SETU-32



விரைவில் உலக குரு ஆகிடும் பாரதம்: ஆர். எஸ். எஸ்
ராம்டேக் (மகாராஷ்ட்ரா), பிப்ரவரி 11

“பாரதம் தரும் ஞானத்தை உலகம் சிரமேற்கொண்டு ஏற்றுக்கொள்கிறது. பாரதம் தந்த யோகாவை ஏற்றது. பாரதம் தந்த ஆயுர்வேதத்தை ஏற்றது. பாரதம் தந்தசமஸ்கிருதத்தை ஏற்கிறது. விரைவில் உலகின் குருவாக பாரதம் உன்னத நிலை அடைவது உறுதி” என்று நாகபுரியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம்டேக் நகரில் அமைந்துள்ள கவி குலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழக வளாகத்தில் ’ஸ்ரீ கோல்வல்கர் குருஜி குருகுலம்’ துவக்க விழாவில் ஆர்.எஸ்.எஸ்அகில பாரத பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி கூறினார். குருகுலம் என்ற போதனா முறை பாரத கலாச்சாரம் தரும் தலைசிறந்த கல்விமுறை என்று மேலும் அவர்கூறினார். விழாவில் கலந்து கொண்ட மாநில ஆளுநர் சி. ஹெச். வித்யாசாகர் ராவ் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது அகில பாரத தலைவராக இருந்த ஸ்ரீகுருஜிகோல்வல்கர் நெடுநோக்குள்ள தலைவர் என்று போற்றினர். அந்த மகானின் பெயரால் பல்கலைக்கழகத்தில் ஒரு குருகுலம் அமைவது போற்றத்தக்கது என்றுகுறிப்பிட்டார். விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஜெர்மனியில் 14 பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேச தீர்த்த ஸ்வாமி ஆசியுரை வழங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் வர்க்கேடி வரவேற்புரைநிகழ்த்தினார்.

சிந்தி அறிஞர் முயற்சியால்
வங்க மொழியில் சீக்கிய புனித நூல்
கொல்கத்தா (மேற்கு வங்கம்), பிப்ரவரி 11

சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக்கின் 550 வது பிறந்த நாளை முன்னிட்டு சீக்கியர்களின் புனித நூலான ’குரு கிரந்த சாகிப்’ வங்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நூல் வெளியீட்டு விழா அண்மையில் கொல்கத்தாவிலுள்ள ’ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் இன்ஸ்டிட்யூட் ஆப் கல்ச்சர்’ அரங்கில் நடைபெற்றது. முன்னாள் பாரத ஜனாதிபதி பிரணவ் முகர்ஜி வெளியிட்டார். பதினேழு ஆண்டுகள் பாடுபட்டு மொழி பெயர்த்தவர்கள் சயன் கோஷ், ஜுமா கோஷ் ஆகிய இருவர். 1430 பக்கங்கள் கொண்ட ஐந்து தொகுதி ’குரு கிரந்த சாகிப்’ பாரதத்திலும் பங்களா தேஷிலும் உள்ள 30 கோடி வங்காளி அன்பர்களை சென்றடைந்து சமயங்களிடையே நல்லிணக்கம் நிலவச் செய்வதில் உறுதுணை புரியும் என்று பிரணவ் முகர்ஜி கூறினார். இந்தப் புனித நூலை சிந்தி மொழி அறிஞர் லச்சுமன் செல்லாராம்ஜியின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ராமகிருஷ்ண மிஷனின் ஸ்வாமி சுபர்ணானந்தா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது கொல்கத்தாவின் ஜே.ஐ.எஸ் பல்கலைக்கழகம்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக
வளாகத்தில் கோயில்?

அலிகர் (உத்தரப் பிரதேசம்), பிப்ரவரி 11
சிறுபான்மை கல்வி நிலையம் என்று பலரும் கருதும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மத்திய அரசு நிதி உதவி பெறும் மத்திய பல்கலைகழகம். அதன் வளாகத்தில் சுமார் 30 மசூதிகள் உள்ளன. இந்த நிலையில் அலிகர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் முகேஷ் சிங் லோடி அந்த பல்கலைக்கழக வளாகத்திற்குள் கோயில் ஒன்று கட்டுவதற்கு 15 நாட்களுக்குள் அனுமதி அளிக்குமாறு துணைவேந்தர் தாரிக் மன்சூருக்குக் கடிதம் எழுதியுள்ளார். ஜனவரி 24-ம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் ஹிந்து மாணவர்களின் உதவியுடன் கோயில் கட்டத் தொடங்கி விடுவேன் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான ஹிந்து மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் கோயில் ஒன்று கூட கிடையாது என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் நியமனத்தில் எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடுவழங்குவதில்லை என்று மகராஜகஞ்ச் மாவட்டத்தில் வாக்குச்சாவடி ஊழியர்களிடையே பேசுகையில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார். தேசத்தின் அரசு தரும் நிதியை வைத்து நடைபெறும் கல்வி நிலையம் எதுவும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
ஜஜ்பூர் (ஒடிசா) , பிப்ரவரி 11

தந்தை கல்லுடைக்கும் வேலை செய்யும் தினக் கூலித் தொழிலாளி. மகன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் விஞ்ஞானியாகப் பணியாற்றப் போகிறார். ஒரிசாவின் ஜஜ்பூர் மாவட்டம் ராய்சந்தா கிராமத்தை சேர்ந்த ஹேமந்த் ஓஜா அந்த ஊர் பஞ்சாயத்து பள்ளியிலேயே படித்து பிறகு கட்டாக் நகரில் உள்ள ரேவன்ஷா பல்கலைக் கழகத்தில் கணித பாடத்தில் பட்ட மேற்படிப்பு முடித்து சென்னை ஐஐடியில் பயன்பாட்டுக் கணிதத்தில் பி.எச்டி முடித்தார். இவரும் இன்னும் ஆறு பேரும் சென்ற ஆண்டு தங்கள் புராஜக்ட்களை முடிப்பதற்காக நாசாவில் ஒரு மாத காலம் தங்கினார்கள். அண்மையில் ஒருநாள் ஹேமந்துக்கு நாசாவில் ஜூனியர் சயின்டிஸ்ட் பதவியில் சேருமாறு வாஷிங்டன் டிசியில் இருந்து நியமனக் கடிதம் வந்தது. மார்ச் 13 அன்று வேலையில் சேர 26 வயது ஹேமந்த் அங்கு செல்ல இருக்கிறார். ஹேமந்த்தின் அப்பா அர்ஜுனுக்கு மகன் குறித்து. அளவுகடந்த மகிழ்ச்சி. “எந்த நிலையிலும் மகனின் படிப்புக்கு ஊக்கம் அளித்து வந்தேன். என் மனைவியின் நகை, இருந்த சிறு துண்டு நிலம் ஆகியவற்றை விற்று படிக்க வைத்தேன்” என்று தெரிவிக்கிறார். ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து ஹேமந்த்துக்கு பாராட்டு விழா நடத்த இருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments