புற்று நோய்க்கு மருந்து கொடுத்த தெற்கு ரயில்வே ‘சேது’
சிதம்பரம் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் வடிவேல் என்பவரின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். கொரோனா ஊரடங்கினால், தாயாருக்கு தேவைப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து சென்னையிலிருந்து வாங்கவேண்டியதாயிருந்தது. ஏப்ரல் 23 அன்று தென்னக ரயில்வேயின் சேது 24 மணி நேர உதவி மையத்தை நாடினார். இக்கோரிக்கையை பரிசீலித்த ரயில்வே சேது (SETU – Swift & Efficient Transportation of Utilities) உதவி மையம், அதிகாரிகளுக்கு தெரிவித்து மருந்துகளை அனுப்ப முடிவெடுத்தது. சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு நேரடி ரயில் வசதி இல்லாததால், திருச்சி பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி சென்னை எழும்பூர் நாகர்கோவில் சரக்கு ரயில் மூலம் திருச்சி அனுப்பப்பட்டு பின்பு திருச்சியிலிருந்து, நாகர்கோவில் எழும்பூர் சரக்கு ரயில் மூலம் சிதம்பரத்தில், ஏப்ரல் 24 அன்று வடிவேலுவின் உறவினருக்கு சேர்க்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் தெற்கு ரயில்வே சேது-24/7 எனும் உதவி மைய சேவையை (+91-9025342449) இப்படியெல்லாம் கூட உபயோகமாக்கி கொள்ளலாம் என்பது ஊர் மக்களுக்கு உவப்பான செய்திதானே !.
தமிழகத்து அன்பு மிகையால் வங்கத்து இளைஞனுக்கு துளிர்த்த வாழ்வு
ஏப்ரல் 17அன்று சென்னை அம்பத்தூரில் என்95 வகை முகக் கவசம் வாங்கிக் கொண்டு, மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கம் திரும்பிக்கொண்டிருந்தார் அசோக் பிரியதர்ஷன். இரவு 9 மணி. ஒரு 20 வயது இளைஞன் சாலையில் தனியாக ஓரமாக நடந்து கொண்டிருந்தான். அவனிடம் "என்னப்பா.. எங்க போற..." என்று பேச்சு கொடுத்தார். அவனிடமிருந்து வந்த பதில் ஹிந்தியில். இவரும் அவனிடம் ஹிந்தியில் உரையாடி தனது வண்டியில் "லிப்ட்" கொடுத்தார். “கேரளாவிலிருந்து நடந்து வருகிறேன்.. கொல்கத்தா செல்லவேண்டும் என்று அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியுடன் பைக்கை நிறுத்திய அசோக், அவனை இறங்கச் சொல்லி அடையாள அட்டை ஏதேனும் உள்ளதா எனக்கேட்க, அந்த இளைஞனும் தனது ஆதார் அட்டையை காட்டினான். அவனது முகவரி மேற்கு வங்காளத்தை சேர்ந்தது என்றும் அவனது பெயர் ஜலாலுதீன் என்றும் உறுதி செய்துகொண்டார் அசோக். ஏதேனும் சாப்பிட்டாயா எனக் கேட்க, மதியம் சாப்பிட்டேன் என்ற பதிலைக்கேட்டு, தான் பார்சல் செய்து கொண்டுவந்திருந்த அசைவ உணவை அவனுக்கு கொடுத்து அப்போதே சாப்பிட சொன்னார். பின்பு தனது ஊரான வஞ்சிவாக்கத்தில் தங்கியிருக்கும் வங்காள மொழி பேசும் தொழிலாளர் ஒருவருடன் செல்பேசியில் தொடர்பு கொண்டு அந்த இளைஞனிடம் வங்காள மொழியில் பேசச் சொன்னார்.
அவர்கள் பேசியபின் ரூ. 1,760 வைத்திருந்த அந்த இளைஞனுக்கு அசோக் தனது பங்காக ரூ.5,000 கொடுத்து அவனது செல்பேசியில் தனது எண்ணை பதியவைத்துக் கொள்ளச்சொன்னார். முழு விஷயத்தையும் காவலரிடம் விளக்கிய அசோக், அந்த இளைஞன் வங்காளம் செல்ல உதவவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். செங்குன்றம் பகுதியில் வந்து சென்ற லாரிகளை அசோக் தனது முயற்சியாலே காவலரின் துணையுடன் மடக்கி நிறுத்தச் செய்தார். ஒடிஸா செல்லும் லாரி ஒன்றில், லாரி ஓட்டுனரிடம் அந்த இளைஞனை ஒரிஸாவில் இறக்கிவிடச் சொன்னார். ஏப்ரல்24 வெள்ளியன்று அசோக்கிற்கு வந்த தொலைபேசி அழைப்பில், "மே'ன் ஜலால் போல் ரஹா ஹூம்”என்ற குரல் கேட்டது. ஆம் ! அசோக் பிரியதர்ஷன் செய்த உதவியால் உள்ள தனது ஊருக்கு வந்துவிட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தான் ஜலால். மனநிறைவில் வஞ்சிவாக்கம் நாயகன் அசோக் பிரியதர்ஷன்.
0 Comments