நம் நாட்டில் இயற்கை இடர்ப்பாடு ஏற்படும்போதெல்லாம் மக்களிடையே, பிறர் கஷ்டம் காண சகியாது, ஏதேனும் செய்தாகவேண்டும் எனும் அற உணர்வு மிக இயல்பாய் உண்டாவதை நாம் சமீபகாலங்களில் கண்ணார காண்கிறோம்.
தற்போதைய உலகளாவிய கொரோனோ தொற்று இடர்பாடால், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் முடங்கிய நிலையில், நமது தமிழகத்தில், ஆன்மிக பெரியவர்கள், நாட்டுப்பற்றுள்ள இளைஞர்கள் தங்களது பகுதிகளில் கஷ்டப்படும் மக்களுக்கு செய்துவரும் அறப்பணிகள் மிகுந்த பாராட்டுக்குரியது. அரசாங்கம்தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு என்று மேலை நாட்டு மக்கள் கருதும் இந்த நாட்களில், நமது நாட்டு மக்கள், அரசாங்கத்தின் எந்தவித உத்தரவுக்கும் காத்திராமல் தன்னெழுச்சியாக, மனிதமாண்பு காக்கும் பொருட்டு, செய்யும் சேவைப்பணிகள் நிச்சயம் பலருக்கும் முன்னுதாரணம். இதோ அந்த முன்னுதாரண முத்துக்களில் சில:
கோயம்புத்தூர்:
ஆன்மிக ஈடுபாடுள்ள திரு.குமார் அவர்கள், 30டன் அரிசியை உணவு சமைக்க சேவாபாரதி அமைப்பிற்கு வழங்கியுள்ளார். இவர் சமிபத்தில் நடைபெற்ற தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேக விழாவில் தங்கமுலாம் பூசுவதற்காக, தனது வீட்டையே அடமானம் வைத்து நன்கொடை வழங்கியவர்.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு எனும் அமைப்பு, விருட்சம் அகமகிழ் அறக்கட்டளை உதவியுடன் 120 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆலாந்துறையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 40 குடும்பங்கள் மற்றும் சிவானந்த காலனி, செட்டி வீதி, குறிச்சி, மதுக்கரை, குனியமுத்தூர் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.
சிதம்பரம்:
அன்னம் பாலிக்கும் சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் கொரோனா கொடுமை தீர, நடராஜா கோயில் பாஸ்கர தீட்சதர் குழுவாக , ஏழைமக்கள் வீடு தேடிச் சென்று உணவு அளித்து வருகிறார்.
திருவள்ளூர்:
பொன்னேரி சுற்றுவட்டார கிராமங்களில் [ பாக்கம், கானவந்துறை, பிரளயம்பாக்கம்] விடுதலை சமூக அறக்கட்டளை மூலம் திரு. ஆறுமுகம் எனும் இளைஞர், சேவைப்பணிகளை ஒருங்கிணைத்து 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொண்டு செய்கிறார்.
சென்னை :
அசோக் நகரில் ஆஞ்சநேயர் ஆலய அறக்கட்டளை, அருகில் உள்ள நல்லான்குப்பம் பகுதிவாழ் 600 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கியது
திருவொற்றியூர் பகுதியில் அலிபாஷா எனும் சமூக அக்கறையாளர், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஒரு குடும்பத்திற்கு ரூ.1200 வீதம் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருள்கள் விநியோகம்
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள 120 வீடுகள் இருக்கும் சன்ஷைன் அடுக்ககத்தில் வித்தியாசமான காட்சி
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தினசரி ஒரு மதிய உணவு பொட்டலம் வீதம் அனைத்து வீடுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டு ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் மூலம் பசியால் வாடுபவர்களுக்கு தினசரி உணவளிக்கப்பட்டுவருகிறது. அரசுப்பள்ளி ஆசிரியை திருமதி.வெண்ணிலா இப்பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.
தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ ஸ்ருங்கேரி ஸாரதா தேவி மடத்தில் தினசரி 5000 பேருக்கு தேவையான உணவு சமைக்கப்பட்டு, உணவு பொட்டலங்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆன்மிக அன்பர்களால் வழங்கப்படுகின்றன.
பொதுமக்கள் பலரும் இச்சேவைக்கு தேவையான மளிகைபொருட்களை தானமாக அளிக்கின்றனர்.
கொடுங்கையூரில், சீதா என்பவர் Street Vision எனும் குழுவின் பெயரால் பகுதிவாழ் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
மருத்துவர்கள் நோயாளிகளை கவனிக்க, காவல்துறை ஊரடங்கை கவனிக்க, மக்களை காக்கும் பணிகளில் அரசு நிர்வாகம் இறங்கியிருக்க, அரசுக்கு இணையாக, "மக்கள் சக்தி" களத்தில் இறங்க எப்பொழுதும் தயங்கியதில்லை என்று ஒவ்வொரு பேரிடர்சமயத்திலும் நிருபிக்கப்பட்டுவருகிறது. அத்தகைய மக்கள் சக்திக்கு உரமாக இருப்பது, ஆன்மிகமும், தேசப்பற்றும் என்பதுதான் இந்த நிகழ்வுகளின் அடிநாதம் !
0 Comments