆனால் நாட்டின் 65 சதவீத மக்கள் இன்னும் ஊரகப் பகுதிகளில் வாழ்வதாகத் தெரிவித்தார். சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி நிகழும் இக்காலகட்டத்திலும் நமது பொருளாதாரம் வளர்ந்து வருவதாகவும் சுய நம்பிக்கையும், விவசாயமும் நமது பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்கள் என்று குறிப்பிட்டார். 

அடுத்து, நம் நாடு எழுச்சி பெறுவதில் உள்ள சவால்களைக் குறித்து அவர் விவாதித்தார். எழுச்சி என்பது நமது நாட்டின் அடையாளங்களை அழிப்பதாகக் கருதப்படுவதாகவும் ஆனால் அடையாளங்களை குற்றம்சாட்டக் கூடாது என்றும் அவற்றின் மூலம் கிளம்பும் பிரிவினைவாதங்களைத் தான் கண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இத்தகைய பிரிவினைவாதத்தால் சமூகத்தில் சகிப்பின்மை ஏற்படுவதாகக் கூறினார். இந்தியாவில் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முக்கியத்துவம் இருப்பதாகவும், ஆனால் தற்போது பெண்கள் மீதான வன்முறைகளால் கவலை ஏற்படுவதாகவும் கூறிய அவர், அந்த வன்முறைகளைக் களையும் விதமாக நமது பாடத்திட்டங்களில் பண்புப் பதிவை உண்டாக்க வேண்டியது அவசியம் என்றார். 

முடிவில், திரு.சுதர்ஸன் நன்றி கூறினார். ஐடி மிலன் ஸ்வயம்சேவகர் திரு. சர்வோத்தமனின் சாந்தி மந்திரத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Post a Comment

0 Comments