கதவு திறந்து வைப்போம், வரட்டும் 2025, காத்திருப்போம்!

§ மது விற்று ஆட்சி நடத்தும் அவலம்;
§ அவமானத்தில் மக்கள்;
§ ஐந்து ஆண்டில் மாற்று வருமாமே?

கதவு திறந்து வைப்போம்,
வரட்டும் 2025, காத்திருப்போம்!

போன வாரம் சென்னை உயர்நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை விதித்திருந்தது. 15 மே அன்று நடந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜரானார். அவர் தனது பதிலுரையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், டாஸ்மாக் மதுபான விற்பனைக்குப் பதிலாக வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்ட 4 அல்லது 5 ஆண்டுகளாகும் என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு மேல்முறையீடு செய்து, உச்சநீதிமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனைக்கு தடை இல்லை என்று ஆணையிட்டுவிட்ட போதிலும், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த ஒரு விஷயம் மக்கள் மன்றத்தில் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் ஆட்சி நடத்தமுடிகிறது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் சொன்னது, மக்களை அவமானத்தால் கூனிக்குறுக வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாற்றுவழிகள் மூலம் வருவாய் ஈட்ட 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது, இதுவரை அப்படிபட்ட மாற்றுவழி பற்றி ஏன் ஆராயவில்லை என்ற கேள்வியையும் பொதுமக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.
மதுபோதையினால் தமிழகம் முழுவதும் விபத்துகள், குடல், கல்லீரல் நோய்கள், குடும்பத்தகராறுகள், பாலியல் வன்முறைகள், கலாச்சார சீர்கேடுகள் இப்படி எல்லாவித சீர்கேடுகளும் செய்தியாக வந்துகொண்டிருந்தது கொரோனா முடக்கத்தால் ஒரு மண்டலத்திற்கும் மேலாக [48 நாட்கள்] நின்றிருப்பது மக்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் வரவழைத்திருக்கிறது.

குடி, குடியை கெடுக்கும் என்ற வாசகத்துடனே இந்த வியாபாரம் களைகட்டுவது கடும் அதிர்ச்சி தரும் நகைமுரண். அறிவை அழித்து வாழ்க்கையின் எல்லாவிதமான விழுமியங்களிலிருந்தும் மக்களை அன்னியப்படுத்தி அடிமை நிலமைக்கு மாற்றும் குடிப்பழக்கத்தை, மக்களை காக்கவேண்டிய அரசே, மதுவை விற்பனை செய்து குடும்பப் பெண்களின் தாலி அறுக்கும் எமனாக நடந்துகொள்வது வெட்கக்கேடு! நீயா அரசன், நீதான் கள்வன் என்று கொற்றவன் முன்னே நீதியுரைத்த கண்ணகி போல் இன்றும் பெண்கள், கட்செவி மூலம் [வாட்ஸ் அப்] மூலம் கதறுகிறார்கள்.

கல்வியில், மருத்துவத்தில், வேலைவாய்ப்பில் பிற மாநிலங்களை காட்டிலும் முன்னேறிய நிலையில் இருக்கிறோம் என்று மார்தட்டிக்கொள்ளும் தமிழகத்தை ஆண்ட, ஆளும் அரசுகள், இப்படியான‌ முன்னேற்றங்கள், எத்தனை எத்தனை ஏழைக் குடும்பங்களுக்கு வாய்க்கரிசி போட்டதால் வந்தது என்பதை மறைத்துவிடுகின்றன.

அளவுக்கு மீறிய இலவச திட்டங்கள், ஊதாரித்தனம், ஊழல் ஆகியவற்றால் தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடுகிறது. கஜானாவை நிரப்ப, மதுக்கடைகளைத் திறந்து, ஏழை எளிய மக்களின் வாழ்க்கையையும் தள்ளாட்டத்தில் வைக்கிறது. ஆக‌, நோய்கள் பெருகிறது, அதனால் மருத்துவ வணிகமும், அதையொட்டிய மருத்துவ/உயிர்க் காப்பீடு வணிகமும் பெருகி, மக்களை அமைதியாக "போட்டுத்தள்ளும்" வேலைகளை அரங்கேற்றி வருகிறது. குடிப்பழக்கத்தால் 35 முதல் 45வயதுடைய‌ எண்ணற்ற இளைஞர்களின் உடலில் கல்லீரலும், சிறுநீரகமும் காணாமல் போய்கொண்டிருக்கின்றன. நாட்டிற்கு தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய இளையதலைமுறையினரில் பெரும்பகுதியினர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வீரமிழந்து, திறமையிழந்து, ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை பெற்றுத்தரும் திறன் இழந்து, குடும்பத்தில் மதிப்பிழந்து நடைபிணமாய் இருப்பதை கண்கூடாக காண்கிறோம்.

எத்தனையோ குடும்பங்களில் தற்காலிகமாக குடிப்பழக்க காணாமல் போனது ஒரு வாய்ப்பு. ஆனால், மதுக்கடைகளுக்கு பதிலாக வருமானத்தை பெற மாற்று வழி எதையும் இதுவரை சிந்திக்காத அதிகாரிகள், அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் வழக்கம்போல் இந்த பொன்னான வாய்ப்பையும் தவறவிட்டுள்ளனர். ஆளும் தமிழக அரசு கண்டிப்பாக டாஸ்மாக் கடைகளை திறக்கும் என்று தெரிந்துகொண்ட சில எதிர்க்கட்சிகள், தங்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்களே மதுபான ஆலைகளை நடத்தி வந்தாலும், சிறிதும் கூச்சமின்றி டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று விளம்பரப் பேச்சு பேசுகின்றனர்.

மதுவிலக்கு சாத்தியமில்லை என்று சொல்ல வந்த அரசு பக்கத்து மாநிலங்களில் மது கிடைக்கிறதே என்று சொத்தைக் காரணம் காட்டுகிறது. குடிப் பழக்கத்தை சமுதாயத் தீமை என்று அரசு கருதவில்லை என்றுதானே ஆகிறது? அப்புறம் ஏன் மாற்று பற்றி யோசிக்கப் போகிறது? ஐந்தோ பத்தோ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த குடிகெடுக்கும் தீமையை ஒழிக்க மாற்று கண்டறிவோம் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுக்கும்படி அரசியல் கட்சிகளை கட்டாயத்திற்குள்ளாக்குவது எப்படி என்று யார் யோசிக்க வேண்டும்? மக்கள்தான்!


Post a Comment

0 Comments