தெலுங்கானா
ஹைதராபாத் பக்தர்களுக்கு உள்ளூரிலேயே
வெங்கடேசப் பெருமாள் தரிசனம் தருகிறார்
திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் போன்றே அளவில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான கோயில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் செலவில் பங்களாக்கள் நிறைந்த ஜூப்லி ஹில் பகுதியில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மகா கும்பாபிஷேகம் நிறைவேறிய பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். இந்த ஹைதராபாத் கோயில் போலவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் கன்னியாகுமரியிலும் ஒரு வெங்கடேச பெருமாள் ஆலயம் நிர்மாணித்துள்ளது. அடுத்து ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியிலும் இது போல ஒரு கோயிலை நிர்மாணிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. சிறியதும் பெரியதுமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2,000 கோயில்களை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கேரளா
டாக்டர்களின் கிராமம் காவங்கல்
ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காவங்கல் என்ற சிறு கிராமம் டாக்டர்களின் கிராமம் என்ற அடைமொழியை பெற்றுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அந்த ஊரிலிருந்து 7 பேர் எம்பிபிஎஸ் தேறினார்கள். அதுவும் மெரிட்டில் தேறினார்கள். அவர்களின் பெயர்கள்: டிவி கோபி, காவியா, அருணிமா, கோபாலகிருஷ்ணா ராஸா முராத், அன்வர் ஷா, சம்னா ஷம்ஸ். இது தவிர அந்த ஊரில் 90% வீடுகளில் அரசு ஊழியர்கள் உண்டு. ஒருகாலத்தில் பின்தங்கிய பகுதி என்று அறியப்பட்ட இடம் இது. ஒருசில அரசு ஊழியர்கள் சேர்ந்து பணியாளர் தேர்வாணைய தேர்வுக்காக பயிற்சி கொடுக்கும் மையம் ஒன்றை அந்த ஊரில் நிறுவினார்கள். அதில் படித்துத் தேறிய எத்தனையோ பேர் இன்று அரசு ஊழியர்களாக பணிபுரிகிறார்கள்.
ஜம்மு காஷ்மீர்
நல்லுறவுக்கு ஒரு பாலம், நாற்பதே நாளில்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லத்தாக் பகுதியில் பாய்கிற சிந்து நதியின் மீது 260 அடி நீளமுள்ள தொங்கு பாலம் ஒன்றை ராணுவ வீரர்கள் நாற்பதே நாட்களில் கட்டி முடித்திருக்கிறார்கள். பாலம் கட்டுவதற்காக 500 டன் எடையுள்ள தளவாடங்களை அந்த மலைச்சாரல் பிராந்தியத்திற்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள். சென்ற வாரம் திங்கள் அன்று (ஏப்ரல் 2) அந்தப் பாலம் லே பகுதியை சேர்ந்த நாயக் புஞ்சோக் அங்டஸ் என்ற 89 வயது முன்னாள் ராணுவ வீரர் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. லத்தாக் வட்டாரத்திலேயே மிகப்பெரிய கிராமமான சோக்லாம்ஸ்மார் உள்ளிட்ட 3 ஊர்களின் மக்கள் இந்த பாலத்தினால் பயனடைகிறார்கள். அவர்கள் ராணுவத்தினருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார்கள். அந்த பகுதியின் பஞ்சாயத்தார் ராணுவத்தை கேட்டுக்கொண்டதை அடுத்து இந்தப் பாலம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் உள்ள நல்லுறவை சுட்டிக் காட்டும் விதத்தில் பாலத்திற்கு ’நட்புறவுப் பாலம்’ (மைத்ரி பிரிட்ஜ்) என்று பெயரிடப் பட்டுள்ளது.
பஞ்சாப்
கோடிகள் புரளும் கத்தோலிக்க அனாதை இல்ல மர்மம்!
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் நகரை அடுத்த பிரதாப்புரா பகுதியில் அனாதை இல்லம் நடத்தும் ஒரு கத்தோலிக்க பாதிரி யிடமிருந்து 9.66 கோடி ரூபாய் ரொக்கத்தை கன்னா பகுதி போலீசார் கைப்பற்றினார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இவ்வளவு பெரிய தொகை கிறிஸ்துவ பாதிரிகளுக்கு அனுப்பப்பட்டதுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தொகை வெளிநாடுகளிலிருந்து ஹவாலா மூலம் வந்து சேர் ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னரே ஹிந்து அமைப்புகள் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு வெளிநாடுகளிலிருந்து பெரும் தொகைகள் வருவதாக குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த அனாதை இல்லத்துக்கு இரவு நேரங்களில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார்கள் வந்து போவது உண்டு என்று ஊர் மக்கள் தெரிவித்தார்கள் அந்த ரொக்கம் பள்ளிக் கட்டணம் வகையைச் சேர்ந்தது என்று பிஷப் சார்பில் விளக்கம் கூறப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை ரொக்கமாக ஏன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேள்விக்கு பதில் இல்லை. அமலாக்கத்துறை - வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த அனாதை இல்லத்தை வளைத்து சோதனையிட்டு வருகிறார்கள்.
0 Comments