பிரஹலாத் ஷிந்தே ஆன குல்ஷன் அப்துல்லா ஷேக்
மும்பை (மகாராஷ்ட்ரா), பிப்ரவரி 4
ஒரு ஆர் எஸ் எஸ் அன்பர் மரணம் பற்றி செய்தி வெளியிட்ட டெல்லி வார இதழ் ’பாஞ்சஜன்ய’ அவரைப் பற்றி அளித்த கூடுதல் தகவல் இது: காலமான 52வயது பிரஹலாத் ஷிந்தே, கொங்கண் பிராந்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தர்ம ஜாகரண் பொறுப்பாளர். குல்ஷன் அப்துல்லா ஷேக் என்பது இவருடைய பழைய பெயர். மும்பை அருகில் மாதேரான் என்ற ஊரில் இவர் சிறுவயதிலேயே ஆர். எஸ். எஸ்ஸில் இணைந்தார். 1985 ல் இருந்து 1991 வரை ஆர். எஸ். எஸ் பிரச்சாரகராக (முழுநேர ஊழியராக) பல்வேறு ஊர்களில் ஹிந்து ஒருங்கிணைப்புப் பணி செய்திருக்கிறார். ஹிந்து தத்துவம் அவரை ஈர்த்ததால் தன் குடும்பத்துடன் ஹிந்துவாக மாறினார். பிரகலாத் நேர்த்தியான இயக்க அமைப்பாளராக செயல்பட்டார். சொந்த வேலை செய்துகொண்டே விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் அவர் தீவிர ஈடுபாடு காட்டினார். ராய்கட் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கோயில்களின் அறங்காவலர்கள், பூஜாரிகள், சமயாசாரியர்கள் ஆகியோரிடம் இவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
கல் யானை கண்டதுண்டு, புல் யானை கண்டதுண்டோ?
கொச்சி (கேரளா), பிப்ரவரி 4
கொச்சி கடற்கரை ஓரமாக ஒரே இடத்தில் 100 யானைகள் கூட்டங்கூட்டமாக நிற்பதை, பக்கத்தில் போய் அவற்றைத் தொட்டும் பார்க்கலாம். இவை நிஜ யானைகள் அல்ல. உண்ணிச் செடி (லான்டனா) என்ற களைச் செடியின் தண்டுகள் கொண்டு செய்யப்பட்ட பொம்மைகள். இவை சில நாட்கள் கொச்சியில் இருந்து விட்டு பிறகு உலகின் பல நாடுகளில் கண்காட்சிகளில் வைப்பதற்காக (பிறகு விற்பனைக்காக) கப்பலேறும். நீலகிரி மலைக் காடுகளில் வசிக்கும் யானைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காமல் செய்வது இந்த உண்ணிச் செடி என்ற களை. இது தான் வளர்ந்து யானைக்கு தீவனமாகும் செடிகளை வளர விடாமல் செய்து விடும். இந்த தீங்கான தாவரம் இங்கிலாந்திலிருந்து அலங்காரப் பயிராக கொண்டுவரப்பட்டது. கூடலூர்-பந்தலூர் பகுதியில் உள்ள பணிகர்,பெட்ட குறும்பர், சோளிகர் சமூக வனவாசிகள் 70 பேர் உண்ணிச் செடியின் தண்டுகளை வைத்து இந்த யானை பொம்மைகளை உருவாக்கியிருக் கிறார்கள். இங்கிலாந்து தன்னார்வ அமைப்பான எலிபன்ட் ஃபேமிலி (யானைகுடும்பம்) செயல்பாட்டாளர் ரூத் கணேஷ், யானைகளின் நலன் நாடும் இன்னொரு அமைப்பைச் சேர்ந்த ஷுப்ரா நாயர் இருவருமாக உருவாக்கிய இந்த நிஜமான பலநோக்கு திட்டத்தால் தீமை தரும் களைச் செடி ஒழிகிறது, யானைகளுக்கு தீவனம் குறையாமல் கிடைக்கிறது, அதனால் யானைக் குடும்பம் பெரிதாகிறது, பாரத வனவாசி மக்கள் கைநுணுக்கம் சந்தைப்படுத்தப்பட்டு அவர்கள் வாழ்க்கை செழுமை ஆகிறது.
வருகிறது, பசுக்களுக்கு பார்கோடு அடையாளம்
லக்னோ ( உத்தரப் பிரதேசம்), பிப்ரவரி 4
உத்தரப் பிரதேசத்தில் பசு வதை செய்யும் இறைச்சிக் கூடங்கள் 2017 லிருந்து மூடப்பட்டு வருவதால் விவசாயிகள் தங்களிடம் உள்ள பால் மரத்த பசுக்களை பராமரிக்க முடியாமல், விற்கவும் முடியாமல் வீதியில் திரிய விட்டு விடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு பல தொல்லைகள். இவ்விஷயத்தை பற்றி அரசிடம் அவர்கள் புகார் செய்ததில் மாநில அரசு தெருவில் திரியும் பசுக்களுக்கு பார்கோடு முறையில் அடையாளம் கொடுத்து காலியாக உள்ள கட்டிடங்களில் அவற்றுக்கு காப்பகம் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. திரிந்து கொண்டிருக்கும் பசு எங்கே இருக்கிறது என்று கண்டு பிடிப்பதற்கு இந்த பார்கோடு முறை உதவும். கேட்பாரற்றுத் திரியும் பசுக்கள் விளைநிலங்களில் சேதம் ஏற்படுத்தக் கூடியவை. எனவே இவற்றை காப்பகத்தில் பராமரிப்பது முக்கியம். போன மாதம் ஆக்ராவில் உள்ள அரசு பள்ளிக்கூடத்திற்குள் விவசாயிகள் ஏராளமான பசுக்களை ஓட்டிக் கொண்டு வந்து அடைத்தார்கள். அதனால் அங்கே பிள்ளைகள் மரத்தடியில் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது போன்ற நிலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காகவே அரசு பசுக்களுக்கு பார்கோடு அடையாள திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இங்கே மங்கையர் மலர்களை நாடுவது
பொருளாதார புத்திசாலித்தனம்!
அகர்தலா (திரிபுரா), பிப்ரவரி 4
இளவேனில் காலம் இந்த வடகிழக்கு எல்லை மாநிலத்தில் தலை காட்டும் போதே வண்ண வண்ண மலர்கள் வாசனையை அள்ளி வீசி மக்களை பரவசத்தில் ஆழ்த்திடத் தொடங்கிவிட்டன. அன்னாசி, ரப்பர் இவைகளை மட்டுமே ஏற்றுமதி செய்து வந்த இந்த மாநிலம் இப்போது மலர்களை தோட்டப் பயிராக சாகுபடி செய்யும் புதிய பாதைக்குத் திரும்பியிருப்பதால் இப்படி ஒரு கண்கொள்ளாக் காட்சி, கமகமக்கும் மாட்சி. செழிப்பான மண், மிதமான வெப்பம், ஈரப்பதம் காக்கும் காற்று எல்லாம் சேர்ந்து திரிபுராவில் மலர் சாகுபடி பக்கம் விவசாயிகளின் கவனத்தைத் திருப்பியுள்ளது. நெல், காய்கறி கூட பயிரிடாமல் பூச்செடி பயிரிடுவதில் ஆர்வம் அதிகரித்தி ருப்பதற்குக் காரணம் அது தரும் அபாரமான ஆதாயம். மலர் தோட்டப் பயிரில் புதிதாக ஏராளமானவர்களுக்கு, குறிப்பாக இளம் பெண் விவசாயிகளுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மாநில அரசும் மலர் கண்காட்சி, மலர் பயிரிடுவதில் போட்டிகள் ஏற்பாடு செய்து லாபகரமான விவசாயம் செய்ய மக்களை ஊக்குவித்து வருகிறது. அண்மையில் மாநில முதலமைச்சர் விப்ளவ் தேவ் மாநிலத் தலைநகர் அகர்தலாவில் ரவீந்திர கானன் பார்க்கில் நாலு நாள் மலர்க் கண்காட்சியை துவக்கி வைத்தது இந்த திட்டத்தின் ஒரு அம்சமே.
0 Comments