அமர்நாத் யாத்திரை (பகுதி -1)
- நரேந்திர செகல் -
பாரதத்தின் பண்டைய நூல்கள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி, ஸ்ரீ அமர்நாத் ஷேத்திரத்தில் அமைந்துள்ள புனித குகையானது, படைப்பின் கடவுளும், ஆதியில் தோன்றியவரும் பூஜைக்குரியவருமாகிய, சிவசங்கரரின் வசிப்பிடமாகும். இந்த புனிதமான குகையில் உரைந்துள்ள ஷங்கரர் இயற்கையில் தாமாகவே சுயம்புவாக தோன்றி பனியினால் உருவாகிய சிவலிங்கதின் வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். எனவே அமர்நாத் ஷேத்திரமானது படைப்பின் தொடக்கத்திலிருந்தே மனித சமுதாயத்தின் புனித ஸ்தலமாக இருந்து வருகிறது.
மனிதன் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன் ஆகிய வர்ணங்களால் பிரிக்கப்படும் முன்பிருந்தே இந்த ஷேத்திரம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக இருந்து வருகிறது . எனவே இந்த ஷேத்திரம், சாதி, மதம், இடம் போன்ற குறுகிய சுவர்களுக்கு அப்பாற்பட்டு இந்த உலகம் முழுவதையும் சேர்ந்தது ஆகும்.
ஸ்ரீநகருக்கு கிழக்கே சுமார் 140 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அமர்நாத்தின் புனித குகை சுமார் 15000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
50 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த குகை மற்றும் தீர்த்தயாத்திரை பற்றிய வர்ணனை, 5,000 ஆண்டுகள் பழமையான 'நிலமத்' புராணத்திலும் காணப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற காஷ்மீர் வரலாற்றாசிரியர் கல்ஹான் 12 ஆம் நூற்றாண்டில் தனது 'ராஜதரங்கினி' புத்தகத்தில் இதைப்பற்றி விவரித்துள்ளார். 'ஐயனா-இ-அக்பர்' புத்தகத்தில் அபுல் ஃபசல் மற்றும் 'தி வாலி ஆப் காஷ்மீர்' கிரந்தத்தில் பிரபல ஆங்கில எழுத்தாளர் வால்டயர் லாரன்ஸ் ஆகியோர் இதைக் குறித்து விவாதித்துள்ளனர்.
அமர்நாத்திலிருந்து தொலைதூரத்தில் அமைந்துள்ள கேரளாவில் வசித்து வந்த ஆதிசங்கராச்சாரியர் இந்த ஸ்தலத்தை அடைந்து இங்குள்ள சிவலிங்கத்தை வணங்கினார் என்பதன் மூலம் இதன் மகத்துவத்தை அறியலாம். அவரது நினைவாக ஸ்ரீநகரில் சங்கராச்சாரியார் மலையில் சங்கராச்சாரியார் கோயிலும் உள்ளது. (துரதிர்ஷ்டவசமாக அடிப்படைவாதிகள் இந்த சங்கராச்சாரியார் மலையின் பெயரை 'தக்-இ-சுலைமான் மலை' என்று மாற்றிவிட்டனர் )
சுவாமி ராமதீர்த்தா, சுவாமி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் ஆகியோர் அமர்நாத்திற்கு வந்து பூஜை செய்துள்ளார்கள். 1898ல் சுவாமி விவேகானந்தரின் உதவியுடன் இங்கு வந்த சகோதரி நிவேதிதா, இந்த இடத்தைப் பற்றி நினைவுகூர்கையில் இதன் புனிதத்தன்மையையும், நட்பும் அமைதியும் கலந்த இதன் சூழலையும் குறித்து விவரித்துள்ளார்.
பரமசிவன் அன்னை பார்வதியிடம் அமர்நாத் தோன்றிய கதையை இங்குதான் கூறியதாக நம்பப்படுகிறது. சுவாரஸ்யமான பல விளக்கங்களும் காணப்படுகின்றன.
பரமசிவன் தம் கழுத்தில் புனைந்துள்ள கபால மாலையின் ரகசியத்தைப் பற்றி அவரிடம் கேட்குமாறு தேவரிஷி நாரதர் அன்னை பார்வதியிடம் கூறினார். இந்த மாலையில் உள்ள கபாலங்கள் நீங்கள் எடுக்கும் வெவ்வேறு பிறப்புகளின் சின்னமாக அமைந்துள்ளது என்று அன்னை பார்வதியின் வற்புறுத்தலின் பேரில், சிவனார் கூறினார். அப்போது அன்னை பார்வதி, பிறப்பு இறப்பு என்ற சக்கரத்தில் தாமும் உழன்று கொண்டு இருப்பதை உணர்ந்தாள். முக்தி அடையும் வழியை பலமுறை வற்புறுத்தி கேட்ட பின்னர், பரமசிவன் அமர்நாத் ஷேத்திரத்தின் கதையைக் கூற ஒப்புக்கொண்டார்.
தாங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் இந்த கதையை கேட்க கூடாது என்பதற்காக, சிவபெருமான் ஒரு சிவ பூதகணத்தை அழைத்து, அருகிலுள்ள செடி கொடிகள், புதர்கள் அனைத்தையும் எரித்து சுத்தம் செய்யும்படி கட்டளையிட்டார். கட்டளைப்படியே பூதகணமானவரும் நாலாப்பக்கமும் சுத்தம் செய்தார். ஆனால் பரமசிவனின் மான் தோல் விரிப்பின் கீழே மறைந்திருந்த ஒரு கிளியின் முட்டையை அவர் கவனிக்கவில்லை.
பரமசிவன் பார்வதியிடம் கதையை சொல்லத் தொடங்கினார். சிறிது நேரத்தில், கதைக்கு நடுவில், ஆம்-ஆம் என்று சொல்லியவாறே அன்னை பார்வதி அயர்ந்து உறங்கிவிட்டாள், ஆனால் இதை அறியாத சிவபெருமான் கதையைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில், முட்டை பிளவுற்று அதிலிருந்து கிளி வெளிப்பட்டது. அது அன்னை பார்வதியின் இடத்திலிருந்து கதையைக் கேட்டு ஆம்-ஆம் என்று சொல்ல தொடங்கியது. இவ்வாறுதான் ஒரு முட்டைக்குக் கூட முக்தி கிடைத்தது. கிளியானது மஹரிஷி சுகதேவராக உருவெடுத்து நான்கு வேதங்கள் மற்றும் பதினெட்டு புராணங்களின் ஞானத்தையும் பெற முடிந்தது.
இவ்வுலகத்தின் படைப்பையும் அழிவையும் பற்றிய இரகசியத்தை பரமசிவன் அன்னை பார்வதியிடம் கூறியதை ஒரு ஜோடி புறாக்களும் கேட்டதாக நம்பப்படுகிறது. இந்த இரண்டு புறாக்களும் அமரத்துவம் அடைந்து விட்டன. இந்த இரண்டு புறாக்களும் இன்றளவிலும் கூட பனியினால் ஆன சிவலிங்கத்தை தரிசனம் செய்ய ஒவ்வொரு ஆண்டும் வருகின்றன என்று கூறப்படுகிறது. பல பயணிகள் அவற்றைப் பார்த்திருக்கிறார்கள்.
அமர்நாத் யாத்திரை ஸ்ரீநகரிலிருந்து 96 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பஹல்காமில் இருந்து தொடங்குகிறது. இங்கே அமைந்துள்ள அழகிய மலைத்தொடர்களும் அடர்ந்த காடுகளும் பயணிகளின் மனதை கொள்ளை கொள்கின்றன. பஹல்காமில் இருந்து புனித அமர்நாத் குகை, 46 கி.மீ. தொலைவில் உள்ளது. இருப்பினும், வாகன பாதை பஹல்காமுக்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் உள்ள சந்தன்வாடிக்கு மட்டுமே உள்ளது. மக்கள் சந்தன்வாடியில் இரவைக் கழிக்கிறார்கள்.
இங்கே சிவன் தனது ஜடாமுடியை சந்தனத்திலிருந்து விடுவித்ததாகக் கூறப்படுகிறது, எனவே இந்த இடத்தின் பெயர் சந்தன்வாடி என்று ஆனது. இங்கே மக்கள் கம்புகள் மற்றும் கூடாரங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இவ்விடத்தின் உயரம் 7800 அடி ஆகும்.
பயணிகளுக்கான அடுத்த நிறுத்தம் பிஸ்ஸு டாப் ஆகும். நம்பிக்கையின் படி, சிவபெருமான், தெய்வங்களின் வேண்டுகோளின் பேரில், அவர்களைத் துன்புறுத்திய ராட்சதர்களை இவ்விடத்தில் நன்றாக அரைத்துத் துவைத்து விட்டார். அதனால் இது பிஸ்ஸு(ஹிந்தியில் அறைப்பது) டாப் என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற லிடர் நதியும் இந்த வழியில் ஓடுகிறது.
பயணிகளுக்கான மூன்றாவது நிறுத்தம் ஷேஷ்நாக் கிராமத்தில் 11,000 அடி உயரத்தில் உள்ளது. சிவபெருமான் தனது ஷேஷநாக மாலையை கழற்றி குளத்தின் மீது வைத்து அவற்றை இங்கேயே விட்டுச்சென்றார் என்பது இங்குள்ள ஒரு பிரசித்தமான கதை ஆகும்.
சிறிது தூரம் சென்று சிவபெருமான் தனது அன்பு மகன் விநாயகனையும் விட்டுவிட்டார். இந்த இடத்தின் பெயர் கணேஷ் மலை. இது காஷ்மீரி மொழியில் 'மஹாமானுஷ்' என்று அழைக்கப்படுகிறது. பின்னர் பயணம் பஞ்ச்தர்னியை அடைகிறது. இங்கே சிவபெருமானும் பார்வதி தேவியும் தாண்டவ நடனத்தை ஆடினார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. இங்கே சிவபெருமானின் ஜடா முடியினின்று கங்கை ஐந்து நீரோடைகளாக பிரிந்ததாகவும் ஒரு ஐதீகம் உண்டு. இங்கு பயணிகள் அனைவரும் குளித்து உடலும் உள்ளமும் தூய்மையாகி, புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும், மூன்று முதல் நான்கு மணி நேர பயணத்தில் அமர்நாத் குகையை அடைந்து பனியினாலான கடவுளை தரிசனம் செய்கிறார்கள்.
ரக்க்ஷா பந்தனுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஸ்ரீநகரின் தெற்கு நிலங்களில் இருந்து புனிதமான கழியின் யாத்திரை அங்குள்ள மகா சுவாமி ஜிதேந்திர கிரி ஜி மகாராஜின் தலைமையில் தொடங்குகிறது. அன்றே ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியார் கோயிலில் அர்ச்சனை, வழிபாட்டிற்கு பின்னர் இதன் பயணம் அடுத்தடுத்துள்ள மலைகளை நோக்கி தொடர்கின்றது. இக்கழியின் பயணத்துடன், ஆயிரக்கணக்கான சாதுக்கள் மற்றும் பக்தர்கள் நமசிவாய கோஷமிட்டுக் கொண்டு அமர்நாத்தை நோக்கி நடைபயணத்தை மேற்கொள்கிறார்கள்.
இக்கழியிற்கு அமர்நாத் யாத்திரையின் அனைத்து முக்கியமான இடங்களிலும் ஒவ்வொரு நாள் இரவிலும் பூஜை அர்ச்சனை செய்யப்படுகின்றது. இவ்வாறு சென்று ரக்ஷா பந்தன் அன்று இது அமர்நாத் குகையை அடைகின்றது.
குகையில் சுயம்பு லிங்கமாக தோன்றும் பணியினால் ஆன சிவலிங்கத்தின் அருகில் பார்வதி தேவியின் பிரதியாக இந்தக் கழி வேத கோஷங்களுடனும் சிவ ஸ்துதியுடனும் பிரதிஷ்டை செய்யப் படுகிறது.
அதே நேரத்தில் மஹந்த் தீபேந்திர கிரி சுவாமிகள் அனைத்து சாதுக்கள் மற்றும் அடியார்களுடன் சேர்ந்து சிவபெருமானிற்கும் கழியிற்கும் பூஜை செய்கிறார். இந்த வழிபாட்டிற்குப் பின்னர் அமர்நாத் யாத்திரை நிறைவடைந்ததாகக் கருதப்படுகிறது.
தமிழில் திருமதி அபரஞ்ஜீதா சிவகுமார்.
0 Comments