கேரளா / அக்னிஹோத்ரம்
அக்னி சாட்சியாக நல்லிணக்கம்
கொச்சியில் மே 12 அன்று பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 1008 ஆண்களும் பெண்களும் அக்னிஹோத்திரம் என்ற யக்ஞம் செய்தார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் அகில பாரத பௌத்திக் பிரமுக் ரங்கஹரி, நேஷனல் புக் டிரஸ்ட் நிர்வாக உறுப்பினர் ஈ.என். நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை காஸ்யப வேத ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பு நடத்தியது. இந்த பவுண்டேஷன் மூலம் கேரளத்தில் 70,000 குடும்பங்கள் அன்றாட அக்னி ஹோத்திரத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். நல்ல பலன்கள் கிடைப்பதாக தெரிவிக்கிறார்கள்.
ராஜஸ்தான் / சேவா பாரதி
சமூக நல்லிணக்க கல்யாண வைபோகமே!
அண்மையில் ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் 11 சமூகங்களைச் சேர்ந்த 41 மணமக்களுக்கு கூட்டுத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. நடத்தியவர்கள் சேவா பாரதி அமைப்பினர். குடும்பங்களில் திருமண செலவை குறைக்கும் நோக்குடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பாராட்டி பல துறவிகள் அருளாசி வழங்கினார்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடன் ஒவ்வொரு மனப்பெண்ணுக்கும் துளசிக் கன்று பரிசளிக்கப்பட்டது. பத்தாண்டுகளாக இதுபோல பல சமூகத்தினரையும் ஒரே திருமண அரங்கில் இணைக்கும் நிகழ்ச்சியை சேவா பாரதி நடத்தி வருகிறது. இதுவரை ராஜஸ்தானத்தின் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 1897 மணமக்களுக்கு சேவாபாரதி திருமணம் செய்துவைத்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை நூறு மணமக்கள் இந்த சமூக நல்லிணக்க முயற்சியால் மணவாழ்வில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு மாநில அரசின் சமூக நீதித்துறை சான்றிதழும் வழங்குகிறது.
கர்னாடகா / பாரத –இஸ்ரேல் உறவு
யேமனில் பிறந்து இஸ்ரேலில் மறைந்த ‘நாரத முனி' !
நாடு நெடுக நாரத ஜெயந்தி கொண்டாடப்படுவதற்கு சற்று முன்னால் நாரத முனி நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது என்றால் புதிராக இருக்கிறதல்லவா? இந்த நாரத முனி யேமன் நாட்டில் பிறந்த யூதர். பாரதத்தில் வந்து துறவு ஏற்று நாரத முனி ஆனார். பிறகு இஸ்ரேலில் துறவியாகவே வாழ்ந்து மறைந்தார். அவரது நினைவாக அண்மையில் கர்நாடகாவில் நடந்த கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத இணை பொதுச் செயலர் சி.ஆர். முகுந்தா பேசுகையில் பயங்கர வாதத்தை எதிர்கொள்ளும் பாரதமும் இஸ்ரேலும் இந்த சவாலை இணைந்து சமாளிக்க முடியும் என்றார். இஸ்ரேலில் இருந்து வந்த துறவிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். இஸ்ரேலிய அன்பர்கள் சமஸ்கிருத மொழியில் இறைவணக்கம் பாடியது அனைவரையும் கவர்ந்தது.
ராஜஸ்தான் / பிஷ்னோய் சமூகம்
சமய உணர்வால் சூழல் சினேகிதம்
பிஷ்னோய் சமூக மக்கள் நீல் காய் எனப்படும் மானை கோமாதாபோல புனிதமாக கருதுபவர்கள். அதற்காக உயிரையும் கொடுப்பவர்கள். பாசனக் கால்வாயில் தண்ணீர் குடிக்கப்போய் விழுந்து இறந்த மான்களைப் பார்த்து மனம் வருந்திய மக்கள் தங்கள் விளைநிலத்திலேயே ஆழமில்லாத சிறு குளங்களை வெட்டி அவற்றில் நீர் நிரப்பி வைக்கிறார்கள். மான்கள் தண்ணீர் குடிப்பதற்காக. இதுபோலத்தான் திருமணப்பெண் தன் தன் கல்யாணத்தை முன்னிட்டு ஒரு குளத்தை நிரப்பும் காட்சியை இந்த படத்தில் பார்க்கலாம். ஆங்கில த ஹிந்து நாளிதழில் (மே 22) வெளிவந்த இந்த விவரத்தை தமிழ் இந்து திசை நாளிதழ் (மே 25) வடிகட்டி மக்களின் சமய உணர்ச்சியை மறைத்து செய்தி வெளியிட்டது. மக்களின் சமய உணர்ச்ச்சி சுற்றுச்சூழலை கட்டிக்காப்பதில் உறுதுணையாக விளங்குவதை வாசகர்கள் தெரிந்துகொண்டுவிட்டால் வானம் இடிந்து தலையில் விழுந்துவிடும் என்று ‘இந்து தமிழ் திசை’காரர்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ?
0 Comments