இனி மாநகராட்சி அதிகாரிகளோடு கொரோனா பரவுதலை தடுக்கும் பணியில் இணைந்து வேலை செய்ய ஏராளமான அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். அதனால் அதிகாரிகள் ஆர்வமுள்ளவர்களின் முகவரிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். இது தவிர சுகாதார மேற்பார்வைப் பணி செய்ய மூன்று மாத தற்காலிக வேலைக்கு சுமார் நான்காயிரம் ஆட்கள் தேவை என்ற செய்தி பத்திரிகையில் வந்துள்ளது. பல இடங்களில் பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்த வசதிகள் அமைத்து வருகின்றனர் என்ற தகவல் வருகிறது.
இவை சீனாவிலிருந்து கிளம்பிய கொரோனா வைரசினை எதிர்த்து நடக்கும் போரின் தீவிரம் அதிகரித்துள்ளது என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. உலகில் பத்து லட்சம் பேரைத் தாக்க நான்கு மாதங்கள் ஆயின ஆனால் 20 லட்சம் பேரை வெறும் 14 நாட்களில் தொற்றிக்கொண்டது. இது பரவுதலின் வேகம் அதிகரிக்கும் அபாயத்தை உணர்த்துகிறது. பாரதத்தில் கவலைக்குரிய மாநிலங்களில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது . 1683 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் மருத்துவ பரிசோதனை, நோயாளிகளை தனிமைப்படுத்துவது, நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்துவது போன்ற பரவுதலைக் கட்டுப்படுத்த கையாளப்படும் பணிகளுக்கு பல மடங்கு ஆட்கள் தேவை. அந்த அளவில் ஆட்கள் இன்று அரசிடம் இல்லை. ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றோர் லட்சக்கணாக்கானவர்கள் இருக்கிறார்கள். அனுபவமும், பேரிடர் உதவிப் பயிற்சியும் உடைய. அவர்களை உடனே அரசு இந்த பணியில் இணைக்க வேண்டும்.
தமிழக அரசு தற்போது தேர்வாகி பயிற்சியில் உள்ள கான்ஸ்டபிள்கள் எட்டாயிரம் பேரும் உடனே பணியில் சேர வேண்டும் என்று அறிவித்திருப்பது ஆள் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அவரவர் பகுதியின் காவலர்கள் ஆவோம்.
பொதுமக்கள், இளைஞர்கள் , தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர் அரசுடன் இணைந்து அவரவர் பகுதியினை பாதுகாக்க முன்வரவேண்டும். அவரவர் பகுதியில் பரிசோதனை, அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கு விநியோகம், ஆயுஷ் கூறிய ஆயுர்வேத முறைகளை பின்பற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பணிகள் செய்ய வெளியிலிருந்து ஆட்கள் வரப்போவதில்லை
நம் பகுதியையும் , நம் பிள்ளைகளையும் காக்க தொண்டுள்ளம் உள்ளோர் களத்தில் இறங்க வேண்டும். அதிகாரிகளின் மேற்பார்வையுடன் தகுந்த பாதுகாப்போடு தங்கள் பகுதியிலேயே பாதுகாப்பாக இயன்ற உதவிகளை செய்யவேண்டிய தருணம் வந்து விட்டது.
ஊரடங்கு தளர்த்துவது பற்றி பேச்சு அடிபடும் போதே ஊரடங்கு இல்லாத நிலையில் ஊர் ஒழுங்கைக் கட்டிக் காக்க அதிக அளவில் அலுவலர்கள் தேவை என்பது உணரப்பட்டிருப்பது நல்ல செய்தி.
0 Comments