RSS-ABPS -மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் ஜிகாதி நடவடிக்கைகள் – தேச நலனுக்கு ஆபத்து.



ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (RSS) - தமிழ்நாடு
அகில பாரத பிரதிநிதி சபா - கோயமுத்தூர் (19-21 மார்ச் 2017)

தீர்மானம்:
மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் ஜிகாதி நடவடிக்கைகள் – தேச நலனுக்கு ஆபத்து.
       மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்துவருகிற ஜிகாதி வன்முறைகளைப் பற்றி இப்பிரதிநிதி சபா ஆழ்ந்த கவலையுடன் பரிசீலித்தது.  முஸ்லீம் வாக்குவங்கியை மனதில் கொண்டு அம்மாநில அரசே தேசவிரரோத சக்திகளை ஊக்கப்படுத்தி வருகிறது.  இதன் காரணமாக அம்மாநிலத்தில் ஹிந்து மக்கள் தொகை குறைந்து வருகிறது.
       வங்கதேசத்தின் எல்லைக்கருகில் இருக்கின்ற காலியாசக் (மால்டா மாவட்டம்) என்னுமிடத்தில் உள்ள காவல் நிலையத்தின் மீது ஜிகாதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி கொள்ளையடித்ததுடன் தீ வைத்து கொளுத்தியதில் அங்கிருந்த குற்றச்செயல்கள் பற்றிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன.  இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நமது பாதுகாப்பு படையினர் மீதும் நடத்தப்பட்டு வருகிறது.  இவைகள் தேசிய பாதுகாப்பிற்கும் சட்ட ஒழுங்கிற்கும் மிகப்பெரும் சவாலாக இருந்துவருகிறது. இஸ்லாமியபயங்கரவாத மௌலவிகள் அவ்வப்பொழுது வன்முறைகளை தூண்டும் விதமாக பத்வா கட்டளைகளை அறிவித்து வருகின்றனர். இதன் காரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பல இடங்களில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது.  கத்வா, காளிகிராம், ஈலம்பஜார் மற்றும் மெய்தியாபுருஜ் (கொல்கத்தா) ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறை தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கது.   இந்த ஜிகாதி அடிப்படைவாதிகள் கொடுக்கும் அழுத்தத்தினால் எல்லையை ஒட்டி வசித்து வருகின்ற கிராமங்களில் இருந்து ஹிந்துக்கள் வெளியேறி வருகின்றனர்.
       கள்ளநோட்டு கடத்தல் மற்றும் பசு இனங்கள் கடத்தல், மேலும் சட்டவிரோத ஊடுருவல்களை        ஜிகாதியினர் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.  பர்துவான் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி விசாரணை செய்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) எல்லையின் இருபுறங்களிலும் ஏராளமான ஜிகாதி அடிப்படைவாத குழுக்கள் ஒரு சங்கிலித் தொடர்போல் கட்டமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருவதை கண்டறிந்துள்ளனர்.
       ஜிகாதி தீவிரவாதிகள் திட்டமிட்ட ரீதியில் கலவரத்தை தூண்டிவிடுகின்றனர்.  அவர்களுக்கு மந்திரி சபையில் இடமும் மேலும் சில முக்கியமான அரசியல் மற்றும் அரசு பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அதே நேரத்தில் மாநில அரசானது ஹிந்துக்கள் தங்களது மத சம்மந்தமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.  அண்மையில், சில மாதங்களுக்கு முன்பு முஹரம் பண்டிகையை காரணமாகச் சொல்லி துர்கா தேவி சிலையை கரைக்கின்ற நிகழ்ச்சியை தடைசெய்தது.  ஆனால், மேற்கு வங்க அரசின் இம்முடிவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.
       பல குண்டுவெடிப்பு சம்பவங்கள், கலவரம், வன்முறை மற்றும் பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.  இந்த கொடுமைகளின் காரணமாக ஹிந்து சமுதாயம் குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஜுரான்பூர், வைஷ்ணவ நகர், கரக்பூர் மற்றும் மல்லர்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
         கடந்த ஆண்டு நடைபெற்ற துர்கா பூஜை விழாவின் போது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பதினேழு வயது மாணவி மீது திராவகம் வீசப்பட்டதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.  கடந்த 2016-ம் ஆண்டு தௌலாகத் என்னுமிடத்தில் கடந்த டிசம்பர் மாதம் 13-14 ஆகிய இரண்டு நாட்கள் ஹிந்துக்கள் மீது திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் ஹிந்துக்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டது, கொள்ளையடிக்கப்பட்டது.  மேலும், ஹிந்து பெண்களை மானபங்கபடுத்தியது போன்ற கொடூரமான சம்பவங்கள் நடந்துள்ளன.  இந்த வன்முறை வெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசு உண்மைகளை முழுமையாக மூடிமறைத்ததுடன். அங்கு நடைபெற்ற கொடூரமான செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நடுநிலையான பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது.
       மேற்கு வங்க மாநில அரசானது தேச பக்தியை புகட்டிவருகின்ற பள்ளிகளை தடைச்செய்யப் போவதாக மிரட்டி வருகிறது.  ஆனால், அடிப்படைவாத வெறுப்புணர்வுக் கருத்துக்களை புகட்டி வருகின்ற சிமூலியா மதரஸா போன்ற ஆயிரக்கணக்கான மதரஸாக்களை கண்ணை மூடிக்கொண்டு மாநில அரசு ஆதரித்து வருகிறது. ஜிகாதி அடிப்படைவாதிகளின் வற்புறுத்தலால் பாடப்புத்தகங்களில் உள்ள உண்மையான வங்க மொழி வார்த்தைகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக மேற்கு வங்க பள்ளிகளில் நடைபெற்று வந்த சரஸ்வதி பூஜை விழாக்கள் நடத்துவதற்கு எண்ணற்ற இடையூறுகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.  அதே நேரத்தில் அரசுப் பள்ளிகள் இஸ்லாமிய மயமாவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.  கடந்த வருடம் பள்ளிகளில் மிலாடி நபி விழா கொண்டாட வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டதே இதற்கு சாட்சி.  கொல்கத்தாவில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெஹட்டா என்னுமிடத்தில் செயல்பட்டு வருகிற பள்ளி நிர்வாகம் மிலாடி நபி விழாவை கடைபிடிக்க மறுத்த காரணத்தினால் அங்கு படித்துவந்த 1750 மாணவ மாணவிகளை ஜிகாதி தீவிரவாதிகள் சிறைபிடித்ததுடன் பள்ளியின் உள்ளே சென்று தங்களுடைய கொடியை ஏற்றி ஆசிரியைகளை வகுப்பறையில் வைத்து பூட்டினர்.  இதன் விளைவாக அப்பள்ளி ஒரு மாதத்திற்கு மேல் மூடப்பட்டிருந்தது.      
       தேசப் பிரிவினையின் போது (1947) ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த பகுதிகள் மேற்கு வங்கத்திற்குள் வந்தன.  அதன்பிறகு, கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) ஹிந்துக்கள் மீது தொடர்ந்து படுகொலைகள், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.  இதனால், அங்கிருந்து உயிர் தப்பி வந்த ஹிந்துக்கள் மேற்கு வங்கத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.  கிழக்கு பாகிஸ்தானில் (பங்களாதேஷ்) இருந்து மேற்கு வங்கத்திற்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் ஹிந்துக்கள் வந்து குடியேறிய பிறகும் கூட அம்மாநிலத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை சரிந்து வருவது மிக ஆச்சரியமாக உள்ளது.  1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி மேற்கு வங்கத்தில் 78.45%-ஆக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டில் 70.54%-ஆக குறைந்துள்ளது.  இது நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு மிகவும் கவலை தரும் நிகழ்வாகும்.
       தீவிரவாதிகளின் வன்செயல்களையும் இஸ்லாமியர்களை தாஜா செய்கின்ற கொள்கையையும் கடைபிடித்து வருகிற மேற்கு வங்க அரசினை ஆர்.எஸ்.எஸ்-ன் அகில பாரத பிரதிநிதி சபா கண்டனம் செய்கிறது. மேற்கு வங்க அரசு கடைபிடித்து வருகிற ஒருதலைப்பட்சமான மதச்சார்பு கொள்கைகளையும், ஜிகாதி பயங்கரவாதிகள் நடத்திவருகின்ற வன்செயல்கள் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி பொதுமக்களை ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதி சபா கேட்டுக்கொள்கிறது.   மேற்கு வங்கத்தில் நிலவி வருகிற மிக மோசமான சூழ்நிலைகளைப் பற்றிய உண்மையான செய்திகளை ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு துணிச்சலுடன் எடுத்துரைக்க முன்வரவேண்டும் என இப்பிரநிதி சபா கேட்டுக்கொள்கிறது.  மேற்கு வங்க மாநில அரசு கீழ்தரமான வாங்கு வங்கி அரசியலை விட்டுவிட்டு அரசியலமைப்பு வலியுறுத்துகிற கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என இப்பிரதிநிதி சபா கேட்டுக்கொள்கிறது.  தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேசவிரோத ஜிகாதியினர் மீது உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை இப்பிரதிநிதி சபா கேட்டுகொள்கிறது.
-----

Post a Comment

0 Comments