தேசம் பூமாரி பொழிகிறது என்றால் சும்மா அல்ல!
~~~~~~~~~~~~~~~~~
மணிகண்டன் வயது 38. இவருக்கும் இவரது மனைவிக்கும் சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நர்ஸ் பணி.
மார்ச் 6. தொலைக்காட்சியில் செய்தி பார்த்துகொண்டிருந்தார். காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா என்று செய்தி. சிறிது நேரத்தில் நாளைக்கு கொரோனா வார்டு பணிக்கு வரவேண்டும் என்று குறிப்பு! காலையில் இருவரும் மருத்துவமனைக்கு சென்று பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டனர். அந்த கவச உடை மூச்சை இறுக்கி பிடிப்பது போல் இருந்தது; வார்டுக்குள் சென்றபோது சற்றே சகஜமாக மாறியது. மஞ்சள்காமாலை, நிபா சிகிச்சை சமயங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மணிகண்டன், மனைவியும் சேர்ந்து கொரோனா சிகிச்சையில் பணியாற்றுவோம் என்பதை எதிர்பார்க்கவில்லை. அவர் சிகிச்சையளித்த 50 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள் இருப்பினும் ஒருவர் உயிரழந்தார் என்பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிகிச்சை சமயத்தில் ஒரு நோயாளி, 10 நிமிஷத்துக்கொருமுறை அவரை கூப்பிட்டு, எனக்கு சரியாயிடுச்சா என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம். பல நோயாளிகள், நாங்கள் செத்துவிடுவோம் என்று பயந்துகொண்டே இருந்தனர். அனைவருக்கும் மருத்துவ சிகிச்சையோடு மனஅழுத்தத்தை போக்கவும் ஆலோசனை வழங்க வேண்டியிருந்தது. கொரோனா சிகிச்சை சமயத்தில் கட்டாயம் அணிய வேண்டிய பாதுகாப்பு கவச உடையால், இயற்கை உபாதை செல்வது மிகவும் சிரமமாக இருக்கும் எனபதால் தண்ணீர் குடிப்பதைக் கூட தவிர்த்தார். மணிகண்டன் தன்னுடைய 6 வயசு மகனையும் 2 வயசு மகளையும் கண்ணாடி அறைக்குள்ளிருந்துதான் பார்க்க வேண்டும். பிள்ளைகளை பார்க்கும்பொழுது, அவர் அழுகை வராமல் கட்டுப்படுத்திக்கொண்டாலும், அவரது மனைவி அழுவதைபார்த்தால், இவருக்கும் அழுகை வந்துவிடும்.
14 நாட்கள் தொடர்ச்சியாக வேலை பார்த்ததனால், இருவரும் 9 நாட்கள் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழ்நிலை! பின்பு கொரோனா பரிசோதனை செய்து "நெகட்டிவ்" என்று வந்ததால், மணிகண்டனும் அவரது மனைவியும் மீண்டும் ட்யூட்டியில் !!
இன்று தேசத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என்றால் எத்தனை எத்தனை மணிகண்டன்கள் இதுபோன்ற பத்மவியூகங்களில் புகுந்து புறப்பட வேண்டியிருந்திருக்கும்!
0 Comments