சிவப்பின் சாயம் வெளுக்கிறது, துரோகம் சந்தி சிரிக்கிறது

.
சீன ராணுவம் நேற்று முன்தினம் (ஜூன் 16) லத்தாக் முனையில் தாக்கியதில் பாரத ராணுவத்தினர் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள். காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரை மக்கள் கொந்தளித்து வீதிக்கு வந்து சீன செங்கொடி எரிப்பு, சீனப் பொருள் பகிஷ்கரிப்பு என்று தேசபக்தி உணர்வை உலகறியச் செய்தார்கள். பாரத அரசு சீனாவுக்கு தகுந்த பதிலடி பற்றி உறுதி அளித்தது. ஒவ்வொரு நாடாக பாரதத்திற்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியது. பத்திரிகைகளும் மக்களின் உணர்வை பிரதிபலித்தன. இவ்வளவெல்லாம் நடக்கிறது, ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சுருக்கமாக சிபிஎம், நடத்தும் நாளிதழ் ’தீக்கதிர்’ ஒரு வீரவணக்கம் தெரிவிக்கத் துப்பில்லாமல் தன்னை சீன கம்யூனிஸ்ட் ஊதுகுழலாக அடையாளம் காட்டிக் கொண்டது தான் கூத்து. 

கண்டனங்களின் கதாநாயகர்கள் கம்யூனிஸ்டுகள். ஆனால் தமிழகத்தில் ஒரு சிபிஎம் பெரும்புள்ளி கூட வாய்திறக்கவில்லை. தங்கள் தாய்க்கழகமான சீனா தன் ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தை நிலை நிறுத்த பாரத எல்லையில் இந்திய ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலைக் கண்டனம் செய்யத் துப்பில்லாமல் திரிகிறார்கள். இவர்கள் "சீனாவிற்கு கண்டனம்" என்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறுதான்.

தன் குட்டிகளுக்கு ஆபத்து என்றதும் பூனை புலியாய் மாறி தன் குட்டிகளை பாதுகாக்கும். அதுபோல நம் தாய்த்திருநாடு பாரதத்தின் எல்லையில் அந்நியர்கள் செய்யும் ஆக்கிரமிப்பு கண்டு தேசம் குமுறுமாம், இவர்கள் வாய்திறக்கமாட்டார்களாம்!

நம் உயிரைக் காக்க எல்லையில் ராணுவ வீரர்கள் தம் இன்னுயிரை இழக்கும் போது இவர்களின் கள்ளமௌனம் உரக்கச் சொல்லிவிட்டதே இவர்களின் தேசத் துரோகத்தை! நாங்கள் சீன ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தின் கங்காணிகள் இல்லை வெறும் கைக்கூலிகள்தான் என்கிறார்களா இவர்கள்?

Post a Comment

0 Comments