மஹாகவி பாரதி
மஹாகவி பாரதி ஒரு சகாப்தம். இதில் இருவேறு கருத்துகள் இல்லை முற்றிலும் உண்மை.
பாரதி ஒரு மஹாகவி இதுவும் நூற்றுக்கு நூறு உண்மை தான்.
ஆனால் மஹாகவி என்றவுடன் கவிதைகள் பல புரிந்தவன் என்ற எண்ணம் மட்டுமே தொன்றுவது
இயற்கை. பாரதி ஒரு கவி மட்டும் அல்ல. பற்பல கவிதைகளை எழுதியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை.
பல கட்டுரைகள், கவிதைகள், பல கதைகள், பல கேலிச்சித்திரங்கள், பல செய்தி தொகுப்புகள்
என அவரது எழுத்துகள் பயணித்து உள்ளன.
சரியாகக் கூறபோனால் அவரது எழுத்துகளில் 30% மட்டுமே கவிதைகள்
மீதி 70% கதைகள், கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள், செய்தி குறிப்புகள்.
பாரதி தொடாத விஷயங்களே இல்லை
எனலாம். அவரது எழுத்துக்களில் தேசம், தெய்வம், தர்மம் என்ற அனைத்துக்
கூறுகளையும் காண முடியும்.
பாரதி வேதாந்தம், சித்தாந்தம்,
ஆன்மீகம் என பல துறைகளையும் பற்றி எழுதியுள்ளார்.
பாரதி ஒரு “சித்தன்”. ஆம்! அவனது சுயசரிதையின் இரண்டாம் பகுதியான “பாரதி
அறுபத்தாறு” என்ற பாடல்களில் துவக்கத்திலேயே அவன் இவ்வாறு
கூறுகிறான் “எனக்கு முன்னே சித்தர் பலர் வந்தார் அப்பா! யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்நாட்டில்”
மகாகவி, கட்டுரையாளன்,
கதைகள் புனைந்தவன், கேலிச்சித்திரக்காரன், யோகி, சித்தன், தேச பக்தன், சக்திதாசன் என பன்முகத்தன்மை படைத்த பாரதி பிறந்தது திருநெல்வேலிச்
சீமையில் எட்டையபுரத்தில் சித்திரபானு ஆண்டு கார்த்திகை
மாதம் 27ஆம் நாளன்று, அதாவது 11 டிசம்பர் 1882.
தந்தை ஸ்ரீ சின்னசாமி ஐயர் தாய் ஸ்ரீமதி
லக்ஷ்மி அம்மாள் பிறந்தபோது இடப்பட்ட பெயர் “சுப்ரமணியன்”, செல்லப் பெயர் “சுப்பையா”.
சுப்பையா சிறு வயதிலேயே கவிபாடும்
தன்மை பெற்றிருந்தான். நாடி எடுத்துக் கொடுத்தால் அதன் அடிப்படையில் கவி புனைந்து விடுவான்.
இவன் பிறந்த ஊரான எட்டையபுரம் ஒரு ஜமீன். அதன் அரசரின் அவையில் தமிழ்
புலவர்கள் கூடுவது வழக்கம். இந்தப் புலவர்கள் கூடும் அவையில் சுப்பையா சிறுவனாக இருந்த போதிலும் கலந்து கொள்வான். எட்டையபுரம் சமஸ்தான அரசரின் செல்லப்பிள்ளையாகவும் கருதப்பட்டான்.
சுப்பையாவின் வயது 11 அப்போதே ஸ்ரீ குருகுஹ தாமப் பிள்ளை என்பவரால் எட்டயபுரம் அரசரின் தமிழ் புலவர்கள் கூடுதலில் பங்கு கொள்ளும் ஸ்ரீ சிவ
ஞான யோகி என்பவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டான். சுப்பையாவின்
கவிபாடும் திறனைச் சோதித்த ஸ்ரீ சிவ ஞானயோகியார் எட்டையபுர அரசவையில், அரசர்
முன்னிலையில் சுப்பையாவுக்கு “பாரதி“
என்ற பட்டத்தை முன்மொழிய, அரசரும், அவைப் புலவர்களும் இதனை வழிமொழிந்தார்கள். இது
நிகழ்ந்தது 1893ம் ஆண்டு, அன்று முதல்
சுப்பையா ஸ்ரீ சுப்ரமணிய பாரதி என அழைக்கப்பட்டான்.
பாரதி பட்டம் பெற்ற சுப்பிரமணியன்
தனது இளமைக் காலத்தைப் பற்றி தனது
சுயசரிதையில் கூறும்போது ஆங்கில கல்வியால் தமக்கு எந்தப் பெரும் நன்மையும் உண்டாகவில்லை என தெரிவித்துள்ளான்.
தான் கற்ற ஆங்கில கல்வி, “புல்லை உண்க
என வாளறிச் சேயினை பணித்தது போல இருந்தது” என்றும் “ஊன் விலை வாணிபம் நல்லது என்று ஒரு பார்ப்பனப் பிள்ளையை ஈடுபடுத்துவது
போல் இருந்தது” என்றும் “செலவு
தந்தைக்கு ஓராயிரம் தீது எனக்கு பல்லாயிரம் வந்தன” என்றும்
கூறியுள்ளான்.
சுப்பையாவின் பள்ளிப் பருவத்தில்
இவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ்ப் புலவர் ஸ்ரீ காந்திமதி நாதப் பிள்ளை பாரதியிடம் “பாரதி ஒரு
சின்னப்பயல்” என்று ஈற்றடி அமைத்து ஒரு வெண்பா
பாட சொன்னார். பாரதி பாடினார் “நான் வயதில் இளையவன், தான் பெரியவன் என்ற அகந்தை கொண்டவன் என்னை இகழ்ந்து ஏளனம் செய்கிறார்” என்று உணர்ந்த பாரதி – “மாண்பற்ற காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி
நாதனைப் பாரதி சின்னப் பயல்” என காந்திமதி நாதனைப் பற்றி (பார்+அதி = பாரதி), அதி சின்னப் பயல் என பொருள்படும்படி பாடினார்.
பாரதி வயது 15, 1897ஆம் ஆண்டு பாரதிக்கும் ஏழு வயதான செல்லம்மாவும் திருமணம். திருமண நிகழ்ச்சிகள் முடிந்த உடன் பாரதி
– கவித்திறன் படைத்த பாரதி - தனது மனைவியை பார்த்து “ஒரு காதல்
பாட்டு பாடு செல்லம்மா” என்றதும் வெட்கத்தால் மனம் குன்றிவிட்டாள்.
பிரிதொரு நாளில் பாரதியின்
மறைவுக்குப் பிறகு ஆல் இந்திய ரேடியோவில் “என் கணவர்” என்ற தலைப்பில் பாரதியின்
மனைவி செல்லம்மாள் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது “எனக்கு
ஒரு சாதாரண கணவர் எல்லோருக்கும் கிடைத்தது போன்ற ஒரு கணவர்
கிடைக்கவில்லை, என்ற ஏக்கம் கொண்டேன்!
ஆனால் அவருடன் வாழத் தொடங்கிய சில ஆண்டுகளில், யாருக்கும் கிடைக்கப்பெறாத ஒரு மஹா புருஷர் எனது கணவராக கிடைத்தது புரிந்துக்கொண்டேன் என்றார்.
திருமணத்திற்குப் பின் தன் தந்தையை
16 வயதில் இழந்த
பாரதி, மேற்படிப்புக்காக காசி சென்று,
அங்கு தன் அத்தையின் வீட்டில் தங்கி படித்தார். அப்போது
அவருக்கு அன்னிபெசன்ட் அம்மையார், பண்டிட் எஸ் நாராயண அய்யங்கார்
ஆகியவர்களுடன் ஏற்பட்டத் தொடர்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
பாரதியின் மனதில் பல மாற்றங்கள், தேசிய உணர்வுகள் ஏற்பட
வழிவகுத்தது.
காசியிலிருந்து எட்டயபுரம்
திரும்பி பாரதியை எட்டையபுரம் சமஸ்தானத்தில் சிலகாலம் பணி புரிந்தார். பின்னர் மதுரை சேதுபதி
உயர்நிலைப் பள்ளியில் தாற்காலிக உதவித்
தமிழ் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து
சுதேசமித்திரன் தினசரியின் துணை ஆசிரியராக சென்னையில் ஒரு பொறுப்பேற்றுக்கொண்டார். 1906 இல் தொடங்கப்பட்ட (வங்கப்
பிரிவினைக்குப் பிறகு) சுதேசி இயக்கத்தில் பாரதி தன்னை இணைத்துக்
கொண்டதும், ஆங்கிலேயர்களின் கழுகு பார்வை பாரதி மீது
விழுந்தது. ஆங்கிலேயர்கள் பாரதிக்குப் பல இடர்களையும், கொடுமைகளையும் இழைக்கத் தொடங்கினர்.
பாரதியின் வாழ்வில் “பாரத விடுதலை மோகம்” கொழுந்து விட்டு எரிய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் பட்டணம் ஸ்ரீ
ஜி.சுப்ரமணிய அய்யர் இவர் ஒரு சுதேசி அபிமானி,
தேசியவாதி, இவர் துவங்கியது தான் தி
இந்து ஆங்கில நாளேடு. தமிழில் சுதேசமித்திரனையும் இவர்தான்
துவக்கினார். இவரது நட்பில் வளர்ந்த பாரதி மிகச் சிறந்த தேசபக்தராக, சுதேசி அபிமானியாக மாறியதில் வியப்பொன்றுமில்லை.
பாரத நாட்டின் வரலாறு, பெருமை இவை அழிந்து
விடக்கூடாது. “பொய்யாய், பழங்கதையாய், கனவாய்” ஆகிவிட பாரதி விடவில்லை. எனது தாய்நாட்டின் “முன்னாள் பெருமையும் இந்நாள் சிறுமையும்” போன்ற பாடல்களை
எழுதி “இந்த நாடு பழம்பெரும் நாடு!
பாருக்கெல்லாம் திலகம்” என்பதனை உணர்த்தினார் பாரதி.
இந்த நாட்டின் இளைஞர்கள் துடித்தெழ வேண்டும் என்ற ஆசையில், “சிவாஜி தனது சைனியத்தாருக்கு
கூறியது போன்ற பாடல்களை எழுதி எழுச்சி ஊட்டினார் பாரதி. இந்தப்
பாடலில் ஒவ்வொரு வரியும் எழுச்சி கொண்டவை,
பாரத பூமி பழம்பெரும் பூமி
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
பாரத நாடு பார்க்கெலாம் தெய்வம்
எனத் தாய் நாட்டுப்பற்றை
ஊட்டும் பாரதி கூறுகிறான், “வீரரைப்
பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி
என்று உரைத்தது இந்நாடு” என இடித்துரைக்கிறார் இந்த மஹாகவி.
கொல்கத்தாவில் ஒரு காங்கிரஸ் தொண்டரின் பண்ணை வீட்டில் நடந்த விருந்து உபச்சாரத்தில்
கலந்துகொண்ட பாரதிக்கு அறிமுகம் ஆனார் விவேகானந்தரின் சீடர்
சகோதரி நிவேதிதை. (முன்னாளில் இவர்
மார்கரெட் எலிசபெத் நோபல் என்ற பெயர் பெற்றவர்). இவர் மூலம்
பெண் உரிமைகள் பற்றிய அறிந்து, பின்னர் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் பாரதி. விவேகானந்தரின்
சிஷ்ய ரத்தினங்களில் ஒருவர் என்றும், தனது குருமணி என்றும்
சகோதரி நிவேதிதாவை வர்ணித்தார் பாரதி.
“கற்பு நிலை என்று சொல்லுவார்கள் இரு சமூகத்திற்கும் பொதுவில்
வைப்போம்”, “ஆணுக்குப் பெண் தாழ்வே ஆமென்பார் சொல்லுக்கு நாணி உறங்கு நீ நகைத்து நீ
கண்ணுறங்கு”, “கண்கள் இரண்டிலனில் ஒன்றைக் குத்திக் காட்சிக்கெடுத்திடலாமா” என்றெல்லாம்
பாரதி பெண் சக்தியின் அவசியத்தைக் கூறிச் சென்றுள்ளார்.
பாரதி வேதங்கள் குறித்து, வேதாந்தங்கள் – சித்தாந்தங்கள்
குறித்து, ஹிந்தி மத சாரங்கள் குறித்து, தேசிய தன்மைகள் குறித்து, சங்கமாக (கூட்டாக)
செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து, எல்லாவற்றையும் அவரது கட்டுரைகளில் விளக்கமாக
கூறியுள்ளார்.
உபநிடதங்கள் குறித்து எழுதியுள்ள பாரதி, பகவத் கீதையை மொழிப்பெயர்த்துள்ளார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஸ்ரீ பக்கிம் சந்திரர் இயற்றியுள்ள “சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம்” எனத் தொடங்கும் “வந்தே மாதர” கீதத்திற்கு இரு மொழிப்பெயர்ப்புகளை பாரதி அளித்துள்ளார்.
மேற்குலத்தவர் எவர்? நல்ல பெருந்தவம் எது? புண்ணிய மூர்த்தி
என்பவன் யார்? யோகி என்பவன் யார்? எது யோகம்? எது யாகம்? எது மெய்ஞ்ஞானம்? முக்தி என்பது
என்ன? என்று இப்படிப் பல வினாக்களுக்கு பாரதி தனது பாடல்களில், கட்டுரைகளில் விளக்கம்
அளித்துள்ளார்.
பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் “தெய்வம் நீ என்று உணர்”,
“போர்த் தொழில் பழகு”, “ரௌத்திரம் பழகு”, “வேதம் புதுமை செய்”. “வையத் தலைமை கொள்”,
முழுமையும் படித்துணர்வது அவசியம்.
இவரது “பாஞ்சாலி சபதம்” அடிமையுற்றிருந்த பாரத தேவியின்
சபதம் என்ற உணர்வை ஊட்டுகிறது. இவரது ஆழ் சிந்தனைகளுக்கு அணை ஏது? தடை ஏது?
பாரதியை – நம் பன்முக பாரதியை – புரிந்துகொள்ள ஒரு ஆயுள்
போதாது என்பதை உணர்வோம். அவர் வழி பயணிப்போம்.
1 Comments
Mahakavi Bharathi the greatest poet and freedom fighter. People like him will never born again.
ReplyDelete