SETU-34

கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கு அரசு நிதியுதவி
ராஞ்சி (ஜார்க்கண்ட்), மார்ச் 5
மகாசிவராத்திரியன்று (மார்ச் 5) ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸ் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள இருக்கும் 75 பேரை தன் இல்லத்திற்கு வரவழைத்து தலா ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். யாத்திரைக்கு அரசு நிதி உதவி கோரி விண்ணப் பித்தவர்களில் 75 பேருக்கு அரசு இந்த மானியம் வழங்கியுள்ளது. எஞ்சியுள்ளவர்களுக்கும் ஆவணங்களை சரிபார்த்த பிறகு அரசு நிதி உதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. ’முதலமைச்சர் திருத்தல யாத்திரை திட்ட’த்தின் கீழ் சமய சார்புள்ள தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள நிதி உதவி வழங்கபடுகிறது என்று தெரிவித்த முதலமைச்சர் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்பவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்க இந்த திட்டம் இடம் அளிக்கிறது என்றார். இதுவரை இந்த திட்டத்தில் 5,000 யாத்திரிகர்கள் பயன் அடைந்துள்ளதாக அவர் கூறினார். மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை அரசு மேம்படுத்தி வருவதாகவும் சர்வதேச அரங்கில் ஜார்க்கண்ட் சுற்றுலாவுக்காக புகழ் பெறும் என்றும் அவர் கூறினார். எல்லா மதத்தினர்களிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கங்கைக்கரை உள்ளங்களில் சுடர்விட்ட தேசபக்தி
ஹரித்வார் (உத்தராகண்ட்), மார்ச் 5
தேசபக்தி நமது தேசத்தின் எந்த எந்த எந்தமூலைகளில் எல்லாம் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள். ஜிகாதி பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா நகரில் 44 சிஆர்பிஎஃப் வீரர்களை குண்டு வைத்து கொலை செய்ததையடுத்து அந்த வீரர்களில் சிலரின் குடும்பத்தினர் அந்த வீரர்களுடைய அஸ்தியை கங்கையில் கரைக்க ஹரித்துவார் போனார்கள். ஹரித்துவாரில் உள்ள புரோகிதர்கள் இறுதி சடங்குகளை எல்லாம் தட்சிணை ஏதும் வாங்காமல் நடத்திக் கொடுத்தார்கள். அது மட்டுமல்ல அந்த வீரர்களின் உறவினர் களுக்கு தங்க இடம் உண்ண உணவு எல்லாம் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். “தேசத்துக்காக உயிர்ப்பலியான வீரர்களின் குடும்பத்தாருக்கு ஏதோ எங்களால் ஆனது என்று அவர்கள் கூறினார்கள். அதுமட்டுமல்ல.“பாரத மண்ணில் இருந்து பயங்கரவாதத்தை அடியோடு நீக்குவதற்காக பாரத அரசு தொடர்ந்து மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விருப்பம் தெரிவித்தார் உஜ்வல் பண்டிட் என்ற புரோகிதர். இது பாகிஸ்தான் மண்ணில் பாலாகோட் பயங்கரவாத முகாமை பாரத விமானப்படை விமானங்கள் நிர்மூலமாக்குவதற்கு முன்.

ஆஷிக் தேசத்துரோகப் பதிவுக்கு மாப்பிள்ளை உபசாரம்!
திருவனந்தபுரம் (கேரளா), மார்ச் 5
முகநூலில் ஒரு பதிவு பாரத ராணுவத்தை அவமதிக்கிறது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பகுதி இல்லை என்று கொக்கரிக்கிறது. பதிவிட்டவர் கேரள மாநில சிறப்பு ஆயுதப்படை காவலர் ஆஷிக் அபூபக்கர். பாரத ராணுவத்தை எனக்கு தெரியாதா அவர்கள் தேசபக்திக்காக அல்ல, பாலியல் கொடுமைக்காகப் பேர் போனவர்கள் … இப்படிப் போகிறது அந்தப் பதிவு. மக்களின் கண்டனத்துக்கு உள்ளானதும் பதிவை நீக்கினார் ஆஷிக். ஆனாலும் சிலர் அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விட்டார்கள். இருந்தாலும் இந்த நபர் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை. “கேரளத்தில் முதலமைச்சர் பினராய் விஜயன் மீது அல்லது அவருக்கு பிடித்தவர்கள் மீது ஏதாவது விமர்சனம் செய்து பதிவுகள் போட்டால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. ஆனால் தேசத்தின் மீதும், பிரதமர் மீதும், ஹிந்து கடவுள் மீதும் இழிவுபடுத்தும் பதிவுகள் போட்டால் எந்த நடவடிக்கையும் கிடையாது. அதற்குக் கருத்து சுதந்திரம் என்று பட்டம் சூட்டப்படும்” -- இவ்வாறு தெரிவிக்கிறது கேரளத்தின் மிகப் புகழ்பெற்ற மலையாளம் செய்தி சேனல் ’ஜனம்’ .

“மீண்டும் மோடி” என்ற கம்யூ பிரமுகருக்கு கல்தா!
மும்பை (மகாராஷ்டிரா), மார்ச் 5
நரேந்திர மோடி மீண்டும் பாரதப் பிரதமர் ஆக வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசினார் அல்லவா? இப்போது மகாராஷ்டிரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஒருவர் அது போல “மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்” என்று பேசியதால் சிபிஎம் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. நரசய்யா ஆதம் என்பதுதான் அந்த பிரமுகரின் பெயர். சிபிஎம்மின் இந்த முன்னாள் எம்எல்ஏ, தனது தொகுதி அமைந்துள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் வீட்டுவசதி திட்டம் ஒன்று விரைவாக முடிக்கப்படுவதற்கு மோடி அரசும் தேவேந்திர பட்நவீஸ் அரசும் காரணம் என்று ஜனவரியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசி கட்சியின் ஆத்திரத்திற்கு உள்ளானார். “இதுபோல எல்லாம் புகழ்ந்து பேசுவது சிபிஎம் கட்சியின் கொள்கைக்கு விரோதம். எனவே மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து அவரை மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்திருக்கிறோம் என்று சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சொன்னார். நரசய்யா ஆதம் மஹாராஷ்ட்ர மாநில CPM செயலாளர் என்பதும், சோலாபூரில் நடந்த அந்த பொது கூட்டத்தில் மோடியும் பட்நவீஸும் இருந்தார்கள் என்பதும் கூடுதல் தகவல்.  பீடி சுற்றும் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி திட்டம் அது என்பது குறிப்பிடதக்கது. 

Post a Comment

0 Comments