சேவாபாரதி தமிழ்நாடு அமைப்பின் 20வது ஆண்டு விழா, அக்டோபர் 19, 2019 அன்று சென்னையில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்றது. மேதகு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். கல்வி, மருத்துவம், பேரிடர் நிவாரணம், வாழ்வாதார உயர்வு துறைகளில் சேவாபாரதியின் பணிகளை ஆளுநர் பெரிதும் பாராட்டினார். கஜா புயலின் போது சேவாபாரதி தொண்டர்கள் மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தாம் நேரில் கண்டுள்ளதாக தெரிவித்தார். அனைவருமே எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால் ஊழல் என்பது நாட்டில் இருந்து நீங்கி விடும். வசுதைவ குடும்பகம், உலகனைத்தும் ஓர் குடும்பம் என்பதே நமது கலாச்சாரம். அனைவரும் பிறருக்கு உதவுவதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்று பேசிய ஆளுநர், "தமிழ் மிக இனிமையான மொழி, தமிழை நான் மிக விரும்புகிறேன், இம்மொழியை கற்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்.
சின்மயா மிஷனின் ஆச்சார்யா பூஜனீய சுவாமி மித்ராநந்தா ஆசியுரை வழங்கி பேசும் போது "2004 சுனாமி, 2015 சென்னை வெள்ளம், கடந்த ஆண்டு கேரளா வெள்ளம் உள்ளிட்ட பல பேரிடர் காலங்களில் சேவாபாரதி செய்த பணிகளை குறிப்பிட்டார். ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கேந்திரா, ஈஷா, அமிர்தானந்தமயி மடம், சின்மயா மிஷன், சங்கபரிவார் உள்ளிட்ட பல சேவை மற்றும் தொண்டு நிறுவங்களின் சீரிய பணியால் நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் காப்பாற்றப்பட்டு வருகிறது, பலரின் வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என குறிப்பிட்டார். இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு பயிற்சிகள் அளிப்பது அவசியம், அவர்களின் திறன் மேம்படும்போது அவர்களும் முன்னேறுவார்கள், தேசமும் முன்னேறும் என குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ். தென்பாரத சேவா பிரமுக்,திரு கி. பத்மகுமார் தனது சிறப்புரையில், ஆன்மீகமும், தொண்டும் நிறைந்த பூமி தமிழகம், இங்கு எண்ணற்றோர் தோன்றியுள்ளனர் என குறிப்பிட்டார் . சேவாபாரதி தமிழ்நாடு சுமார் 1,75,000 சேவைப்பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்ததுடன், எளிய குடும்பத்தில் பிறந்து சேவாபாரதி உதவியால் உயர்நிலை அடைந்த சில உதாரணங்களை குறிப்பிட்டார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக தொழு நோயாளிகளுக்கு சேவை செய்து வரும் திரு R . சிவா மற்றும் குழந்தைகளுக்காக மனநல காப்பகம் நடத்தி வரும் திரு. R. ராஜேந்திரன் ஆகியோருக்கு "சேவாரத்னா" விருதை ஆளுனர் வழங்கினார்.
நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கி, தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் சேவாபாரதி நிர்வாகிகள், தொண்டர்கள், கொடையாளிகள், பிற சேவை அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
சேவாபாரதி தமிழ்நாடு கடந்த 20 ஆண்டு பயணத்தை ‘சேவைச் சுவடுகள்’ என்ற பெயரில் ஒரு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. மலரை சுவாமி மித்ரானந்தா அவர்கள் வெளியிட ஒசூர் ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்ல தலைவர் திரு ரவிசங்கர் பெற்றுக் கொண்டார்
0 Comments