“காஷ்மீரில் சங்க சேவையால் தேசபக்தி வலுப்பட்டது”: ஆர்.எஸ்.எஸ்


ராஜஸ்தானில் புஷ்கர் நகரில்  நடைபெற்ற ஆர் எஸ் எஸ்ஸின் மூன்று நாள் அகில பாரத சமன்வய கூட்டம் செப்டம்பர் 9 அன்று நிறைவடைந்தது.  நாடு நெடுக பல்வேறு  துறைகளில் இயங்கும் 36 அமைப்புகளின் 195  பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.  இதுபோன்ற சமன்வய  கூட்டத்தில் தீர்மானம் எதுவும் இயற்றப்படுவதில்லை.
கடந்த ஆண்டு கர்நாடகாவின் தர்மஸ்தலா நகரில் கூடியபோது எல்லா அமைப்புகளும் “மரம் நடுவோம், தண்ணீர் பாதுகாப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம்” என்ற இலக்குடன் செயல்பட தொடங்கியிருந்தன. சமுதாயத்தில் ஏற்படும் கலாச்சார   சீரழிவை  தடுப்பதற்கும் முயற்சி தொடங்கியிருந்தது.  இவற்றின் பயனாக கிடைத்த அனுபவங்கள் இந்த மூன்று நாள் கூட்டத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
கூட்ட முடிவில் ஆர் எஸ் எஸ்ஸின் அகில பாரத துணை  பொதுச்செயலாளர் தத்தாத்ரேய  செய்தியாளர்கள்  கூட்டத்தில்பேசினார்.
வரும் காலகட்டங்களில் வனவாசி மக்களுக்கு சட்ட ரீதியாக கிடைக்க வேண்டிய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி உள்ளிட்டவற்றை பெறுவதை உறுதி செய்யும்   சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்படும்  என்று  தத்தாத்ரேய  தெரிவித்தார்.
தேசத்தின் எல்லையோரப் பகுதிகளில் வசிப்போருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி கிடைக்கச் செய்வதில் அரசுடன் கூடவே சமுதாயத்திற்கும் பொறுப்பு உண்டு என்னும் உணர்வுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்வோம். அங்கு மக்கள் மனதில் தேசபக்தி கிளர்ந்தெழச் செய்வதுடன் அவர்கள்  சுய சார்புடன் வாழச் செய்ய முயற்சி செய்வோம். தேசிய குடியுரிமை பட்டியல்  (என் ஆர் சி) நடவடிக்கையை அவர் வரவேற்றார். பட்டியலில் உள்ள குறைகளை நீக்க வேண்டும் என்று அவர் கோரினார். கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தத்தாத்ரேய அரசியல் சாசனம் வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ் வரவேற்கிறது, சமுதாயத்தில் ஏற்ற இறக்கங்கள் உள்ள வரை இட ஒதுக்கீடு அவசியம் என்று குறிப்பிட்டார்.
ஒருவரை கூட்டத்தார் அடித்துக் கொல்லும் நிலவரம் குறித்து கருத்துக் கூறுகையில் அவர் எந்த வகை வன்முறையையும் நாங்கள் ஏற்க மாட்டோம். யாரானாலும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்று தெளிவாக்கினார்.
அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை மத்திய அரசு நீக்கியதும் நாடு முழுவதும்  மகிழ்ச்சி அலை  வீசியது. எத்தனையோ ஆண்டுகளாக சங்கம் உள்ளிட்ட எல்லா அமைப்புகளும் நாட்டில் “ஒரே தேசம் - ஒரே சாஸனம் -  ஒரே கொடி”  என்பதை வலியுறுத்தி வந்தன. காஷ்மீரிலும் லத்தாக்கிலும் சங்கம் செய்துவரும் சேவா காரியங்களால் அங்கே தேசிய உணர்வு வலுவடைந்துள்ளது

 இவ்வாறு தத்தாத்ரேய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments