SETU-29

ஜெய் சீதாராம்!
போபால் (மத்திய பிரதேசம்), ஜனவரி 31

சீதாராம் ஆதிவாசி என்பது மத்திய பிரதேச எம்எல்ஏ ஒருவரின் பெயர். 55 வயதான இவர் நவம்பர் தேர்தலில் விஜாபூர் தொகுதியில் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரை தோற்கடித்தவர். இத்தனைக்கும் இவர் முதல் முறையாக எம்எல்ஏ ஆகிறார். சீதாராம் தொகுதி மக்கள் நலனுக்காகப் போராடி வருபவர்.தேர்தலில் வெற்றி பெற்றதும் தொகுதி மக்கள் அவருக்கு எடைக்கு எடை நாணயங்கள் வழங்கினார்கள். அதையெல்லாம் சேர்த்து வைத்து தான் இப்போது வீடு கட்டிக் கொள்கிறார். அவர் வசிப்பது குடிசையில். எம்எல்ஏ வீடு கட்டிக் கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததுமே தொகுதி மக்கள் 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை நன்கொடைகளை வாரி வழங்கி விட்டார்கள். அவரிடம் அவ்வளவு பிரியம். எம் எல் ஏ ஆகி முதல் மாத சம்பளம் ரூ 1.10 லட்சம் கிடைத்ததும் அதை வைத்து தொகுதி ஏழைகளுக்கு உதவப் போகிறார். 46,000 ரூபாய், குடிசை நிற்கிற 600 சதுர அடி நிலம், 2 ஏக்கர் விளை நிலம் - இதுதான் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்த சொத்து விவரம்.

ஜெய் திரங்கா!
அலிகார் (உ.பி), ஜனவரி 31

ஜனவரி 26 குடியரசு தினம் என்றால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் இங்கெல்லாம் விழாக்கோலம் பூண்டு மூவர்ண தேசியக்கொடி உயர்த்தி தேசபக்தியைப் போற்றிப் பேசுவார்கள். இப்படித்தான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் குடியரசு தினத்தன்று ஏபிவிபி மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் மூவர்ண தேசிய கொடிகள் தாங்கி பைக்குகளில் அமர்ந்து ’திரங்கா யாத்ரா’ என்று ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் அவர்களைப் பாராட்டியது .என்றா நினைக்கிறீர்கள். அதுதான் கிடையாது. அனுமதி இல்லாமல் ஏன் நிகழ்ச்சி நடத்தினார்கள் என்று நிகழ்ச்சியை நடத்திய 2மாணவர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் விவகாரம் அலிகர் லோக்சபா தொகுதி பாஜக எம்பி சதீஷ் கவுதம் காதுகளை எட்டியது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு அவர் அலிகர் பல்கலை கழகத்தில் விபரீதமான சூழ்நிலை உருவாகி வருவதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். இதற்கிடையில் அந்த பல்கலைக்கழகத்தின் எம்டெக் மாணவர் சோனவீர், பல்கலைக் கழக நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டனம் செய்து தன் ரத்தத்தால் கடிதம் எழுதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரியிருக்கிறார்.

அரசியலில் புதிய தென்றல்?
கடப்பா (ஆந்திரப் பிரதேசம்), ஜனவரி 31
கடப்பாவை சேர்ந்த ஜோதி நீரஜா சத்யானந்தா ஒரு டாக்டர். மகளிர் மருத்துவத்தில் (பிரசவம்) புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். இதுவரை 8,000 அறுவை சிகிச்சைகள் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஏழை மக்களுக்காக இலவசமாக 300 அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். ஏழை மாணவிகளின் கல்விச் செலவை ஏற்கும் ’பீப்பிள் ட்ரீ பவுண்டேஷன்’ என்ற சேவை அமைப்பில் முக்கிய பங்காற்றும் டாக்டர் ஜோதி தற்போது தனது நண்பர் டாக்டர் சௌமியா கூறியதன் பேரில் தன் கணவர் இரு புதல்வர்கள் உள்ளிட்ட குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். (டாக்டர் சௌமியா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகள்). “எனது மனைவியின் சேவை மனப்பான்மை கண்டு சில அரசியல் பிரமுகர்கள் இவரை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தி வருகிறார்கள். அரசியலில் சேவை மனப்பான்மை உள்ளவர்கள், தொழில் முனைவோர்கள் அதிகமதிகமாக பிரவேசிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வருகிறது” என்கிறார் டாக்டர் ஜோதியின் கணவர் டாக்டர் உபேந்திரா. டாக்டர் ஜோதி, “நான் அரசியலில் பிரவேசிக்கலாம். ஆனால் தேர்தலில் நிற்கும் எண்ணம் எனக்கு இல்லை” என்கிறார்.

கண்காணிக்கும் வீச்சுடன் கடல் எல்லைக் கவசம் 
போர்ட் பிளேர் (அந்தமான் நிகோபார்), ஜனவரி 31

மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட யூனியன் பிரதேசமான அந்தமான்-நிக்கோபார் 572 தீவுகள் கொண்டது. இந்தியப் பெருங்கடல் பாதையைக் கண்காணிக்கும் நிலையிலுள்ள பாரத ராணுவ காவல்நிலை போல அமைந்துள்ளது அந்தமான். இந்தியப் பெருங்கடலையும் தென் சீனக் கடலையும் இணைக்கும் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதியை கடந்து இந்திய பெருங்கடல் வழியாக ஆண்டு தோறும் 1,00,000 வணிக கப்பல்கள் 231 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பண்டங்களை சுமந்து கொண்டு பயணிக்கின்றன. இதில் பெரும்பகுதி சீனாவின் எண்ணெய் உள்ளிட்ட பண்டங்கள் தான். அந்தமானில் பாரத ராணுவத்தின் மூன்று தளங்கள் இதுவரை செயல்படுகின்றன. ஜனவரி 24 அன்று பாரத கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பா வட அந்தமான் தீவில் கடற்படை தளம் ஒன்றை துவக்கி வைத்தார். இந்த தளம் வங்கதேசம், மியான்மர் நாடுகளின் கடல் எல்லைகளோடு தொடர்புடைய வங்காள விரிகுடாவின் வட பகுதியை கண்காணிக்க உதவும். இந்த தளத்திலிருந்து சிறு ரக வேவு விமானங்கள் புறப்பட முடியும்.

Post a Comment

0 Comments