வள்ளுவர் ஹிந்துவே

அர்த்தமுள்ள இந்து மதம்’ கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டது. பத்து பாகங்களாகத் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்ட கவிஞர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்' தொடரிலிருந்து ஒரு பகுதி:

இறைவன் என்ற சொல் கடவுள் என்ற பொருளில் வள்ளுவனால் இரண்டு இடங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஐந்தாவது குறளில் "இருள் சேர் இருவினையும்” சேரா இறைவன் என்றும், பத்தாவது குறளில்” பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார்” என்றும் அது ஆளப்படுகிறது.

கடவுளை “இறைவன்” என்று பௌத்தர்களோ, முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களோ கூறத் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வள்ளுவன் கூறியிருக்கிறான் (மற்றவர்கள் பின்னால் எடுத்துக் கொண்டார்கள்).

ஒரு குறளில் வரும் "மலர்மிசை ஏகினான்” என்ற வார்த்தை பல பொருள் தருமாயினும், பரிமேலழகர் உரைப்படியும், பிற்கால நாயன்மார்கள் பாடல்களின் படியும், அதுவும் சிவபெருமானையே குறிக்கிறது.

பிறவியைப் "பெருங்கடல்”என்று இந்துக்கள் மட்டுமே குறிப்பதால் நான் முன்பு சொன்ன அந்தக் குறளும் வள்ளுவன் ஓர் இந்துவே எனக் காட்டுகிறது.

“பெயக்கண்டும்.நஞ்சுண்டமைவர்” என்ற குறள்  "திருப்பாற்கடல் கடையப்பட்ட போது ஆலகால விஷத்தை அள்ளியுண்ட பரமசிவனையே குறிக்கிறது.” என்கிறார் பேராசிரியர் திரு.சுப்பிரமணிய பிள்ளை. “அடியாருக்கு நஞ்சமுதம் ஆவது தான் அற்புதமோ?” என்கிறார் சேக்கிழார் பெருமான். நற்றிணையில் வரும் "நஞ்சுண்பர் நனிநாகரிகர்” என்ற தொடரும் சிவனாரைக் குறிப்பதாக நான் சொன்னால் யார் மறுக்க முடியும்? ஒரு குறளில் இந்துக்களுக்கு மட்டுமே உரிய இந்திரனைச் சாட்சிக்கழைக்கிறார் வள்ளுவர். வேறு எந்த மதத்தவருக்கும் "இந்திரன்” என்று ஒருவன் இல்லை. அதிலும் இந்திரன் சம்பந்தப்பட்ட இந்து மதம் ஒன்றையே வள்ளுவர் உவமிக்கிறார். “ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விகம்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி” என்ற குறளில் ஐந்து பொறிகளையும் அடக்காது சாபம் எய்திய இந்திரன் அடக்குவோனுடைய ஆற்றலுக்குச் சான்றாகிறான் என்கிறார். அவர் கூறும் உவமானக் கதை அகலிகையின் கதை. இவ்வாறு வள்ளுவப் பெருந்தகை தொட்ட இடமெல்லாம் இந்துக் கடவுள்களையும், இந்துக்களின் மரபையுமே கூறுவதால் அவரும் ஓர் இந்துவே. ஆகவே தமிழரான வள்ளுவர் ஓர் இந்து. இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே.

('அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் கவிஞர் கண்ணதாசன்.
ஜூன் 24 அவரது பிறந்த நாள்).

Post a Comment

0 Comments