காமராஜரின் தமிழகம் தேசியத்தின் பக்கமே!


*செயல்வீரர்* :*

கார் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. திடுமென காரை மறித்தாற்போல் மக்கள் கூட்டம்.. காரிலிருந்து இறங்குகிறார் உயரமான ஒருவர். காரை மறித்த காரணம் கேட்கிறார். தங்கள் கிராமத்தில் மின்சாரம் இல்லாத குறையைக் கூறுகிறார்கள் மக்கள். உடன்வந்த அதிகாரியோ, "மின்கம்பங்கள் பற்றாக்குறையால் மின்சாரம் தரத் தாமதமாகிறது" என்கிறார். உடனே, "மின்கம்பத்திற்குப் பதில், பனை மரத்தை உபயோகித்து மின்வசதி செய்ய முடியுமா" என்று அம்மனிதர் கேட்க, "முடியும்"என்று அதிகாரி பதில் சொல்கிறார். உடனே அம்மனிதர் மக்களிடம் "வீட்டிற்கு ஒரு பனைமரம் தரமுடியுமா" என்று கேட்க அவர்களும் ஒத்துக்கொள்ள, சில நாட்களிலேயே காவல் கிணறு கிராமம் மின் வசதி பெறுகிறது. கர்மவீரர் காமராஜர் தான் அந்த மாமனிதர். அவரது சமயோசிதமும் செயல் திறனும் மிகப்படித்தவர்களையும் பணிவடையச் செய்யும்.

*அப்பழுக்கற்ற நேர்மை:*

அதே காலகட்டம். தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளே இல்லை என்ற நிலையில் ஜப்பானிய எந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் பெற ஜப்பானிய அதிகாரிகளை வரவழைத்து, 10 ஆலைகள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது ஜப்பானிய அதிகாரிகள், ஒரு ஆலைக்கு 10% வீதம் தள்ளுபடி தருவதாகவும், அதை, தலைவரோ, கட்சியோ எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூற பத்துக்குப்பத்து நூறு என்று கணக்குப்போட்ட காமராஜர், அதற்கு ஈடாக பதினொன்றாவது ஆலையையும் அமைக்கும்படி கேட்டுப்பெறுகிறார். அப்பழுக்கற்ற நேர்மையும் தூய வாழ்வும் இந்த பாரத ரத்தினத்தின் உடன்பிறந்த பண்பு.

*அன்னைக்கும் அதுவே:*

தம் பொது வாழ்வின் தூய்மைக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாதென்று, தம் அன்னையையும் கூடக் கிராமத்திலேயே குடிவைத்திருந்தார். தம் அன்னையின் செலவுக்கு, மாதம் 120 ரூபாய் மட்டுமே அனுப்பிவந்தார். அன்னையார் அதை 150 ரூபாயாக அனுப்பச்சொன்னபோதுகூட, "அனுப்பினால் உறவு வீடுகளுக்குச் செல்வார், அந்த வயதில் அது அவருக்கு நல்லதல்ல" என்று கூறிவிட்டார். அவரது அன்னைக்கு உதவியாக இருக்கும் என்று ஒரு கிராம அதிகாரி செய்துகொடுத்த தனி குடிதண்ணீர் இணைப்பைக்கூட கூடாதென்று அகற்றச்சொன்னவர். கேட்டதற்கு, கிராமத்தில் எல்லா மக்களுக்கும் தனி இணைப்பு கொடுப்பதில்லை என்பதைக் காரணம் காட்டிய பெருந்தகை அவர்.

*அரசியல் தூய்மை:*

பதவி ஆசை இல்லாதவர். தனக்கு முன்னர் தமிழக முதல்வர்களாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ராஜாஜி ஆகியவர்களை உருவாக்கியவர். காலத்தின் கட்டாயத்தினால், தானே அந்த நாற்காலியில் அமரவேண்டிய சூழ்நிலையில் யாரும் தன் வழிநடத்தலில் தலையிடக்கூடாது என்று கட்சியிடம் உத்திரவாதம் வாங்கிக்கொண்டு முதல்வரானவர்.

*எதிர்த்தவர்க்கு அமைச்சர் பதவி:*

தன்னை எதிர்த்தவர்களை எந்த முதல்வராவது எப்பொழுதாவது அமைச்சரவையில் சேர்த்ததாக சரித்திரமுண்டா?
காமராஜர், தன்னை எதிர்த்த சி.சுப்பிரமணியம் & எம்.பக்தவத்சலம், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியவர்களைத் தன் 8 பேர் கொண்ட அமைச்சரவையில் சேர்த்திருந்தார். தாழ்த்தப்பட்டவர் நலம் மற்றும் அறநிலைய துறைக்கும் அதில் ஒரு அமைச்சரை உருவாக்கியிருந்தார்.

*தமிழகத்தின் பொற்காலம்:*

மூன்றுமுறை முதல்வராக இருந்து, 9 வருடங்களே ஆட்சிசெய்த
காமராஜரின் ஆட்சிக்காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. 1954க்கும் 1963க்கும் இடைப்பட்ட 9 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. ஒரு யுகபுருஷனால் மட்டுமே முடியக்கூடியவை.

*விவசாய வளர்ச்சி:*

மணிமுத்தாறு, கீழ்பவானி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், கொடையார், ஆரணியாறு, ஆளியார், அமராவதி, குந்தா, கிருஷ்ணகிரி, பெரியாறு, சாத்தனூர், வைகை, வீடூர் பொன்ற நீர்த்தேக்கங்கள், நீர்மின் நிலையங்கள், அணைக்கட்டுகள் ஆகியவை அவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு தமிழகத்தில் விவசாயம் மேலோங்கியது. கிராமம் தோறும் மின்சார இணைப்புகள் கொடுக்கப்பட்டன. கிராமங்களை நகருடன் இணைக்கும் சாலைகள் போடப்பட்டன. நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. பாமரர், ஏழை எளியவர்களுக்கு உதவ எல்லா விதத்திலும் முயற்சிகள் மேற்கொண்டு ஏழைப்பங்காளராக விளங்கினார்.

அவருக்குப்பின் இன்றுவரை எந்தவொரு நீர்த்தேக்கமோ அணைக்கட்டுகளோ தமிழகத்தில் அமைக்கப்படவேயில்லை.

*தொழில்வளர்ச்சி* :

மத்திய அரசிடம் காமராஜர் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாக பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களும் பெரும் தொழிற்சாலைகளும் அவரது ஆட்சியின் போது தொடங்கப்பட்டன.
ஐ.ஸி.எப் ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலை, திருச்சி பி.எச்.இ.எல், மணலி ரிபைனரி, திருச்சி நவில்பட்டு துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி டாங்க் தொழிற்சாலை, சேலம் உருக்காலை, ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்டது. பல தொழிற்பேட்டைகள் ஏற்படுத்தி அவற்றில் தனியார் தொழில் தொடங்க இடம், மின்சாரம், வசதிவாய்ப்புகள் அனைத்தும் செய்துகொடுத்து தொழில்வளம் பெருகியது. அசோக் லேலண்ட், டி.ஐ.சைக்கிள், டி.வி.எஸ், லூகாஸ், சிம்ப்சன், இண்டியா பிஸ்டன்ஸ்
என்பீல்ட் போன்ற பெரிய தொழிற்சாலைகள் உருவாயின. சர்க்கரை ஆலைகள், நெசவு ஆலைகள், நூற்பு ஆலைகள், காகிதத் தொழிற்சாலைகள், கெமிகல் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள் என்று பல்வகைத்தொழிற்சாலைகளும் பாங்குற அமையப்பெற்றது தமிழகம்.

*கல்வி வளர்ச்சி:*

புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன. எந்த மாணவனும் கல்விக்காக 3 கிமீ தூரத்திற்கு மேல் நடக்கத் தேவையில்லாதபடி ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆரம்பப்பள்ளியும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு முது நிலைப்பள்ளியும், 11ஆம் வகுப்பு வரை இலவச கல்வியும் கட்டாயமாக்கப்பட்டன. கல்வித்தரத்தை உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பள்ளி வேலை நாள்கள் 180இலிருந்து 200ஆக உயர்த்தப்பட்டது. எல்லாத்திறமைகளையும் ஊக்குவிக்கும் வண்ணம் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி 7% இலிருந்து 37%க்கு உயர முக்கியக்காரணமாக அமைந்தது அவர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம். ஐ.ஐ.டி மெட்ராஸ் அமைய 1959இல் கவர்னர் பிஷ்ணுராம் மேதியுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொண்டார்.

பொது வாழ்வில் அவர் கடைப்பிடித்த நேர்மையும் தூய்மையும், நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்கு முழு முயற்சியுடன் பாடுபட்டுத் தன்னை முழுமையாக அர்ப்பணித்ததும் இன்றுவரை ராமராஜ்யத்திற்கு ஒப்பாகக் காமராஜரின் ஆட்சியை ஒவ்வொருவரும் நினைக்க வைத்திருக்கிறது.

*காமராஜ் திட்டம்:*

1963இல் அவர் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், தம் பதவிகளை உதறிவிட்டு கட்சியைப்பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமல்படுத்தும் விதமாகத் தம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அது காமராஜ் திட்டம் என்று பெயர் பெற்றது. அவருடன் 6 மத்திய மந்திரிகளும், 6 முதலமைச்சர்களும் (லால் பகதூர் சாஸ்திரி, ஜகஜீவன்ராம், மொரார்ஜி தேசாய், பிஜு பட்நாயக், எஸ்.கே.பாடீல் உட்பட) தத்தம் பதவிகளை உதறினர்.

*கிங் மேக்கர்:*

இதைத்தொடர்ந்து, அவரது சாதனைகள் மற்றும் சீரிய பண்புத்தகுதிகளை மதிக்கும் விதமாக அகில இந்திய காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
நேரு இறந்தவுடன் லால் பகதூர் சாஸ்திரியையும், சாஸ்திரி இறந்தபின் இந்திரா காந்தியையும் பிரதமராக்கினார்.
அதனால் 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்பட்டார்.

ஆயினும், நெருக்கடி நிலையை இந்திரா காந்தி 1975இல் அமல் செய்ததைக் கடுமையாக எதிர்த்தார்.

*பூர்வீகம்* :

காமராஜர் ஜூலை 15, 1903 அன்று மதுரை அருகே உள்ள விருதுநகரில் பிறந்தார்.
பெற்றோர்: குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள். 1909ஆம் ஆண்டு விருதுப்பட்டி உயர்கல்விப் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் அவரது தந்தையின் மறைவால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் சேர்ந்தார்.

16வயதில் காங்கிரசில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
1930 உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்டு கைது செய்யப்பட்டு, பின், காந்தி இர்வின் ஒப்பந்தம் மூலம் விடுதலையானார்.
1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சிக்காக கைது செய்யப்பட்டு, 3 ஆண்டு தண்டனை அடைந்தார்.
அவரது அரசியல் குரு திருவாளர் சத்தியமூர்த்தி. 1936இல் சத்தியமூர்த்தி அவர்கள் பிரதேச காங்கிரசின் தலைவரானபோது, காமராஜர் செயலாளர் ஆனார். அவர்கள் இருவரின் சேர்க்கை, தேர்தலில் பெரு வெற்றியைத் தந்தது.

*தவறு நிகழ்ந்தது:*

1967இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகரில் நின்று
ப. சீனிவாசன் என்ற ஒரு மாணவரால் அவர் தோற்கடிக்கப்பட்டது தமிழக மக்கள், இத்தகைய ஒரு தவப்புதல்வனுக்குச் செய்த மாபெரும் தவறு. அவர் செய்த அரும்பெரும் சாதனைகளைப் புறம் தள்ளி ஆக்கிரமிப்பு அரசியலும், அபகரிப்பு எண்ணங்களும் ஈடேற, அக்கிரமங்கள் பெருக வித்திட்ட அநியாய நிகழ்வு அது.

*சகாப்தம் நிறைவு* :

1975 அக்டோபர் 2 காந்தி ஜயந்தியன்று மதிய உறக்கத்துக்குப்பின் உயிர் நீத்தார்.
இறந்தபோது பையில் இருந்த 63 ரூபாய், 10 செட் கதர் உடைகள் தவிர வேறு வங்கிக்கணக்கோ, சொந்த வீடோ, சொத்துக்களோ சேர்க்காமல் வாழ் நாள் முழுதும் வாடகை வீட்டிலேயே வசித்துத் தம் வாழ்வையே தவமாகச்செய்த புனிதர் அவர்.

*மலையும் மடுவும்:*

அரசியலை சொந்த லாபத்திற்கு பயன்படுத்துதல், சொத்துக்குவிப்பு, அதற்காக எந்தவித அநியாயத்திற்கும் துணைபோதல், அரசியல் ஆதாயத்திற்காக தனது நாட்டின் பொருளாதாரத்தையும், இறையாண்மையையும் குலைக்கும் தீய அன்னிய சக்திகளுக்கு விலைபோதல் போன்ற அக்கிரமங்கள் நிறைவேறும் இன்னாள் அருவருப்பு அரசியலுக்கும் சுயலாபம் என்ற சொல்லையே தீங்காகக்கருதும் காமராஜ் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றதே. இனி நாம் காமராஜர் என்ற மலைச்சிகரத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டியதுதான்!


*பாரத ரத்னா:*

காமராஜர் இறந்த பின் 1976இல் அவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த மரியாதையான பாரத ரத்னா வழங்கப்பட்டது. சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள் நாட்டு முனையம் காமராஜர் பெயரால் அழைக்கப்படுகிறது. மதுரைப் பல்கலைக்கழகம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது.



Post a Comment

0 Comments