நல்ல செய்தி-2

மருந்து தட்டுபாட்டை தகர்த்தெறிந்த தன்னார்வலர்.

கடந்த வருஷம் [2019] கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராணிப்பேட்டை ஸ்வயம்சேவகர் பாண்டியராஜனுக்கு, கண்ணில் அவ்வப்போது போட வேண்டிய சொட்டு மருந்து தீர்ந்து விட்டது. சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த அந்த மருந்தை கொரோனா ஊரடங்கு சமயத்தில், எப்படி சென்னையிலிருந்து வாங்கி வருவது என்று கவலையுற்றார். அவர் தன்னுடைய மருந்து தேவையை முக நூல் பக்கத்தில் பதிந்தார். சென்னையில் உள்ள நண்பருக்கும் தெரிவித்தார். சென்னை நண்பர் மருந்தை கடையில் வாங்கி, வாகனசீட்டு அனுமதிக்கு முயற்சித்தும் கிடைக்காததால் மருந்தை அனுப்ப முடியாமல் தவித்தார். இந்த சங்கடமான சூழ்நிலையை புரிந்து கொண்ட ராணிப்பேட்டையை சேர்ந்த இன்னொரு ஸ்வயம்சேவகர், ஏப்ரல் 21 அன்று ராணிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு இரு சக்கர வாகனத்தில் பயணித்து மருந்தை வாங்கிக்கொண்டு மீண்டும் ராணிப்பேட்டைக்கு மருந்தோடு திரும்பினார்.

இது என் தேசம் என் பொறுப்பு

கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான நடைமுறை சிக்கல்களை குறைக்க, பாரதி சேவா சங்கம் (BSS) முதியோர் சேவை உதவி தொலைபேசி எண் அறிவித்திருந்தது. ஏப்ரல் 26 அன்று சென்னை ரங்கராஜபுரம் மீனாட்சி சுந்தரம் என்பவர், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் கொடுத்திருந்த BSS முதியோர் சேவை மைய தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரக செயலிழப்பால் ஏப்ரல் 26 அன்று அதிகாலை 3:00மணிக்கு உயிரிழந்த தனது நண்பரின் மகனான‌ 30 வயது குரு தத் எனும் இளைஞரின் உடலை, நெசப்பாக்கம் மயானம் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி வேண்டும் எனக்கேட்டார். இது கொரோனா ஊரடங்கு காலத்தில் முதியோர்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடு. இருந்தபோதிலும், ஆம்புலன்ஸ் பெற்றுத் தர முயற்சிக்கிறோம் என்றனர். மாம்பலத்தை சேர்ந்த ஸ்வயம்சேவகர் கல்யாணராமன், உடனே பொதுமருத்துவமனையை தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் / அமரர் ஊர்தி பற்றிய விபரங்களை கேட்க , கொரோனா பணிச் சுமை மற்றும் நோயாளிகள் முன்னுரிமை இவற்றை கொண்டு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது எங்கள் பணிதான் நாங்கள் நிச்சயம் செய்வோம் என்ற அரசு பொதுமருத்துவமனை ஊழியரின் பொறுப்பான பதிலை கேட்ட கல்யாணராமன், தனியார் ஆம்புலன்ஸ் சேவையை ஏற்பாடு செய்தார். அதற்குள், இறந்த இளைஞரின் தகப்பனார் அரசு மருத்துவமனையே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துவிட்டது எனும் விபரத்தை தெரிவித்தார். தேவை பூர்த்தியாகிவிட்டது என்பதை தெரிந்துகொண்ட கல்யாணராமன் தாங்கள் மகனின் ஈம்ச்சடங்குகளை கவனியுங்கள் என்றார். சடங்குகள் முடிந்த பின்னர், கேரளத்திற்கு செல்லும் முன் கல்யாணராமனை தொலைபேசியில் அழைத்து, முன்பின் தெரியாத எனக்கு பொறுப்பாக உதவி செய்த உங்களுக்கு எனது நன்றிகள் என்றார் அந்தத் தந்தை.

Post a Comment

0 Comments