ஆர்.எஸ்.எஸ் அமைப்புதான் காந்திஜியைக் கொலை செய்தது எனக் கூறிய கேரள நிதி அமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக்குக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆர்.எஸ்.எஸ் தொடங்கியுள்ளது.
மகாத்மா காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் நாடுவது ஆச்சரியமளிப்பதாக டி.எம். தாமஸ் ஐசக் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த பேச்சை, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தேசாபிமாணி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, டி.எம். தாமஸ் ஐசக் மற்றும் தேசாபிமாணி நாளிதழின் வெளியீட்டாளர் கே.ஜே. தாமஸ், ஆசிரியர் பி. ராஜீவ் ஆகியோருக்கு எதிராக கொல்லம் மகாநகர் சங்கசாலக் ஆர். கோபாலகிருஷ்ணன் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதோடு, தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடமும் அவர் புகார் அளித்துள்ளார்.
காந்திஜி கொலைக் குற்றச்சாட்டில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பல்வேறு நீதிமன்றங்களும், விசாரணை ஆணையங்களும் விடுவித்திருப்பதை தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ள ஆர். கோபாலகிருஷ்ணன், இது தொடர்பான ஆவணங்கள் பொதுவெளியில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்தும் கடந்த காலங்களில் காந்திஜி கொலையுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தொடர்புபடுத்திப் பேசிய பலர், பிறகு மன்னிப்பு கோரியதன் மூலம் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டதை தனது நோட்டீசில் சுட்டிக்காட்டியுள்ள ஆர். கோபாலகிருஷ்ணன், இது டி.எம். தாமஸ் ஐசக்-குக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
அப்படி இருந்தும் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில், உண்மைக்கு மாறான தகவலை அவர் பிரச்சாரம் செய்து வருவதாகவும் ஆர். கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
தவறான தகவலை தெரிவித்ததற்காக, அமைச்சர் டி.எம். தாமஸ் ஐசக்குக்கும், தேசாபிமாணி நாளிதழும் மன்னிப்பு கோர வேண்டும் என தனது நோட்டீசில் வலியுறுத்தியுள்ள ஆர். கோபாலகிருஷ்ணன், இதனை நாளிதழின் முதல் பக்கத்தில் 7 நாட்களுக்குள்ளாக வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இல்லாவிட்டால், தாமஸ் ஐசக் மற்றும் தேசாபிமாணி நாளிதழ் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ளும் என்றும் ஆர். கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
0 Comments