ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் பயிற்சி முகாம் (இரண்டாம் ஆண்டு) ஈரோட்டில் 26.4.2019 அன்று துவங்கியது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 75 பேர் பயிற்சி பெற கலந்துக் கொள்ளும் இந்த முகாம், ஈரோடு கலை கல்லூரி தாளாளர் திரு பாலுசாமி மற்றும் பிரபல இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதாகர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி, பாரதமாதா பூஜை செய்ய சிறப்பாக துவங்கியது. திரு பாலுசாமி அவர்கள் தனது உரையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் செயல்பாட்டில் ஈடுபாடு கொண்டதின் காரணமாகவே, தான் தலைமை ஏற்றிருக்கும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பிற்கு 'ஹிந்து கல்வி நிலையம்' என்று பெயரிட்டு உள்ளதாகவும், அடுத்த முறை இது போன்ற முகாம் தங்கள் கல்லூரியில் நடத்தப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
டாக்டர் சுதாகர் அவர்கள் பேசுகையில், தான் சமீபத்தில் லண்டன் சென்றிருந்த போது அங்கு Hஸ்ஸ் அமைப்பின் செயல்பாட்டை கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும், அதில் ஈர்க்கப்பட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
க்ஷேத்ர கார்யவாஹ் திரு ராஜேந்திரன் அவர்கள் தனது உரையில், பௌத்திக் கேட்பதனாலும், புத்தகம் படிப்பதனாலும் கிடைக்கும் தெளிவை விட, களத்தில் சங்க பணி செய்யும் பொழுது கிடைக்கும் தெளிவும் உற்சாகமும் பன்மடங்கு அதிகம்" என்று கூறினார். மேலும் கூறுகையில் அத்தகைய களப்பணி செய்யக்கூடிய கார்யகர்தர்களை உருவாக்குவது தான் முகாமின் நோக்கம், என்றார். சேர்ந்து பணி செய்தல் மிகவும் சிறந்தது என கூறிய அவர், நம் நாட்டுக்கு செய்யும் பணி தியாகம் ஆகாது என்றும் அது நம் கடமை என்று தீர்க்கமாக உரைத்தார்.
முன்னதாக, 26.4.19 அன்று காலை 6.00 மணிக்கு முகாம் சிறப்பாக நடைபெற கணபதி ஹோமமும், கோ-பூஜையும் செய்யப்பட்டன.
0 Comments