ஆர்.எஸ்.எஸ்ஸின் பார்வையில் காந்திஜி, டாக்டர் மன்மோகன் வைத்ய


தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. எல்லாக் கட்சிகளும் தங்கள் தங்கள் கலாசாரத்திற்கும் பண்பிற்கும் ஏற்ப தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றனர். உங்களுக்கு காந்தி வேண்டுமா கோட்ஸே வேண்டுமா என்று கேட்கிறார் ஒரு பேச்சாளர். நான் ஒன்று கவனித்திருக்கிறேன் மகாத்மா காந்தியின் உண்மையான சீடர்கள் கோட்ஸேவின் பெயரை வைத்து விவாதிப்பதில்லை. ஆனால் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக காந்திஜியின் பெயரை இழுத்துக் கொள்கிறவர்கள்தான் மீண்டும் மீண்டும் கோட்ஸேவின் பெயரை உச்சரிக்கிறார்கள். இந்த நபர்களின் செயல்கள் காந்திஜியின் கொள்கை, கருத்து இவற்றிலிந்து எங்கோ தொலைதூரம். பொய்சொல்கிறவர்களும் வன்முறையில் இறங்குகிறவர்களும் தங்கள் சுயநலத்திற்காக காந்திஜியின் பெயரை உபயோகித்துக்கொள்கிறார்கள். 

ஒரு நாளிதழின் ஆசிரியர். அவர் சங்க ஸ்வயம்சேவகரும் கூட. காந்தியவாதி ஒருவர் எழுதிய கட்டுரை தனது நாளிதழில் வெளியிடப்படுவதாகச் சொன்னார். அந்த காந்திய சிந்தனையாளரிடம் கட்டுரை குறித்து பேச்செடுத்தபோது அவர் சொன்னாராம். சங்கத்திற்கும் காந்திஜிக்கும் எப்படிப்பட்ட உறவு இருந்தது என்று எனக்குத் தெரியும் ஆனால் உங்களுக்குத் தெரிந்திருக்காத சில அம்சங்களை நான் தொட்டுக்காட்டப்போகிறேன் என்று! சங்கத்திற்கும் காந்திஜிக்கும் உறவு எப்படி இருந்தது என்று! அந்த சிந்தனையாளருக்கு உண்மையிலேயே தெரியுமா என்று நான் கேட்டேன். ஒன்றுமே தெரியாமல் ஆராய்ந்தும் பார்க்காமல் சிலர் கற்பனைக்
கோட்டைகளை கட்டிக்கொண்டுவிடுகிறார்கள். தங்களை அறிஞர்கள், படிப்பாளிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் நுனிப்புல் மேய்ந்துவிட்டு அல்லது ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தை மனதில் வைத்து எழுதப்பட்ட புத்தகத்தின் ஆதாரத்தில் தங்கள் ‘மேதைமை’ நிறைந்த சிந்தனைகளை வெளியிடுகிறார்கள். விஷயம் என்னவென்றால் இந்த சிந்தனைகளுக்கும் உண்மைக்கும் தொடர்பே கிடையாது. 

காந்திஜியின் சில கருத்துக்கள் குறித்து கடும் ஆட்சேபம் இருந்தாலும் சங்கத்துடன் அவரது தொடர்பு எப்படி இருந்தது என்பதை, கிடைக்கின்ற தகவலை ஆய்ந்து பார்க்கவேண்டும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மக்கள் ஆதரவுதளத்தை விஸ்தரிக்கும் நல்ல எண்ணத்துடன் அவர் மதவெறி பிடித்த ஜிகாதி மனப்பான்மையுள்ள முஸ்லிம் குழுக்களிடம் சரணாகதியடைந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற போதிலும் சாமானிய மக்களை சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்காக ராட்டை, கதர்போன்ற எளிமையான உத்திகளையும் சத்தியாகிரகம் போன்ற சுலபமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அவரது வழிமுறையையும் வைத்துப் பார்த்தால் அவரது மேன்மை புலப்படும். கிராம சுயாட்சி, சுதேசி, பசுப்பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று அவர் வற்புறுத்திய விஷயங்களால் பாரதத்தின் அடிப்படையான ஹிந்து சிந்தனையில் அவருக்கிருந்த ஈடுபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை யாரும் மறுக்கமுடியாது. பண்புகளின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட அவர் வாழ்க்கை, எத்தனையோ இளைஞர்களையும் யுவதிகளையும் வாழ்நாள் முழுதும் விரதம் ஏற்றவர்களாக உருவாக்கி சமூகசேவையில் ஈடுபட ஊக்கம் கொடுத்தது.

ஒத்துழையாமை இயக்கத்திலும் (1921) சட்டமறுப்பு இயக்கத்திலும் (1930) டாக்டர் ஹெட்கேவார் பங்குகொண்டார். அதனால் அவருக்கு 1921 ஆகஸ்டு 19 முதல் 1922 ஜூலை 12 வரை ஒருமுறையும் 1930 ஜூலை 21 முதல் 1931 பிப்ரவரி 14 வரை இன்னொருமுறையும் ஆக இரண்டுமுறை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 

1922 மார்ச் 18 அன்று மகாத்மா காந்திக்கு ஆறு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. அப்போதிருந்து அவர் விடுதலை ஆகும் வரை ஒவ்வொரு மாதத்தின் 18ம் தேதியும் ‘காந்தி தினம்’ என அனுசரிக்கப்பட்டு வந்தது. 1922 அக்டோபர் மாதத்தில் வந்த காந்தி தினத்தன்று டாக்டர் ஹெட்கேவார் நிகழ்த்திய சொற்பொழிவில் பின்வருமாறு கூறினார்: ‘‘இன்றைய தினம் மிகப்புனிதமான நாள். மகாத்மாஜி போன்ற மாமனிதரின் வாழ்க்கையில் நிறைந்துள்ள நற்பண்புகளை பற்றி சொல்லி கேட்டு சிந்தனைசெய்ய வேண்டிய நாள் இது. 

‘‘அவரது சீடர்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறவர்களுக்கு அவரது இந்த பண்புகளை வாழ்வில் கடைபிடைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு உள்ளது.’’ 

காந்திஜி 1934ல் வர்தா நகரில் ஜம்னாலால் பஜாஜ் இல்லத்தில் தங்கியிருந்தபோது அதற்குப் பக்கத்திலேயே சங்கத்தின் பனிகால முகாம் நடந்துகொண்டிருந்தது. ஆர்வம் மேலிட, காந்திஜி அங்கு சென்றபோது சங்க பொறுப்பாளர்கள் அவரை வரவேற்றார்கள் காந்திஜி ஸ்வயம்சேவகர்களுடன் உரையாடவும் செய்தார். உரையாடும்போது பட்டியல் சமூக ஸ்வயம்சேவகர்களும் முகாமில் இருப்பது அவருக்குத் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, அவர்கள் எந்த விதத்திலும் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதில்லை, அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன், நட்புடன், ஒன்றிப் பழகுவதையும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்வதையும் பார்த்துதனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதாகச் சொன்னார். 

1947 ஆகஸ்டு 15 அன்று சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு டெல்லியில் துப்புரவுத் தொழிலாளர்கள் வசிக்கும் காலனியில் காந்திஜி தங்கியிருந்தார். அதன் பக்கத்தில் உள்ள மைதானத்தில் சங்கத்தின் பிரபாத் ஷாகா (காலை நேர கிளை) நடைபெற்றுக்கொண்டிருந்தது. செப்டம்பர் மாதத்தில் மூத்த ஸ்வயம்சேவகர்களுடன் கலந்துரையாட விரும்பினார். கலந்துரையாடல் நடைபெற்றது. அதன்பிறகு பேசுகையில் ‘‘பல ஆண்டுகளுக்கு முன் வர்தா நகரில் நான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒரு முகாமிற்குப் போயிருந்தேன். அந்த சமயம் சங்கத்தின் நிறுவனர் ஸ்ரீ ஹேட்கேவார் உயிருடன் இருந்தார். காலஞ்சென்ற ஜம்னாலால் பஜாஜ் என்னை அந்த முகாமிற்கு அழைத்துச் சென்றார். ஸ்வயம்சேவகர்களின் கடுமையான கட்டுப்பாடு, எளிமையான வாழ்க்கை, தீண்டாமை முழுமையாக ஒழிக்கப்பட்ட சூழ்நிலை இவற்றையெல்லாம் பார்த்து மிகுந்த மனநிறைவு அடைந்தது. அதன்பிறகு சங்கம் மிகவும் வளர்ந்துவிட்டது. தொண்டு, தியாகம் இவற்றால் ஊக்குவிக்கப்பட்டு இயங்குகின்ற எந்தவொரு இயக்கமும் வலிமையோடு வளர்ந்தோங்கும் என்பதுதான் எப்போதும் எனது அபிப்ராயம். ஆனால் உண்மையிலேயே பயனுள்ளதாக விளங்குவதற்கு தியாக உணர்வுடன் கூடவே தூய லட்சியம் உண்மையான ஞானம் இவையும் சேர்வது அவசியம். இந்த இரண்டும் இல்லாத தியாகம் சமுதாயத்தில் நாசம் எற்படுத்திவிடுகிறது.’’ (இந்தச் சொற்
பொழிவு காந்திஜி நூல் தொகுதி 89ல் 215,217 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. 

1948 ஜனவரி ௩௦ அன்று அப்போதைய சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி கோல்வல்கர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் இருந்தார். அப்போது அவருக்கு காந்திஜியின் மரணச்செய்தி கிடைத்தது. உடனே அவர் பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் படேல், காந்திஜியின் மைந்தர் தேவதாஸ் காந்தி ஆகியோருக்கு தந்திமூலம் தனது இரங்கல் தெரிவித்தார். ‘‘குரூரமான தாக்குதலின் விளைவாக ஒரு மகானின் துயரம் தரும் மரணச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இன்றைய கடினமான சூழ்நிலையில் இதனால் தேசத்திற்கு எல்லையில்லாத இழப்பு நேர்ந்துள்ளது. ஈடு இணையற்ற இயக்க கட்டமைப்பாளரான ஒருவரின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றி
டத்தை நிரப்பும் கடினமான பணி நம்முன் வந்துள்ளது. அதை நிறைவேற்றும் ஆற்றலை கடவுள் நமக்கு அருளட்டும்’’ என்று அந்த இரங்கல் செய்தியில் குருஜி கூறியிருந்தார். காந்திஜிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 13 நாட்கள் சங்கத்தின் தினசரி பணியை நிறுத்திவைக்கும்படி நாடுமுழுவதிலும் ஸ்வயம்
சேவகர்கள் அனைவருக்கும் குறிப்பும் அனுப்பினார். 1948 ஜனவரி 31 அன்று, அதாவது மறுநாளே, பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் ஸ்ரீகுருஜி விரிவான கடிதங்கள் எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டார்: ‘‘யாரோ ஒருவர் சற்றும் சிந்திக்காமல் மனம் தடுமாறி வணக்கத்திற்குரிய மகாத்மாஜியை சுட்டதில் அந்த மாமனிதர் திடீரென அகால மரணம் அடைந்தார். இந்த இழிசெயல் குறித்த பயங்கர செய்தி நேற்று சென்னையிலிருந்தபோது எனக்கு கிடைத்தது. உலகோர் கண்முன் நமது சமுதாயத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கண்டனத்திற்குரிய செயல் இது’’. 

இந்த விவரங்களெல்லாம் ‘ஜஸ்டிஸ் ஆன் டிரையல்’ (Justice On Trial) நூலிலும் ஸ்ரீ குருஜி குறித்த நூல்தொகுப்பிலும் பதிவாகியுள்ளன.

காந்திஜியின் நூற்றாண்டு 1969ல் வந்தது. அந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலியில் காந்திஜியின் திருவுருவச் சிலையை ஸ்ரீ குருஜி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறினார்: “நாம் இங்கு இன்று ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான நிகழ்ச்சிக்காக கூடியிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சௌராஷ்டிரப் பகுதியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் எத்தனையோ ஆண் குழந்தைகள் பிறந்திருக்
கலாம். ஆனால் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை நாம் கொண்டாடுவதில்லை. மகாத்மா காந்தியின் பிறப்பு சாமானியர் பிறப்பு போலத்தான் அமைந்திருந்தது. ஆனால் அவர் தனது பணியால், உள்ளார்ந்த அன்பினால் மாமனிதராக உயர்ந்தார். அவர் வாழ்ந்த வாழ்க்கை நம்முன் உள்ளது நாம் அதைப் பின்பற்றி நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு அதிகமதிகமாக அவரது வாழ்க்கையை பின்பற்ற முடிகிறதோ அந்த அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும்.’’ 

“லோகமான்ய திலகருக்குப் பிறகு மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தின் தலைமைப் பொறுப்பேற்றார். சுதந்திரத்திற்காக அரும்பாடு பட்டார். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவர் உள்ளத்திலும் ஆங்கிலேயர்களின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தினார். தேசத்தை சுதந்திரம் அடையச் செய்ய வேண்டும், நம்மை நாமே ஆண்டுகொள்ள வேண்டும், அதற்கு என்ன விலை கொடுக்க வேண்டுமோ அதை நாம் கொடுத்தாக வேண்டும் என்றார். மகாத்மா காந்தி மண்ணைத் தொட்டால் அது பொன் ஆனது. சாதாரண மக்கள் மனதில் அசாதாரணமான உணர்ச்சி பொங்கச் செய்தார். அவர் உருவாக்கிய இந்த சூழ்நிலை காரணமாக ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.”

“நான் தீவிர ஹிந்து, எனவே மனிதர்கள் மீது மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தின் மீதும் நான் அன்பு செலுத்த முடிகிறது'' என்று அவர் கூறுவார். அவரது வாழ்க்கையிலும் அரசியலிலும் சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் கிடைத்த முக்கியத்துவம் அந்த தீவிர ஹிந்துத்துவம் காரணமாகத்தான்.”

“எந்த ஹிந்து தர்மம் பற்றி நாம் இவ்வளவு பேசுகிறோமோ அந்த ஹிந்து தர்மத்தின் எதிர்காலம் குறித்து காந்திஜி 'பியூச்சர் ஆப் ஹிந்துயிஸம்’ என்ற தலைப்பில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் எழுதுகிறார்: 'ஹிந்து தர்மம் என்பது சத்தியத்தை நாடி இடைநில்லாமல் திட்டவட்டமாக முன்னேறுவதற்கான பாதை. இன்று ஹிந்து சமயம் தளர்ந்து போனது போலத் தெரிகிறது. முன்னேறிச்செல்லும் ஊக்கம் தென்படவில்லை. நாம் களைத்து விட்டோம், ஆனால் நமது சமயம் களைத்துப் போய்விடவில்லை. நமது இந்த தளர்ச்சி நம்மை விட்டுப் போகின்ற கணமே ஹிந்து தர்மம் முன்னெப்போதும் கண்டிராத விதத்தில், அதிரடியாக, பிரம்மாண்டமான அளவில் செல்வாக்கு
டன் ஒளிவீசி உலகத்தில் எழுச்சி பெறும்’. காந்திஜி வழங்கிய அந்த ஆரூடத்தை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உண்டு.”

நான் பலமுறை காந்திஜியை சந்தித்திருக்கிறேன். அவருடன் நிறைய விவாதித்திருக்கிறேன். அவர் அப்போது வெளியிட்ட கருத்துக்களைத் தான் நான் இப்போது விவரித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கிடைத்த உள்ளார்ந்த அனுப
வத்தின் அடிப்படையில் நான்காந்திஜி மீது ஆழ்ந்த மரியாதை கொண்டிருக்கிறேன்.”

ஸ்ரீ குருஜி மேலும்கூறினார்: “கடைசி முறையாக அவரை நான் சந்தித்தது 1947ல். அப்போது சுதந்திரம் கிடைத்த தருணம். ஆட்சிப்பொறுப்பை ஏற்ற தலைவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தார்கள். அதே வேளையில் தில்லியில் கலவரம் மூண்டது. அமைதியை வேண்டி அறைகூவல் விடுக்கும் பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். உள்துறை அமைச்சர் சர்தார் படேலும் முயற்சிசெய்து கொண்டிருந்தார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் மகாத்மா காந்தியை சந்தித்தேன். என்னிடம் அவர், ’என்னவெல்லாமோ நடக்கிறதே?’ என்றார். ’இது நமது துரதிருஷ்டம்’ என்றேன் நான். ’ஆங்கிலேயர்கள், ’நாங்கள் இந்தியாவை விட்டுப்போய் விட்டால் நீங்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாண்டு போவீர்கள்’ என்று சொல்வதுண்டு. இன்று அதுதான் நடக்கிறது. உலகில் நமக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது, இதை தடுக்க வேண்டும்’ என்றேன். அன்றைய தினம் தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி மிகுந்த மதிப்பார்ந்த சொற்
களால் என் பெயர் குறிப்பிட்டு எனது கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறினார். நாட்டுக்கு ஏற்பட்டுவிட்ட கெட்ட பெயரை நீக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த மகாத்மாவின் வாயில் இருந்து என்னைக் குறித்து அப்படி மதிப்பார்ந்த வார்த்தைகள் வந்தது எனது பெரும்பேறு. இத்தகைய உறவினால் தான் நாம் அவரைப் பின்பற்றி வாழ வேண்டும் என்கிறேன்” – இவ்வாறு ஸ்ரீ குருஜி பேசினார்.

1987 முதல் 1990 வரை வடோதராவில் பிரசாரக்காகப் பணிபுரிந்தேன். அந்த வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணை பொதுச் செயலர் ஸ்ரீ யாதவ ராவ் ஜோஷி அவர்களின் பொது நிகழ்ச்சி வடோதராவில் ஏற்பாடாகியிருந்தது. அந்த நிகழ்ச்சியில் மிகுந்த மதிப்பார்ந்த சொற்களால் மகாத்மா காந்தி குறித்து அவர் புகழ்ந்தார். பொது நிகழ்ச்சி முடிந்த பிறகு சங்க காரியாலயத்தில் அவரிடம் ஒரு ஊழியர், ’இன்று உங்கள் சொற்பொழிவில் மகாத்மா காந்திக்கு அவ்வளவு மதிப்பளித்துப் பேசினீர்களே, அது நீங்கள் மனதார பேசியது தானா?’ என்று கேட்டார். அதற்கு விளக்கமாக விடையளிக்கையில், “மனதார உணராமல் வாய்ப்பேச்சுப் பேசுகிற அரசியல் தலைவர் அல்ல நான். நான் சொல்கிற எதுவும் மனதின் அடி ஆழத்தில் இருந்து தான் வருகிறது. ஒருவரை நாம் மரியாதை கொடுத்து மதிப்பளித்துப் பேசுகிறோம் என்றால் அவரது எல்லாக் கருத்துக்களையும் நாம் ஒப்புக் கொண்டுவிடுவதாக அர்த்தம் அல்ல. ஒரு குறிப்பிட்ட உயர் பண்பு அவரிடம் இருந்தது என்பதற்காக அவரை நாம் நினைவுகூர்கிறோம், அவரை முன்னுதாரணமாகப் போற்றுகிறோம். தான் ஏற்ற சபதத்தில் உறுதியாக நின்றதற்காக பீஷ்மரை நாம் போற்றுகிறோம். ஆனால் அரசவையில் திரௌபதி துகிலுரியப்பட்டபோது எல்லா அநியாயத்தையும் அவர் வாயை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தாரே, அதை நாம் ஏற்றுக் கொள்வ
தில்லை. அது போலத்தான் மதவெறி பிடித்த ஜிகாதி முஸ்லிம் தலைவர்கள் விஷயத்தில் காந்திஜி நடந்து கொண்ட விதத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனாலும் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் பொதுமக்களை பங்குகொள்ளச் செய்வதற்காக அவர் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு, சாமானிய மக்கள் மனதில் அவர் கொழுந்து விட்டு எரியச் செய்த விடுதலை ஆர்வம், பாரதிய சிந்தனையின் அடிப்படையில் பல விஷயங்களை அவர் வலியுறுத்திய விதம், மக்களின் ஆவேசத்தை வெளிப்படுத்திட சத்தியாகிரகம் என்ற அவரளித்த வடிவம் இவை போன்ற அவரதுபங்களிப்புகள் நிச்சயம் பாராட்டுக்குரியவை. நமக்கெல்லாம் ஊக்கமளிப்பவை” - இவ்வாறு யாதவ ராவ்ஜி எடுத்துக் கூறினார்.

இந்த விவரங்கள் எதையும் கருத்தில் கொள்ளாமல் சங்கத்திற்கும் காந்திஜிக்கும் உள்ள உறவு குறித்து விமர்சனம் செய்வது உண்மைக்குப் புறம்பானது, பொருத்தமற்றது என்று தான் சொல்ல வேண்டும். கிராம வளர்ச்சி, இயற்கை வேளாண்மை, பசுப் பாதுகாப்பு, சமுதாய நல்லிணக்கம், தாய்மொழிக் கல்வி, சுதேசி உணர்வு அடிப்படையிலான பொருளாதாரக் கட்டமைப்பு, சுதேசி வாழ்க்ைகமுறை என்று மகாத்மா காந்தியின் மனதுக்கு இனிய, அவர் வலியுறுத்திய, விஷயங்களில் ஸ்வயம்சேவகர்கள் மனது வைத்து செயல்படுகிறார்கள். இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்தி ஆண்டு. அவரது புனித நினைவுக்குத் தலைவணங்குவோம், மனம் குவிந்து அஞ்சலி செய்வோம். 

Post a Comment

0 Comments