ஒட்டகப் பாலும்
அருண் போத்ராவின் சந்தோஷமான அனுபவமும்.
மும்பை,செம்பூரில் வசிக்கும் நேஹா சின்ஹா என்பவரின் ஏப்ரல் 4 அன்றைய ட்வீட்: “உணவு ஒவ்வாமை & ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட எனது மூன்றரை வயது குழந்தைக்கு, ஒட்டகத்தின் பால் தேவை. கொரோனா ஊரடங்கால் ராஜஸ்தானிலிருந்து அதனை தருவிக்க முடியாத நிலை.உதவி வேண்டும்”. அந்த குழந்தையின் பிரச்சினைக்கு ஒட்டகப் பால் மருந்து. ஏப்ரல்6 வரை பதிலே வராத நிலை. ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அருண் போத்ரா என்பவரால் இந்தப் பதிவை சாதாரணமாக கடந்துபோக முடியவில்லை. குழந்தையின் தேவைக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று தவிப்புடன் தனது தொடர்பில் இருப்பவர்களிடம் விஷயத்தை தெரிவித்ததை அடுத்து, மும்பையில் அத்விக் எனும் நிறுவனம் ஒட்டகப்பால் வழங்குவதை அறிந்துகொண்டார். தன்னுடைய முயற்சியில், தான் தொடர்பு கொண்ட அனைவரும் உதவியாக இருந்தது அருண் போத்ராவுக்கு ஊக்கமளித்தது. ஒட்டகப்பால் வழங்கும் அத்விக் நிறுவன உரிமையாளர் அந்தேரி பகுதியில் உள்ள தனது முகவர் ஒருவர் மூலம் 400 கிராம் ஒட்டகப்பால் பொடியை சேகரித்து கொண்டு நேஹா சின்ஹாவின் வீட்டில் கொண்டு சேர்க்க உதவினார். இத்தனைக்கும் அத்விக் நிறுவன உரிமையாளரின் தந்தையார் இறந்து 2 நாட்கள்தான் ஆகியிருந்தது. 400கிராம் பொடி போதாது என்று தெரியவந்த போது, ஐ.பி.எஸ் அதிகாரி அருண் போத்ரா தனது வாட்ஸ் அப் குழுக்களில் பதிவிட்டார். பிறகு ரயில்வே மூலம் உதவி கேட்கலாம் என்று எண்ணியவர், வடமேற்கு ரயில்வே பயணிகள் துறை மேலாளர் தருண் ஜெயின் என்பவரை அணுகி விஷயத்தை சொன்னார். ரயில்வே அதிகாரியும், தனது துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி, பஞ்சாப் லூதியானாவிலிருந்து மும்பை பாந்த்ரா முனையம் வரை வரும் சரக்கு ரயில் மூலம் ராஜஸ்தானிலிருந்து ஒட்டகப்பாலை கொண்டுவரலாம் என்று முடிவெடுத்தனர்.
ராஜஸ்தானில் சாத்ரி எனும் பகுதியில்தான் ஒட்டகப்பால் கிடைக்கிறது. சாத்ரி பகுதிக்கும், சரக்கு இரயிலின் பயணதிட்டப்படி, ரயில் நிற்கும் ஜோத்பூர் ரயில் நிலையத்திற்கான தூரம் அதிகம். எனவே பயணதிட்டத்தில் இல்லாத ரயில் நிலையமான, சாத்ரிக்கு அருகில் உள்ள பால்னா [ FALNA ] நிறுத்தத்தில் சரக்கு இரயிலை நிறுத்தி ஒட்டகப்பாலை பெறுவது என முடிவெடுக்கப்பட்டது. உறைந்த நிலையில் 20 லிட்டர் ஒட்டகப்பாலும், மேலும் 20 கிலோ ஒட்டகப் பால்பொடியும் கொள்முதல் செய்யப்பட்டு சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டு செம்பூரில் ஏப்ரல் 10 அன்று சேர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு நடுவே, மும்பையில் வேறொரு குடும்பமும் ஒட்டகப் பால் தேவை என்றது. ஆனால் சரக்கு ரயில் ராஜஸ்தானிலிருந்து புறப்பட்டுவிட்டது. சினேகா சின்ஹாவிடம் விஷயத்தை சொல்லியபோது, அவர் மகிழ்ச்சியுடன் 5 கிலோ ஒட்டகப் பால் பொடியையும் 5 கிலோ ஒட்டகப் பாலையும் அந்த குடும்பத்துக்கு கொடுத்து உதவினார்.
“ஒரு காவல்துறை அதிகாரியாக மக்களிடமிருந்து வரும் குறைகளை தீர்த்து வைப்பதற்கு சமூக வலைதளங்கள் பேருதவி. இப்படி மக்களின் தேவைகளை தீர்த்து வைக்கும்பொழுது கிடைக்கும் திருப்தி இருக்கிறதே அது மிகவும் சந்தோஷமான அனுபவம்” என்கிறார் அருண் போத்ரா.
ஊரடங்கிலும் சமூக வலை வீசி இணைந்த கைகள்
சென்னையில் வசிக்கும் அன்பர் ஒருவர் தனது 2 வயது பெண் குழந்தைக்கு வலிப்பு நோய்க்கான கொடுத்து வந்த மருந்து தீர்ந்துபோய் விட்டது; வெளி நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட விலை உயர்ந்த மருந்து அது. (இந்தியாவில் அந்த மருந்துக்கு சமமான வேறு மருந்து கிடையாது). மருந்து சாப்பிடவில்லையென்றால் குழந்தைக்கு மிகவும் கஷ்டம் ஏற்படும் என்று மருத்துவர் கூறியது நினைவுக்கு வர, ஊரடங்கு சூழ்நிலையில் எப்படி அந்த மருந்தை வாங்குவது என்று திகைத்தார். சென்னையில் வசிக்கும் அவரது நண்பர் தேவாசீஷ் கை கொடுத்த விதம் அபாரம்.
இதுபோன்ற ஒரு சூழ்நிலையை, ஒடிசாவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அருண் போத்ரா கையாண்ட விதத்தை சமீபத்திய செய்திகளில் தான் படித்தது நினைவுக்கு சென்னை தேவாசீஷுக்கு ஞாபகம் வந்தது. உடனே ட்விட்டர் மூலம்போத்ராவை தொடர்பு கொண்டு தன் நண்பர் படும் கஷ்டத்தை தெரிவித்து உதவி கேட்டார். சென்னையில் 2வயது குழந்தைக்கு தேவைப்படும் வலிப்பு நோய்க்கான மருந்து இந்தியாவில் யாரிடமாவது இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ட்வீட்டில் தகவல் தெரிவித்தார். சற்று நேரத்திற்குள்ளாகவே பதில்கள் குவிந்தன. அதில் 3 நபர்களுடைய தகவல்கள் உபயோகமுள்ளதாக இருந்தன. நாகர்கோவிலிருந்து ஒருவர், மத்தியபிரதேசத்தின் போபாலிலிருந்து ஒருவர், பெங்களூரிலிருந்து இன்னொருவர் என மூவர். பெங்களூரில் வசிக்கும் சங்கர ராமன், தன் மகளுக்கு கொடுத்து வரும் வலிப்பு நோய்க்கான மருந்தை தர முன்வந்தார். இதே சமயத்தில், பெங்களூரை சேர்ந்த மற்றுமொரு நபருக்கும் இம்மருந்து தேவைப்பட்டது !
ஊரடங்கு சமயத்தில் மருந்தை எப்படி கொண்டு சேர்ப்பது என யோசித்த அருண் போத்ரா, மருந்து இருக்கும் இடம் பற்றிய தகவல், தேவைப்படுபவருக்கு கொண்டு சேர்ப்பது பற்றிய விஷயத்தை ட்வீட் செய்தார். இந்த ட்வீட் உரையாடல்களை கவனித்து வந்த பெங்களூரு D C P .பீமசங்கர், மருந்தை கொண்டு சேர்க்க தான் உதவுவதாகக் கூறி முன்வந்தார். இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 26 (ஞாயிறு) நள்ளிரவு 1:30மணிக்கு சில காவலர்கள், பெங்களூரு சங்கர ராமன் வீட்டு கதவை தட்டினார்கள்; மருந்து கிடைத்த்து; கொண்டுசேர்க்க விரைந்தார்கள். அதிகாலையில் 20 மாத்திரைகளை பெங்களூர் குடும்பத்திற்கும், இன்னுமொரு 20 மாத்திரைகளை திங்கள் காலை சென்னை குடும்பத்திற்கும் கொண்டு சேர்த்தனர்.. அதேசமயத்தில், நாகர்கோவிலிருந்து 20 மாத்திரைகள் சென்னைக்கு லாரி மூலம் வந்துகொண்டிருந்தது!
சமூக வலைதளம் மூலமாக, இவ்வளவு விரைவாக செயல்பட்ட காவல்துறையினரை நெட்டிசன்கள் உள்பட அனைத்து தரப்பினரும் மிகவும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். எண்ணங்கள் வலிமையானவை. அவை செயல்களாக உதவும் சங்கிலியில் பயண்ணித்த இந்த நிகழ்வு, “இமயத்தில் ஒருவன் இருமினான்; குமரியிலிருந்தொருவன் மருந்துகொண்டோடினான்” எனும் கவிஞர் பாரதிதாசன் வரிகளை கொரோனா ஊரடங்கிலும் மெய்ப்பித்திருக்கிறது.
(இன்று -- ஏப்ரல் 29 -- பாரதிதாசன் பிறந்தநாள்.)
0 Comments