தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்
ஹைதராபாத், மே 24, 2019
தெலுங்கானாவைச் சேர்ந்த ராஜவ்வாவின் கணவர் லட்சுமிராஜன் வேலை தேடி துபாய் சென்று விட்டார்.ராஜவ்வாவுக்கு நெல்மூட்டைகளை நிரப்பும் வேலை கிடைத்தது. தன் அம்மா நாளெல்லாம் குனிந்து நிமிர்ந்து இடுப்பொடிய வேலை செய்வதைப் பார்த்த ராஜவ்வாவின் 13 வயது மகன் அபிஷேக் நெல் மூட்டை நிரப்பும் கருவி ஒன்றைக் கண்டு பிடித்தார். எட்டாவது வகுப்பு படிக்கும் அபிஷேக்கின் ஆசிரியர் அந்தக் கருவியை வடிவமைப்பதில் துணை புரிந்தார். மூட்டையில் நெல் இறங்கும் போதே எடை கண்டுபிடிக்க முடியும். அதற்காக ஒரு எடை மிஷினும் கருவியில் இணைக்கப்பட்டுள்ளது. 5,000 ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த கருவியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சுலபமாக கொண்டு செல்லும் வகையில் இரண்டு சக்கரங்கள் மீது பொருத்தப்பட்டுள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் அபிஷேக்கின் படைப்பாற்றலைப் பாராட்டி 1,16,000 ரூபாய் பரிசளித்தார். அபிஷேக்கின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
நாலு மாநிலம் தழுவிய ஒரு நல்ல செய்தி!
அமிர்தசரஸ், மே 24, 2019
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகிலுள்ள ராணாகலா கிராம விவசாயி சுபராஜ் சிங் தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அவரது நண்பர் ஒருவர் 13 வயது சிறுவன் ஒருவனை சுப்புராஜிடம் விட்டுவிட்டுச் சென்றார். அது 2011 ல். தினேஷ் ஜேனா என்ற அந்த ஒரிசா சிறுவன் குடும்பம் ஹைதராபாதில் வசிக்கிறது. தன் அண்ணனிடம் கிரிக்கெட் விளையாட்டில் சண்டை போட்டுக் கொண்டு 2000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விட்டான் தினேஷ். டெல்லியில் இவனை பார்த்த ஒரு சர்தார்ஜி, தனது நண்பரான இன்னொரு சர்தார்ஜியான சுபராஜிடம் தினேஷை ஒப்படைத்தார். அந்த விவசாய குடும்பத்துக்கு எடுபிடி வேலைகள் செய்து கொடுத்து தினேஷ் பல வித திறன்களையும் வளர்த்துக் கொண்டான்.அதற்கு அந்த பஞ்சாபி விவசாய குடும்பமும் ஊக்கம் கொடுத்தது. மாதம் ஏழாயிரம் ரூபாய் வீதம் அந்தக் குடும்பத்தார் தினேஷ் கணக்கில் செலுத்தி வந்தார்கள். சில ஆண்டுகள் கடந்தன. ஒரு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள எருமை ஒன்றை அவனுக்குப் பரிசளித்தார் சுபராஜ். அதை வைத்து படிப்படியாக பால் பண்ணை ஒன்றை உருவாக்கி விட்டான் தினேஷ். தன் குடும்பத்திடம் கோபம் மறைந்து அம்மாவையும் அண்ணனையும் பார்க்கும் ஏக்கம் ஏற்பட்டது. ஃபேஸ்புக்கில் தன்னுடைய தற்போதைய சீக்கிய தோற்றத்தில் புகைப்படத்தையும் விவரத்தையும் வெளியிட்டான். அவன் அண்ணன் அதைப் பார்த்து சைபர் பிரிவு காவல்துறை மூலம் தம்பியை 2018 ல் கண்டுபிடித்தார். ஒரிசாவில் இருந்து பிழைப்புக்காக தெலுங்கானாவில் வசித்த அந்த குடும்பத்தின் சிறுவனை பஞ்சாப் விவசாயக் குடும்பம் ஒன்று அக்கறை காட்டி திறன் வளர்த்து ஆளாக்கியுள்ளது. பத்திரிகையில் இந்த சிறுவன் பற்றி செய்தி படித்த மகாராஷ்டிராவை சேர்ந்த கௌதம் பிங்களே என்ற கட்டுரையாளர் அந்த பஞ்சாப் விவசாய குடும்பத்தை பாராட்டி த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை எழுதினார்.
தண்ணீர் வங்கி தெரியுமா? காசியில்தான்!
வாரணாசி, மே 24, 2019
உத்தரபிரதேசம் வாரணாசியில் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பும் விஷால் பரத் அமைப்பும் இணைந்து தண்ணீர் வங்கி தொடங்கியுள்ளது. இந்த அமைப்பு தானிய வங்கி தொடங்கி பெரும்பாலும் ஏழை எளிய முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் 1,500 குடும்பங்கள் பசி தீர்த்துள்ளது. மே 16 அன்று நோன்பு இருக்கும் ஒரு முஸ்லிம் சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்து தண்ணீர் வங்கியை துவக்கி வைத்தார் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் இன்புற வளரும் ஆர்எஸ்எஸின் அகில பாரத பொறுப்பாளர்களில் ஒருவருமான இந்திரேஷ் குமார். இந்திரேஷ்குமார் நிகழ்ச்சி பாரதத்தின் பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜா ரிஸ்மி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். கிடைக்கும் தண்ணீரை சீராக பங்கிட்டுக் கொள்ள இந்த அமைப்புகள் ஆதார் அட்டை அடிப்படையில் முஸ்லிம் குடும்பங்களுக்கு அடையாள சீட்டுகள் விநியோகித்தன. நிகழ்ச்சியில் பேசிய இந்திரேஷ் குமார் முஸ்லிம்களின் முன்னுதாரணம் யாகூபோ கசாபோ அல்ல, அப்துல் கலாம் தான் என்றார்.
சந்தியுங்கள் விதை அம்மாவை!
அகமதுநகர், மே 24, 2019
மகாராஷ்டிர மாநிலத்தில் அகமதுநகர் வட்டாரத்தில் ரஹிபாய் சோமா பொப்பேரே நடத்திவரும் விதை வங்கியில் விவசாயிகளுக்கு 32 விதமான பயிர்களுக்கான 122 வகை சுதேசி விதைகள் இலவசமாக வழங்கப்படும். ஒரே நிபந்தனை, அவர்கள் எடுத்துச் செல்லும் விதை போல இரண்டு மடங்கு விதைகளை வங்கியில் திருப்பிச் செலுத்த வேண்டும். “கலப்பின விதை போல அல்லாமல் சுதேசி விதைகள் நிலத்தை பாழ்படுத்துவதில்லை. குறைவான தண்ணீர் பாய்ச்சினால் போதும். விளையும் பயிர் நோய்களை தாக்குப் பிடிக்கும், ஊட்டச் சத்து மிகுந்ததாக இருக்கும்” -- ரஹிபாய் இப்படி சொல்வது அனுபவத்தின் ஆதாரத்தில். 15 வித சுதேசி நெல் ரகங்களையும், 60 வகை உள்ளூர் காய்கறி ரகங்களையும் இவர் காப்பாற்றி பரப்பி வருகிறார். எனவே மக்கள் இவரை விதை அம்மா என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
0 Comments