குளியல் சோப் செய்ய பன்னாட்டு கம்பெனி தான் வேணுமா?

நம் வீட்டில் ஒவ்வொருவரும் குளிப்பதற்கு, வெளி நாட்டு கம்பெனி வந்து தொழிற்சாலை வைத்து பிராண்டு உருவாக்கி மார்க்கெட்டிங் செய்து 5ரூபாய் பொருளை 50ரூபாய்க்கு விற்பனை செய்வதை நாம் வாங்கவேண்டிய தேவை என்ன? ஏன் அதேவிதமான சோப்பை நமது ஊரிலேயே, சுய உதவிக்குழுக்கள் மூலம் செய்தால், 30, 40 பேருக்கு பிழைப்புக்கு வழியும் செய்தால் மாதிரி ஆகும், சோப்பும் கிடைக்கும். அதுபோல் எத்தனையோ மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு இன்று சந்தை வாய்ப்பு உள்ளது.

ஆக உள்ளூர் தேவைகளை உள்ளூரிலேயே தயாரிக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதுதான் தற்சார்பு.

வயலில் உழுவதற்கு, மாடு & கலப்பைகளுக்கு பதில் டிராக்டர்களை பயன்படுத்துவது பற்றி ஜே.சி குமரப்பா அவர்கள் சொன்னது, "ஒரு கலப்பையை தயார்செய்யவோ, பழுது பார்க்கவோ அந்த ஊரில் உள்ள, இரும்பு வேலை செய்பவர், மர வேலை செய்பவர் போதுமானது; இதுவே டிராக்டர் என்றால், அந்த டிராக்டர் சேவை மையம் இருக்கும் நகரப் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும், உதிரிபாகங்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதையெல்லாம் விட, மாடு போல, டிராக்டர் சாணி போடுமா?"

கிராமங்களில் 1/2 ஏக்கர், 1 ஏக்கர் 2 ஏக்கர் என சிறு அளவில் நிலம் வைத்திருப்பவர்கள், ஒன்றிணைந்து, பயிர் செய்தால், வேலையாட்களுக்கான கூலி, இடுபொருட்கள் என அனைத்தும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இயற்கை வேளாண்மைக்கு மாறினால், உண்மையிலேயே விவசாயத்திற்கான முதலீடு மிகவும் குறைவே. நகரங்களில் உள்ள, ஒவ்வொரு 100வீட்டினரும், ஒரு விவசாயியை தத்தெடுத்துக்கொண்டால், நமது பொருளாதாரம் நிச்சயம் பலம் பெருகும்.

நமது குடும்பங்களில், கீரை, காய்கறிகள், பழங்கள், தேங்காய், மளிகைபொருட்கள் இப்படி விவசாயிகளுடன் தொடர்புகொண்ட பொருட்களை உற்பத்தியாளர்களிடமிருந்து, பல கைகள் மாறி, வியாபாரிகள் மூலம் வாங்குகிறோம். இதனால் ஒவ்வொரு நிலையிலும் விலை கூடுகிறது.
பரவலாக்கல் முறையில் சந்தையை வலுப்படுத்தி, உற்பத்தியாளர்களும் பயனாளிகளும் இணைக்கப்பட்டால், எல்லோருக்கும் வாய்ப்புகள் உருவாகும். தரமான பொருட்கள், சாமானிய விலையில் எல்லோருக்கும் கிடைக்கும்.

தொழில்கள் உட்பட பொருளாதார வாய்ப்புகள் பரவலாக்கல் முறையில் இருப்பதுதான் இந்தியாவிற்கு எப்பொழுதுமே நல்லது.

காந்தியடிகள் சொல்வது போல், இந்த உலகில் எல்லோருக்குமான தேவைகளை நிறைவேற்றுவதற்கான வளங்கள் போதுமான அளவில் உள்ளது ; ஆனால், மனிதர்களின் பேராசையை நிறைவேற்ற வளங்கள் இல்லை" என்பதை நாம் நினைவில் கொள்வோமாக‌

Post a Comment

0 Comments