சுயசார்பு பாரதம் - உலகிற்கு வழிகாட்டி

கொரோனா தொற்று காரணமாக பூமியின் இயக்கம் தவிர, அனைத்து இயக்கங்களும் நின்றுவிட்டது. விமானங்கள் பறக்கவில்லை, ரயில்கள் ஓடவில்லை, கார்கள் ஓடவில்லை. மனித நடைப்பயணமும் நின்றுவிட்டது. பூமி-இயற்கை அன்னை தற்பொழுது சுத்தமான ஆரோக்கியமான சுவாசத்தை அனுபவித்து வருகிறாள்.

இந்த சில நாட்களில் அனைத்து மாசுபாடுகளும் ஓடி விட்டது போல் இருக்கிறது. நதி நீர் சுத்தமானதாக மாறி உள்ளது. விலங்குகள் அச்சமின்றி நகரங்களைச் சுற்றத் தொடங்கியுள்ளன. காற்று மிகவும் சுத்தமாகிவிட்டது. இமயமலையின் பனி மூடிய சிகரங்கள் பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் இருந்து நேரடியாகத் தெரிகிறது.

இவை ஒரு குறுகிய கால நன்மையாக தெரிந்தாலும் நம்மால் முடியாது என்று நாம் நினைத்த பல விஷயங்கள் இன்று நம்மால் முடிகிறது. வேகம் நிற்கும் பொழுது என்ன நடக்கும். இதை தெரிந்து கொள்வது அவசியம் மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. வேகம் அதிகரிக்கும் பொழுது என்ன நடந்தது ? இது உங்களுக்குத் தெரிந்தால், வேகத்தை நிறுத்துவதன் மூலம் என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும்.

திரு எஸ். கே சக்ரவர்த்தி "Rising Technology and Falling Ethics” (தொழில்நுட்ப முன்னேற்றமும் வீழ்ச்சி அடையும் நெறிமுறைகளும்) என்ற தலைப்பிலான கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார் :

"மனிதன், பூமி மற்றும் இயற்கை அன்னைக்குமான தனது உணர்வு பூர்வமான தொடர்பை துண்டித்துக் கொள்ள எத்தனித்த தருணத்தில் தான், நவீன அறிவியலும் அதனுடைய வெளிப்பாடான தொழில்நுட்பமும் உருவாகின. 

தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும் என்றால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் குணாதிசயங்கள், செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைக்கும் இயல்புகள் மூடநம்பிக்கைகள் என்ற கருத்து வலுப்பெற்றது. எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்ற சிந்தனையைத் தூண்டும் அணுகுமுறை முற்போக்கான மற்றும் சுதந்திரமான மனநிலையின் அடையாளமாகக் காணப்பட்டது. உண்மையான பிரிவினை இங்கிருந்துதான் நடந்தது. தொடர்பு அறுபடும் நிலையில், எது நல்லது எது கெட்டது என்பது தெளிவாகத் தெரியாது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலுள்ள இணக்கம் மறைந்து போவதற்கான காரணம் இதுவே. பொருள், காற்று, நீர், நேரம், தூரம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதாலும், வெற்றியின் மூலம் அறிவியல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதாலும் லௌகீக வாழ்க்கையின் பல அம்சங்கள் பயனடைந்தன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இணக்கத்திற்கு பதிலாக ஆணவம் மற்றும் பயம், மரியாதைக்கு பதிலாக எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இந்த எண்ணமே மனிதனையும் இயற்கையையும் பிரிக்க முக்கிய காரணம்.

"மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இந்த பிரிவினை, சுற்றுப்புறம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிலிருந்து மட்டும் மனிதனை அந்நியப்படுத்தவில்லை, மனிதனுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் இதன் தாக்கம் வெளிப்படுகிறது. இந்த அணுகுமுறையின் காரணமாக, மனிதன் இயற்கையிலிருந்து மட்டுமல்ல, சமுதாயத்திலிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்படுகிறான். இதன் விளைவாக, அவர் தனது சூழலை, அன்புக்குரியவர்களை, அந்நியர்களைக் கையாள்வதில் மிகவும் திமிர்பிடித்த, மிகவும் கொடூரமான மற்றும் வன்முறையாளராக மாறி வருகிறார். எதிர்பாராத வேக அதிகரிப்பு காரணமாக இது நிகழ்ந்துள்ளது.

இப்போது வேகம் நின்றுவிட்டது, ஆறுகளின் நீர் சுத்தமாக ஓடத் தொடங்கியது. காற்று சுத்திகரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள். உறவுகளின் மேன்மை இப்பொழுது நன்றாக விளங்குகிறது. மிகக் குறைந்த தேவைகளுடன் வாழ்க்கையை எவ்வாறு மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம் என்றெல்லாம் இப்பொழுது புரியத் துவங்கியது.

பாரதிய சிந்தனையின் சாரத்தை ஒட்டிய ஒரு செய்தி இன்று உலகளவில் பரவி வருகிறது. “When you cannot go outside, go inside” (வெளியே செல்ல முடியாத பொழுது உள்ளே செல்லுங்கள்) என்பதே அது. வெளியில் பயணங்களை நிறுத்துவதன் மூலம் உள்ளே எட்டிப் பார்க்கும் புதிய பயணம் தொடங்கியது.

ஆனால் அடுத்து என்ன? உலகின் பொருளாதார சக்கரம் நின்றுவிட்டது. வேலைகள் நின்று விட்டன. சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். பழைய பாக்கிகள் செலுத்தப்பட வேண்டும். மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி தங்கள் கிராமத்தை அடைந்துவிட்டார்கள். இடையில் சிக்கிக் கொண்டவர்கள் தங்கள் மாநில அரசாங்கத்தின் உதவியோடு தங்கள் ஊர்களுக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். பாரதம் போன்ற பரந்து விரிந்த நாட்டின் முன் ஒரு பெரிய சவால் உள்ளது.

பில்லி லிம் என்ற எழுத்தாளர் தனது "டேர் டு ஃபெயில்" (Dare to Fail) புத்தகத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார்.

நீங்கள் ஒரு சிக்கலை எதிர்கொள்ளும்போது, பிரச்சினையிலிருந்து உங்களை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள், அது ஒரு சூழ்நிலையாக மாறும். அந்த சூழ்நிலையை நீங்கள் ஆராய்ந்தால் அது ஒரு சவாலாக மாறும். உங்கள் சக்தி மற்றும் வளங்களைப் பற்றி நீங்கள் நினைத்து, அந்த சவாலை எதிர்கொள்ள நினைத்தால் அது ஒரு வாய்ப்பாக மாறும்.

(When you face a problem and take yourself away from it, it becomes a situation. When you are to analyse it, it becomes a challenge. And when you think of your resources to meet the challenge, it becomes an opportunity.—Billy Lim) 

பாரதீய பாரம்பரிய கல்வி முறையில், புதிய சிந்தனை (Innovation) மற்றும் கேள்வி கேட்டல் ஆகியவை சிறப்பானவை ஆகும். பாரதிய கல்வி முறையில் கேள்விகளுக்கு பதிலை நாமே தேடுவதற்கு ஊக்கம் கிடைக்கிறது.

எப்படி கற்க வேண்டும் (Teaching how to learn) என்று ஆசிரியர் கற்றுக் கொடுப்பார். எப்படி வாழ வேண்டும் என்று அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அனால் இன்று, உலகாயத இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டி பொருள் சேர்க்க தேவையான கல்வி அதிகப்படியாக கற்பிக்கப்படுகிறது. இதனால், வேலையின் பின்னே ஓடும், சுயநலமான, உலகாயத இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ளும் தலைமுறைகளை நாம் உருவாக்கி வருகிறோம். பாரதத்தின் வளர்ச்சி நகரங்களை ஒட்டியே அமையும் என்று தவறாக கணக்கிட்டதால், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகிய அனைத்து வசதிகளும் நகரங்களை ஒட்டியே அமைந்துள்ளன.

இதனால், பாரதத்தின் அறிவாற்றல் கிராமங்களில் இருந்து சிறு நகரங்களுக்கும், சிறு நகரங்களில் இருந்து பெரு நகரங்களுக்கும், பெரு நகரங்களில் இருந்து மாநகராட்சிகளுக்கும், மாநகராட்சிகளில் இருந்து வெளி நாடுகளுக்கும் என ஓடிக்கொண்டே இருந்தது. எனவே, கிராமங்கள் காலியாகி வருகின்றன, நகரங்களில் நெரிசல் அதிகரித்து வருகிறது. நகர வாழ்க்கை வசதியானதாக, ஆனால் துரித கதியிலும் நிதர்சனத்திற்கு அப்பாலும் சென்று கொண்டிருக்கிறது. வளரும் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளின் மீது சுமத்தப்பட்ட உலகமயமாக்கல், இப்போது அதன் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. வளரும் மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகளை சுரண்ட ஒரு ஆயுதமாக காலனியாதிக்கத்தின் மறு வடிவமாக இது உள்ளது என்று உலக நாடுகள் இப்பொழுது உணர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தீங்கிலிருந்து மீண்டு வர அனைவரும் ஒரு வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இப்போது எல்லாம் நின்றுவிட்டதால், உலகம் முழுவதும் புதிய கட்டமைப்பைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த திறனையும் பொறுப்பையும் பாரதம் நிறைவேற்ற முடியுமா? இது கேள்வி.

பதில் நேர்மறையானது. இதை பாரதம் செய்ய முடியும். பாரதம் மட்டுமே செய்ய முடியும். பாரதத்தில் உள்ள, பாரதத்தில் மட்டுமே உள்ள 3 விஷயங்களே இதற்குக் காரணம். ஒன்று, பாரதத்திற்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் ஆண்டுகளின் சமூக, தேசிய வாழ்க்கை அனுபவம் உண்டு. இரண்டாவதாக, இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்த ஆன்மீக ரீதியான முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த பார்வையும், அதன் அடிப்படையில் வாழ்க்கையின் ஒரு சிந்தனையும் அனுபவமும் பாரதத்திற்கு உண்டு.

நவீன அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, மதம், மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் கூடி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நுணுக்கம் தெரிந்து இருக்க வேண்டும். அந்தக் கலையில் பாரதம் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இதை உலகம் கண் கூடாக கண்டும் அனுபவித்தும் உள்ளது. பாரதம் செழிப்பின் உச்சத்தை அடைந்துள்ளது. பொது நூற்றாண்டு 1 முதல் 1700 ஆம் ஆண்டு வரை, உலக வர்த்தகத்தில் பாரதத்தின் பங்களிப்பு அதிகபட்சமாக உள்ளது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பாரதீயர்கள் வணிகத்திற்காக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்குச் சென்றனர் என்பதற்கு வரலாறு சாட்சி. ஆனால் ஆன்மீக ரீதியான சிந்தனையின் அடிப்படை வாழ்க்கை முறையால், பாரதீயர்கள் தங்கள் காலனிகளை அங்கு அமைக்க முயற்சிக்கவில்லை. ஏனெனில் "வசுதைவ குடும்பகம்" என்ற உணர்வு, வாழ்க்கையின் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த பார்வையில் இருந்து எழுந்தது. ஆகையால் அவர்களை சுரண்டவில்லை. அவர்களை அடிமைப்படுத்தவில்லை. மாறாக, கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் வாழ்வதற்கான சிறந்த வழிகளை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து அவர்களை செல்வந்தர்கள் ஆக்கினோம் (we created wealth there). எனவே, பாரதத்திற்கு தொலைநோக்கு, நிபுணத்துவம் மற்றும் அனுபவம் உள்ளது. பாரதம் வழிநடத்த முடியும்.

இங்கிருந்து நாம் எப்படி முன்னேற வேண்டும் என்று சிந்திப்பது அவசியம்.

ஒரு சமூகமாகவும் தேசமாகவும் எவ்வாறு முன்னேறுவது என்பதை இப்போது சிந்திப்போம்.
பாரதம் தன்னைப்பற்றிமட்டுமேநினைத்ததில்லை. பாரதம் எப்போதும்தன்னுடன் சேர்த்து உலக நலனைப் பற்றி சிந்தித்து வருகிறது. "ஆத்மானோ மோக்ஷர்த்த ஜகத் ஹிதாய ச" என்பது பாரதத்தின் சிந்தனையும் செயலும் ஆகும்.

"சுதேசி சமாஜ்" என்ற தனது கட்டுரையில், திரு ரவீந்திரநாத் தாகூர் மறுக்கமுடியாத வார்த்தைகளில், "நாம் யாரோ, அவராக முதலில் மாற வேண்டும்" என்று கூறுகிறார். இந்த "நாம்" என்பதன் அடையாளம் நமது ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, ஏகாத்ம மற்றும் சமுதாய வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இமயமலை முதல் அந்தமான் வரை இந்த நிலத்தில் வாழும் மக்கள், பல்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள், பல சாதி அடையாளங்களோடு அழைக்கப்படுகிறார்கள், பல கடவுள்களை வணங்குகிறார்கள், பல நூற்றாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறார்கள், ஒவ்வொரு சமூகமும் "நாங்கள்" என்ற இந்த அடையாளத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த அடையாளத்தை மக்கள் அறிவார்கள், பல பெயர்களால் அதை அங்கீகரிக்கிறார்கள். இவை நம் அடையாளங்கள் - "ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி" (சத்தியம் ஒன்றே ; அதை பலர் பல வழிகளில் அழைக்கிறார்கள்), "பன்முகத்தன்மையில் ஒற்றுமை", "அனைவரும் கடவுளின் ஒரு அங்கம்". ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணம் மற்றும் இயல்புகளுக்கேற்றவாறு அவர்கள் இறைவனை அடையும் முறை மாறுபடுகிறது. அந்த ஒன்றை நோக்கி மட்டுமே, அந்த ஒன்றோடு ஐக்கியமாவதற்கு மட்டுமே நம் வாழ்க்கை இருக்க வேண்டும். இந்த 4 முக்கியமான அம்சங்களை ஆதாரமாகக் கொண்டே நமது அடையாளம் உள்ளது. இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிப்பட வேண்டும். இதுவே, “நாம் யாரோ, அவராக முதலில் மாற வேண்டும்” என்பதன் மையக்கருத்து.

இன்றும் 70% பாரதீயர்கள் கிராமத்தில் வாழ்கின்றனர். ஆனால் இந்த கிராமங்கள் முன்பு எப்படி இருந்தன ? கிராமத்திற்கு சாலைகள் இருக்காது, நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதிகள் இருக்காது, வேலை வாய்ப்புகள் இருக்காது, கிராமத்தில் வாழ்வது பின்தங்கிய நிலைக்கு அடையாளம் என்று கருதப்பட்டது. எனவே, படிப்பதற்கும், படித்த பிறகு வாழ்வாதாரத்திற்கு பொருள் ஈட்டவும், படித்த திறமையானவர்கள் கிராமத்திலிருந்து குடிபெயர த் துவங்கினர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது, இன்னும் மாறிக்கொண்டிருக்கிறது, மேலும் மாறக்கூடும். இது மட்டுமல்ல, இதை மாற்ற வேண்டியது அவசியம்.

இப்பொழுது சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம், இணையம், மொபைல், போக்குவரத்து வழிமுறைகள் கிராமத்தில் உள்ளன, மேலும் பல உருவாகும். மருத்துவ வசதி, நல்ல கல்வி போன்றவற்றை நாம் ஏற்பாடு செய்ய முடிந்தால், மக்கள் கிராமத்திலேயே வாழ விரும்புவார்கள். நகர மையப்படுத்தலுக்கு பதிலாக பரவலாக்கப்பட்ட பொருளாதாரம், தொழில் போன்றவற்றின் சாத்தியம் அதிகரித்துள்ளது.

கொரோனா காரணமாக மக்கள் நகரங்களை விட்டு தங்கள் கிராமங்களை தங்கள் சுற்றத்தாரை அடைந்துள்ளனர். மேலும் அடைந்து கொண்டுள்ளனர். இதில் படித்தவர்களும் உள்ளனர். அவர்களை கிராம முன்னேற்றத்தில் இணைத்து அங்கேயே பணியில் இருக்க வைத்தால் தற்பொழுது வந்தவர்களில் 40% மக்கள் கிராமத்திலேயே தங்க வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு படித்தவர்களிடையே குறைவாகக் காணப்படும் புதுமைப்புனைவு (Innovation) திறனை காணொளி பயிற்சி மூலமும் பயிற்சி பட்டறையின் மூலமும் அதிகரிக்கலாம். கிராமப்புற வாழ்க்கை ஒட்டிய மற்றும் விவசாயம் தொடர்பான பல புதிய தொழில்களை கிராமத்தில் தொடங்கலாம். கிராமத்திலுள்ள பிணைப்பு காரணமாக ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஒத்துழைக்கக்கூடிய வகையில் பல தொழில்கள் தொடங்க முடியும். கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, வாடிக்கையாளருக்கு அல்லது உள்ளூர் சில்லறை சந்தைக்கு தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக வழங்க முடியும். இதன் மூலம் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும். ஓலா (Ola) அல்லது உபேர் (Uber) மூலம் பல சேவைகள் நம் வீட்டு வாசலிலேயே நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. அவை எத்தனை நிமிடங்களில், எந்த நேரத்தில் நம்மிடம் சேர்ப்பிக்கப்படும் என்கிற விவரங்கள் எல்லாம் நமக்கு தெரிகிறது. அந்த சேவைகளுக்கு சுலபமாக கட்டணம் செலுத்துவதற்கு வசதியும் இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கப்பெறுகிறது. இந்த சேவைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள், உபயோகித்து வருகிறார்கள். இதன் காரணமாக, பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இன்று உலகம் இரசாயன உரங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நல்ல உணவு, விலை சற்றுக் கூடுதலாக இருந்தாலும் மக்கள் விரும்பி உண்கிறார்கள். தேவை மற்றும் உற்பத்தி முறையை சற்று சீர் படுத்தி, நுகர்வோருக்கு நேரிடையாக பொருட்கள் கிடைக்கச் செய்வதன் மூலம் வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியும். நாட்டுப் பசு மற்றும் மற்ற பசு வகைகளின் பொருட்களுக்கு தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த அனைத்து திட்டங்களும், கிராமங்களையும், கிராம மக்களையும் மையமாக வைத்து இருக்கலாம். இருக்க வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும். மின்சாரம் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள் கிராமங்களுக்கு வழங்கப்பட்டால் அங்கேயே சிறு தொழில்கள் தொடங்க சூழ்நிலை ஏற்படும். அத்தகைய தொழில்கள் தொடங்க எதுவாக சுலபமான மற்றும் எளிமையான வழிமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். துவக்கமாக கிராமங்களில் தொழில் துவங்க முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் இன்ன பிற சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். உலக அரங்கில் நமது பொருட்கள் அதிகமாக விற்கப்பட வேண்டும் என்றால் நமது பொருட்களின் வடிவமைப்பில் நாம் அதிக கவனம் கொடுக்க வேண்டும். கொரியா ஜப்பான் போன்ற நாடுகள் நீண்ட நாட்களாக தங்கள் பொருட்களின் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். ஆகவே, அந்த நாடுகளில் வடிவமைக்கப்பட்ட பொருட்களுக்கு உலகெங்கும் வரவேற்பு இருந்தது. பொருட்கள் வடிவமைப்பதற்கான நிபுணத்துவம் பெற, பாரதத்தில் இணையத்தளம் மூலமாகவும் பயிற்சி பட்டறைகள் மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பாரதத்தின் பொருளாதாரத்தில் சீனாவின் ஆதிக்கம் இருந்தது. கொரோனா தொற்றுநோயால் சீனா பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாரதத்தில் சீனப் பொருட்கள் புறக்கணிக்கப் பட்டால் நம் சமுதாயம், சொந்தக் காலில் நிற்க வாய்ப்பு உள்ளது. மலிவு விலை என்ற காரணங்களால் பொருட்கள் சீனாவிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்தால், பாரதத்தில் அதற்கான சுதேசி மாற்று இருக்க வேண்டும். இது ஒரு வகையான பொருளாதாரப் போர். ஆகவே போர்க்கால அவசரத்தில் இதற்கான தயாரிப்பு பணி நடைபெற்றால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தலாம். பல நாடுகள் சீனாவுடனான தங்களது வணிகத்தை நிறுத்துவது குறித்து யோசித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வருகிறது. சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கான சுதேசி மாற்றை, நல்ல தரத்திலும், குறைந்த விலையிலும் விரைவாக அறிமுகப் படுத்தினால், பல உலக நாடுகள் சீனாவிற்கு பதில் பாரதத்துடன் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டும். இது பாரத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பல வழிகளைக் கொடுக்கும். இது நடந்தால், பாரதத்தின் ஏற்றுமதி அதிகரிக்கும். பாரதத்தின் பொருளாதார நிலைமை மேலும் பலப்படுத்தப்படும். ஏற்றுமதி செய்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் மற்ற சவால்களை சமுதாயம் பார்த்துக் கொள்ளும். உள்ளூர் வேலைவாய்ப்பை மனதில் வைத்து அனைத்து திட்டங்களும் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நாடும் தனது சுதேசி தன்மையை காத்துக் கொள்வதில் கவனம் கொடுக்கும். உலகமயமாக்கலின் “One Size Fits All” இதற்கு பொருத்தமே இல்லாதது. பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் பொருளாதார புரிதலுடன் இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் சரியான வழியாகும்.

இந்தத் தொழில்கள் அனைத்தும் கிராமத்தை மையமாகக் கொண்டிருந்தால், அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி விலை குறைவாக இருக்கலாம், ஏனென்றால் கிராமப்புறத்தில் வாழ்க்கை செலவினங்கள் நகரத்தை விடக் குறைவு. மேலும் வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக இருக்கும். அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே, சொந்த பந்தங்களுடன் இருப்பர். தங்கள் கிராம வளர்ச்சிக்கும் தங்களின் பங்களிப்பை தருவர். நகரத்தில் வாழ்ந்த அனுபவம் மூலம் கிராமத்தில் புதுமைகளை அவர்கள் அறிமுகம் செய்வர்.

இவை அனைத்தையும் அரசாங்கமே செய்யும் என்று எதிர் பார்க்க முடியாது. சமுதாயத்தின் முயற்சி மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மூலமே இது சாத்தியம். ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஏகாத்ம திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். படிப்படியாக அரசு சார்பை குறைப்பதன் மூலம், சமூகம் தன்னம்பிக்கை அடைவதன் மூலம் இந்த திட்டங்களை இயக்க முடியும். திரு ரவீந்திரநாத் தாகூர் கனவு கண்ட சுதேசி சமுதாயம் இதுவே. எந்த சமுதாயம் அரசு சார்பில்லாமல் இருக்கிறதோ அதுவே சுதேசி சமுதாயம் என்கிறார் அவர்.

பாரதத்தில் புதிய தேசிய கல்வி கொள்கை தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதை முழுமையாக பரிசீலித்த பிறகு, விரைவில் அதை செயல்படுத்த வேண்டும். இது நடந்தால், பாரதிய சிந்தனையின் அடிப்படையில் ஒரு புதிய தலைமுறை உருவாக வாய்ப்பு உள்ளது

“यतोSभ्युदय निःश्रेयस सिद्धिः स धर्मः।” இது பாரதத்தின் பண்டைய வாழ்க்கை முறை. பாரதிய ஆன்மிக சிந்தனையின் அடிப்படையில் அமையும் சமுதாயத்தில் முன்னேற்றம் மற்றும் கடமை உணர்ச்சி பெருகும். அத்தகைய சமுதாயத்தில் இருந்து வரும் ஒவ்வொரு மனிதனும் செழிப்புடன் இருப்பான்.

விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா கூறுகிறார், "மக்கள் தங்கள் உழைப்பின் ஊதியத்தை தங்களுக்கென மட்டும் தக்க வைத்துக் கொள்ளாத ஒரு சமூகத்தில், ஒவ்வொரு நபரும் சமூக மூலதனத்தின் அடிப்படையில் வளமானவர்களாக மாறுகிறார்கள். ஆனால் எந்த சமுதாயத்தில் மக்கள் தங்கள் உழைப்பிற்கான ஊதியத்தை சமுதாயத்தோடு பகிராமல் தாங்கள் மட்டும் வைத்துக் கொள்கிறார்களோ அந்தச் சமுதாயத்தில் ஒரு சிலர் செழிப்பாகவும் மற்றவர்கள் வறுமையிலும் இருப்பார்கள்.”

எவர் ஒருவர் சமுதாயத்தை தன்னுடையதாக நினைத்து கொடுக்கிறாரோ அதையே நாம் தர்மம் என்கிறோம். அரசாங்க வலிமையின் அடிப்படையில் இல்லாது தர்மத்தின் அடிப்படையில் சமுதாய சக்தியின் அடிப்படையிலேயே நமது சமுதாயம் செல்வச் செழிப்போடும் வளமாகவும் நடை போட்டுக் கொண்டிருந்தது. மரியாதைக்குரியவர்களைப் பார்த்து மற்றவர்கள் அந்தப் பாதையை தொடர்வார்கள்.

“यद्यदाचरति श्रेष्ठः तत्तदेवेतरो जनाः। 
स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते।।”

இந்தச் சாத்திய கூறுகள் அனைத்தையும் மனதில் கொண்டு வருங்கால பாரதத்திற்கான திட்டம் வரையப் பட வேண்டும். “கொரோனா” காலத்திற்கான நமது பாடம் இது தான்.

முனைவர் மன்மோகன் வைத்யா,
இணை பொதுச்செயலாளர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்


Post a Comment

0 Comments