மும்பை : சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 16 ஆம் தேதி இரவு, பால்கர் மாவட்டத்தின் கட்சின்ச்சிலே கிராமத்தில், இரண்டு சாதுக்கள் தங்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, ஒரு கூட்டம் அந்த 2 சாதுக்களையும் அவர்கள் வாகன ஓட்டுனரையும் பலமாகத் தாக்கியது. அவர்கள் மூவரையும் அந்தக் கூட்டம் லத்தி கம்பால் மூர்க்கமாக தாக்கியதில், அந்த மூவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இந்த மூவர் மீதான தாக்குதல், ஒரு வதந்தியால் ஏற்பட்டது என்று போலீஸ், நிர்வாகம், அரசு தரப்பு கூறியுள்ளது, ஆனால், இந்தச் சம்பவத்திற்குக் காரணம் குழப்பம் அல்லது வதந்தி மட்டுமல்ல.
ஒரு இடத்தில் வேண்டுமென்றே வதந்தியைப் பரப்பி, மக்களை கொலை செய்யும் அளவிற்கு தூண்டி விடுவது, இடது சாரி அரசியல்வாதிகளின் பழைய விளையாட்டு. கொலை நடந்த இடத்திலும், அத்தகைய மனப்பாங்கு இருந்ததை அரசு தரப்பும் நிர்வாகமும் கண்டும் காணாமல் இருந்தது.
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பொருட்டும், அந்தப் பகுதியில் நடந்து வரும் சதித் திட்டத்தை அம்பலப் படுத்தவும், விவேக் விசார் மன்ச் மூலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி திரு அம்பா தாஸ் அவர்கள் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியில் வழக்கறிஞர் திரு சமீர் காம்ப்ளே, வழக்கறிஞர் திரு பிரவர்த்தக் பாதக், பத்திரிக்கையாளர் திரு கிரண் ஷலர், வனவாசி பகுதி கார்யகர்த்தா திரு சந்தோஷ் ஜனாடே மற்றும் ஒய்வு பெற்ற காவல் துறை அதிகாரி திரு லக்ஷ்மன் கார்பதே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கமிட்டியின் சில உறுப்பினர்கள், பால்கர் மாவட்டத்தின் தலாசரி தாலூக்காவிற்கு பயணித்து அங்குள்ள கார்யகர்தர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் உரையாடினர்.
சமூக ஊடகங்கள் மற்றும் மற்ற ஊடகங்களின் மூலம் பெறப்பட்ட பல தகவல்களை ஆய்வு செய்தனர். மேலும், விசாரணையின் மூலம் கண்டறியப்பட்ட பல உண்மைகளின் அடிப்படையில் ஓர் அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது. கமிட்டியின் அறிக்கை, மகாராஷ்டிரா மாநில முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் மாநில தலைமை காவல் அதிகாரி ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பால்கர் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையை ஜூன் 16 அன்று ஊடகங்களுக்கு வெளியிடும். இதற்காக, காணொளி மூலம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு விசாரணை குழு சார்பாக அறிக்கை வெளியிடப்படும்.
0 Comments