SETU-26

எல்லைவாசிகளுக்கு இதம் தரும் சேவை
குவாஹாட்டி (அசாம்), ஜனவரி 12
பாரத நாடு முழுதும் 77,000 ஏகல் வித்யாலயா பள்ளிகள் நடைபெறுகின்றன. வனவாசி (பழங்குடி) மக்களை கருத்தில் கொண்டு நடைபெறும் ஓராசிரியர் கல்வி மையங்கள் இவை. வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், திரிபுரா, மேகாலயா இவற்றில் மட்டும் 4,500ஏகல் வித்யாலயா பள்ளிகள் நடக்கின்றன. இந்த ஆண்டு இதை 7,500 பள்ளிகள் ஆக்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்தப் பள்ளிகளுக்கு தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சீனா, மியான்மர், பங்களாதேஷ், பூட்டான் எல்லையை ஒட்டிய குக்கிராமங்களில் ஏகல் வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஸ்ரீ ஹரி சத்சங் சமிதி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

மதமாற்ற நாற்றங்கால்களா சிறார் இல்லங்கள்?
கன்ஜம் (ஒடிசா), ஜனவரி 12

ஒடிசாவின் கன்ஜம் மாவட்டம் பிரம்மபூரில் நடந்த இரண்டு சிறார் காப்பகங்களை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சோதனையிடப்பட்ட போது அது சட்டவிரோதமாக செயல்படும் விபரம் தெரியவந்தது. நகரின் விஜய் விகார் பகுதியில் இருந்த ’பிளஸ்ஸிங் ஃபார் பாய்ஸ்’ என்ற பெயரிலான அந்த காப்பகத்தில் இருந்து 34 சிறார்கள் மீட்கப்பட்டார்கள். அவர்கள் சிறுவர் நல குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள், அதன் பிறகு பெற்றோரிடம் அனுப்பப்பட்டார்கள் என்று மாவட்ட சிறார் பாதுகாப்பு அலுவலர் சுபோத் சடங்கி தெரிவித்தார். அந்த அலுவலர் குழு கொடசிங்கி பகுதியில் இருந்த ’கிரேஸ் சிறுவர் இல்லம்’ என்ற அமைப்பையும் சோதனை இட்டது. அங்கும் சிறார்கள் மீட்கப்பட்டார்கள். குற்றம் புரிந்தவர்கள் மீது விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. முன்னதாக சத்தர்பூரிலும் பிரம்மபூரிலும் 6 சிறார் இல்லங்கள் சோதனையிடப்பட்டு அவற்றில் மூன்று சீலிடப்பட்டன. தற்போது பிரம்மபூரில் நடக்கும் மற்ற 6 சிறார் இல்லங்களை 3 மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தின் பல மாவட்டங்கள் மதமாற்றத்திற்கு இலக்கான செய்தி புதிது அல்ல.

கோமாதாவால் சுபிட்சம்: யோகியார் பிள்ளையார் சுழி!
லக்னோ (உத்தரப் பிரதேசம்), ஜனவரி 12

பசு பாதுகாப்பில் ஆர்வம் உள்ள மாநில அரசு என்ன செய்யும்? உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்து வருவது போல செய்யும். கேட்பார் இல்லாமல் தெருவில் சுற்றித் திரியும் பசுக்களை ஒரு இடத்தில் வைத்து பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டமும் பசு காப்பகம் அமைக்க வேண்டும் என்றும் இந்த காப்பகங்களை பெருவர்த்தக நிறுவனங்கள் (கார்ப்பரேட்) தங்கள் சமுதாய பொறுப்பு நிதி (CSR) யிலிருந்து பராமரிக்க சாத்தியக்கூறுகளை ஆராயவேண்டும் என்றும் மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்ட மாஜிஸ்திரேட்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்ல எம்எல்ஏ, எம்பி தொகுதி நிதி பெற்று உள்ளாட்சி அமைப்புகள் 100 நாள் வேலை வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் காப்பகங்களை கட்டித் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இத்தகைய ஒவ்வொரு தற்காலிக பசு காப்பகமும் ஆயிரம் பசுக்களை பராமரிக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்று உத்தரபிரதேச அரசு ஆணை தெரிவிக்கிறது. காப்பக பசுக்களின் சாணம், சிறுநீர் உபயோகித்து பயோ-கேஸ் உற்பத்தி ஆலைகளை நிறுவி பயன்பெற தொழிலதிபர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அந்த அரசாணை கூறுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் காப்பகங்கள் சொந்தக் காலில் நின்று செயல்பட முடியும் என்று விளக்கப்பட்டது.2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு கோடி கால்நடைகள் உள்ளன. ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட இந்த அரசாணை ஜனவரி 10ஆம் தேதிக்குள் சுற்றித் திரியும் கால்நடைகள் எல்லாம் காப்பகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மசூலிப்பட்டினம் ஆகிறதா நெல்லூர்?
நெல்லூர் (ஆந்திர பிரதேசம்), ஜனவரி 12

ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாநகரை தொட்டபடி பாய்வது பெண்ணை நதி. அதன் ஒரு புறமாக அமைந்துள்ளது ’ஸ்வர்ணாலா சேர்வு’ என்று அழைக்கப்படும் பெரியதொரு ஏரி. அதன் கரையில் பல பழமையான அம்மன் கோவில்களும் விநாயகர் ஆலயமும் அமைந்துள்ளன. கடந்த நவம்பரில் ஏரியை ஒட்டி சாலை விவாக்கப் பணி நடந்த போது பெரியதொரு லிங்கம் கிடைத்தது. எனவே மக்கள் ஹைதராபாத் நகரின் நடுவில் புத்தர் சிலை இருப்பது போல இந்த பெரிய லிங்கத்தை அந்த ஏரியின் மையத்தில் அமைத்து சிறப்பிக்க ஆசைப்பட்டார்கள். பொதுப்பணித்துறை அமைச்சர் நாராயணன் இந்த யோசனைக்கு ஆதரவாக ஏரியை மேம்படுத்துவதற்கும் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டுவதற்கும் என இருபது கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். இதற்கிடையில் ஏரிக்கு அருகில் இருந்த ஒரு தர்காவை சேர்ந்தவர்கள் சிவலிங்க பிரதிஷ்டை திட்டத்தை எதிர்த்தார்கள். டிசம்பர் 7 அன்று ஏரியிலேயே பச்சைக் கொடியை நட்டு இது முஸ்லிம் பகுதி என்று அடாவடியாக சொந்தம் கொண்டாடத் தொடங்கினார்கள். நெல்லூர் மாநகராட்சி மேயர் அப்துல் அஜீஸ் இவர்களைத் தூண்டிவிடுவதாக உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். நெல்லூர் ஹிந்துக்கள் இந்த அடாவடியை அனுமதிப்பதாக இல்லை. ஏரிக்கு வகுப்புவாத சாயம் பூசும் முயற்சியை எதிர்த்து விஸ்வ ஹிந்து பரிஷத் ஒரு சில துறவிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. அந்த தர்கா கூட சிவன் கோயில் இருந்த இடத்தில் தான் அமைந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் ஆவணங்களைக் காட்டி தகவல் தெரிவிக்கிறார்கள். இதற்கிடையில் ஹிந்துக்களின் கோரிக்கையை புறக்கணித்த ஆந்திரப் பிரதேச அரசு வழங்குவதாக சொன்ன அந்த 20 கோடி ரூபாய் கிடையாது என்று கைவிரித்து விட்டது. மசூலிப்பட்டினத்தில் கோதாவரி ஆற்றின் படித்துறையை மதமாற்றும் பாதிரிகள் அடாவடியாக ஆக்கிரமித்ததை அடுத்து இப்போது நெல்லூர் ஏரியை ஆபத்து சூழ்கிறது.

Post a Comment

0 Comments