ஜாலியன்வாலா பாக் படுகொலை:
“பாரதத்திடம் இங்கிலாந்து மன்னிப்புக் கோர வேண்டும்”
சண்டிகர் (பஞ்சாப்,) பிப்ரவரி 23
பஞ்சாப் மாநில சட்டமன்றம் இங்கிலாந்து அரசு ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது பிப்ரவரி 20 அன்று நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்திற்கு எதிர்க் கட்சி பாஜக உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்தார்கள்1919 ஏப்ரல் 13 அன்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிரிட்டிஷ் ராணுவம் கொன்று குவித்து அன்றைய கொடூர சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மக்களை ஒடுக்கி வைக்க முயன்றது கண்டனத்துக்குரிய அந்த சம்பவத்தின் நூற்றாண்டு வரவிருக்கிற இந்த நேரத்தில் இங்கிலாந்து அரசு அந்த கொடூர செயலுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் கூறுகிறது. இதற்கிடையில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இங்கிலாந்து மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக இங்கிலாந்து அமைச்சர் ஒருவர் அந்த நாட்டின் மேல் சபையான ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த விவாதத்தின் போது அண்மையில் தெரிவித்திருந்தார். விவாதத்தில் பேசுகையில் ஜாலியன் வாலாபாக்கில் பிறந்தவரான சாந்தி வர்மா என்ற உறுப்பினர் அந்தப் படுகொலை இங்கிலாந்து தேசத்தின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்று கூறினார்.
மறுசுழற்சி: பால் கவர்களில் மரக்கன்று
மும்பை (மகாராஷ்டிரா), பிப்ரவரி 23
ஒவ்வொரு வீட்டிலும் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் பால் கவர் குவிந்து கொண்டே இருக்கும். அவற்றை அப்புறப்படுத்துவது பலருக்கு பெரிய தலைவலி. மும்பையில் மிஷன் கிரீன் என்ற அமைப்பு ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறது. ‘உங்கள் வீட்டில் உள்ள பால் கவர்களை எங்களிடம் கொடுங்கள். கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் மரக்கன்று வளர்ப்பதற்கு பதிலாக பால் கவர்களை மரக்கன்று வளர்க்க பயன்படுத்துகிறோம். வரும் நடவு பருவத்தின் போது எங்களுக்கு ஒரு லட்சம் கன்றுகளுக்கு பை தேவைப்படுகிறது’ என்று அந்த அமைப்பு மும்பை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பால் கவர்களை மாநகராட்சி பூங்கா துறையிடம் ஒப்படைக்குமாறு அந்த அமைப்பு கூறுகிறது. முகநூலில் இந்த அறிவிப்பு வெளியான 3 நாட்களில் 5000 பால் கவர்கள் வந்து குவிந்து விட்டதாகத் தெரிகிறது மரக்கன்று வளர்ப்பதற்காக மும்பை மாநகராட்சி ஆண்டுதோறும் 10 லட்சம் பாலிதீன் பைகள் வாங்குவதற்கு பணம் செலவழித்து வந்தது, இனி அந்த்த் தொகை மிச்சம். பால் கவர்கள் மறுசுழற்சியிலும் பயன்படும் என்கிறார் அந்த அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர். சென்னை. சண்டிகர் உள்ளிட்ட பல நகரங்களிலும் இது போன்ற முயற்சி நடக்கிறது.
மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிகார மமதை
மூணாறு கேரளா பிப்ரவரி 23
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரஞ்சரமாக கண்டனங்களை சந்திக்கிறது. இந்த வாரம் இரண்டு காங்கிரஸ் ஊழியர்களை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சி பி எம் ஆட்கள். போன வாரம் ஆளும் கட்சி எம் எல் ஏ எஸ் ராஜேந்திரன் மூணாறு துணை கலெக்டர் முனைவர் ரேணு ராஜ் மூளை இல்லாதவர் என்று சொல்லி சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். கேரளாவின் மலைவாசஸ்தலமான மூணார் நகரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முறைகேடாக கட்டப்படுவதை துணை கலெக்டர் தடுத்து நிறுத்தியபோது இந்த இடது எம்எல்ஏ இப்படி இடக்காக சொன்னது முதலமைச்சர் வரை போனது. பினராயி தான் பெண்களின் வழிபாட்டு உரிமையை உயர்த்திப் பிடிப்பவர் ஆயிற்றே (சபரிமலையில் எல்லா வயது பெண்களும் வழிபடும் விவகாரம்) இந்தப் பெண் துணை கலெக்டர் கலெக்டர் விஷயத்தில் என்ன செய்யப்போகிறார் என்று விமர்சனக் கணைகள் பாய்ந்தன. சில மாதங்களுக்கு முன்பு சித்ரா தெரசா ஜான் என்ற ஐபிஎஸ் அதிகாரி திருவனந்தபுரத்தில் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் சோதனையிட்டதை அடுத்து அந்த அதிகாரியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் படாதபாடு படுத்தியதை ஒரு விமர்சகர் நினைவு கூர்ந்தார். ரேணு ராஜுக்கு முன்பு மூணார் துணை கலெக்டராக இருந்த ஸ்ரீராம் வெங்கட்டராமன் கூட இதே போல அரசியல் பழிவாங்கலை சந்தித்தார். மூணாறு வட்டாரத்தை ஆன்மீக சுற்றுலா மையம் ஆக்கப் போகிறோம் என்று கூறிக் கொண்டு சிலர் ஒரு 30 அடி உயர உலோகத்தால் ஆன சிலுவையை பாப்பாத்திசோலா பகுதியில் நட்டு அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றார்கள். அதை தடுக்க துணை கலெக்டர் உடனடியாக சிலுவையை பறித்தெடுத்து அப்புறப்படுத்தி அரசியல்வாதிகளின் குரோதத்தை சம்பாதித்தார்.
புரி ஜகந்நாதர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போலத்தான்!
புவனேஸ்வர் (ஒடிஷா), பிப்ரவரி 23
அன்னிய மத படையெடுப்பாளர்களிடம் இருந்து தப்பிக்க ஸ்ரீரங்கத்திலும் மதுரையிலும் நடந்தது போல் பூரியிலும் நடந்திருக்கிறது. உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா விக்கிரகங்களை பக்தர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போய் வைத்த வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கிறார்கள். சென்ற வாரம் புவனேஸ்வரில் ராஜ்யசபா எம்பி சௌமிய ரஞ்சன் பட்நாயக் நூலை வெளியிட்டார். ’சீக்ரெட் ஜர்னீஸ் ஆப் லார்டு ஜகந்நாத்’ என்ற இந்த நூலை ஸ்ரீ ஜகந்நாத் ஸங்குருதி பரிஷத்தும் அமெரிக்காவில் உள்ள டாக்டர் தாஸ் பவுண்டேஷனும் கூட்டாக வெளியிட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16 ஆராய்ச்சி அறிஞர்கள் இந்த நூலின் தொகுப்பில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். சாமி விக்கிரகங்கள் மொத்தம் 22 முறை ரகசியமாக வேறு இடங்களில் வைக்கப்பட்டதாக நூல் விவரிக்கிறது. இரண்டு முறை கோயிலுக்குள்ளேயே; இருபது முறை வெளியே வெவ்வேறு இடங்களில். முஸ்லீம் படையெடுப்பாளர்களிடம் இருந்து காப்பாற்ற சிலைகளை இரண்டு முறை புதைத்தும் வைத்தார்கள். ஏழாம் நூற்றாண்டிலிருந்து இவ்வாறு சாமி சிலைகள் வெளியிடங்களில் 162 ஆண்டுகள் 4 மாதங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்ததாக நூல் தெரிவிக்கிறது. ஒரே முறையில் 144 ஆண்டுகள் ஒரு மலைக் குகையில் புதைத்து வைக்கப்பட்ட சிலைகள் ஒன்பதாம் நூற்றாண்டில்தான் ஸ்ரீமந்திர் எனப்படும் புரி ஜெகந்நாதர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஒரு போதும் ஸ்ரீமந்திர் தாக்குதலால் பாதிக்கப்படவில்லை. 50,000 சேவகர்கள், பக்தர்கள், பைக்கா போராளிகள் ஸ்ரீமந்திரைப் பாதுகாப்பதற்காக பலியாகியிருப்பதாக இந்த நூல் குறிப்பிடுகிறது.
0 Comments