SETU-9

நலகொண்டா (தெலுங்கானா) டிசம்பர் 11
சுற்றுச்சூழல் அழைத்தது, சுகவாழ்வை உதறினார் சுரேஷ் குப்தா
சுற்றுச்சூழல் ஆர்வலர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சுற்றுச்சூழலை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வீடு வாசலை எல்லாம் உதறி சூழல் பதுகாப்பையே முழுநேரப் பணியாக செய்கிறவர்கள் மிகச் சிலர். தெலுங்கானாவின் சுரேஷ் குப்தா அப்படிப்பட்டவர்களில் ஒருவர். 2017 ல் அவர் வங்கி மேலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். நலகொண்டாவில் உள்ள சுதா அர்பன் கோவாபரேடிவ் வங்கியில் பணிபுரிந்த அவர் ராஜினாமா செய்ய முடிவெடுத்த போது வேண்டாம் என்று உற்றார் உறவினர் தடுத்தார்கள். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க திடசங்கல்பம் செய்து கொண்ட சுரேஷ் அந்த தடைகளை ஒதுக்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு- விழிப்புணர்வுப் பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அக்கம் பக்கத்திலுள்ள பள்ளிக்கூடங்களுக்கு போவார், பிள்ளைகளுக்கு சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வார். இது அவரது தினசரிக் கடமையாகி விட்டது. இது தவிர சமூக அமைப்புகள், கல்வி நிலையங்கள், ரோட்டரி கிளப் போன்றவற்றை அணூகி சுற்றுச்சூழலின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சுரேஷ் வைத்திருக்கும் பையில் சில பூமாலைகள் எப்போதும் இருக்கும். வழியில் துப்புரவுப் பணியாளர் யாராவது குப்பை சேகரிப்பதைப் பார்த்தால் சுரேஷ் உடனே அவருக்கு ஒரு மாலை போட்டுப் பாராட்டி விட்டுப் போவார். “சமுதாயம் துப்புரவுத் தொழிலாளர்களை ஏளனமாகப் பார்க்கிறது, அவர்கள் ஒரே அழுக்கு என்று ஒதுக்கி வைக்கிறோம். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. எனவே துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதை செய்யும் பழக்கத்தைக் கடைபிடித்து வருகிறேன்” என்கிறார் சுரேஷ். “சுற்றுச்சூழல் பணிகளில் 15 ஆண்டுகளாகவே எனக்கு ஆர்வம் உண்டு வேலைக்குப் போக வேண்டியிருந்ததால் என்னால் குறைந்த நேரமே தர முடிந்தது. இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியிலேயே முழு நேரமும் ஈடுபடமுடிகிறது தூய்மை பாரதம் இயக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துச் செல்வது எனக்கு ஊக்கம் அளித்தது” என்று சுரேஷ் மேலும் தெரிவித்தார்.

இடாநகர் (அருணாச்சலப் பிரதேசம்) டிசம்பர் 11
ஷி யோமி: அருணாச்சலப் பிரதேசத்தின் புதிய மாவட்டம்
வடகிழக்கு பாரதத்தில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் இருபத்து மூன்றாவது மாவட்டம் ஞாயிறன்று (டிசம்பர் 9) உதயமாயிற்று. மேற்கு சியாங் மாவட்டத்தில் இருந்து பிரித்து அமைக்கப்பட்ட இந்த புதிய மாவட்டத்தின் பெயர் ’ஷி யோமி’. மலைப்பாங்கான இந்த மாவட்டத்தின் வசீகரமான மக்கள் மாவட்டத்தின் பிறப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். மாவட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். ஷி யோமி’ மாவட்டத்தில் மெச்சுகா, பிடி, டோட்டோ, மணிகாங் ஆகிய நான்கு மண்டலங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று புதிய மாவட்டங்களை அமைக்க கடந்த ஆகஸ்டில் மாநில சட்டப்பேரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. பக்கே கெஸாங், லெபா ராடா ஆகிய இரு மாவட்டங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஷியோமி மிகவும் பின்தங்கிய மாவட்டம். புதிய மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தேவையான அனைத்தும் செய்யும் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இம்பால் (மணிப்பூர்) டிசம்பர் 11
பாரதத்திற்குப் புதிய பெருமிதம் சேர்க்கிறது வடகிழக்கு ரயில்வே
உலகிலேயே மிக உயரமான சிலை குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைதான் என்ற பெருமிதத்தை அடைந்துள்ள பாரதம் இனி விரைவில் உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் உள்ள தேசம் என்ற பெருமிதத்தையும் அடைய இருக்கிறது. வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே வடிவமைத்து நிர்மாணித்து வரும் ஒரு அகல ரயில்பாதை திட்டம் முடிவடைந்ததும் இந்தப் பெருமிதம் நிஜமாகும். மணிப்பூர் மாநிலத்தின் இம்பாலிலிருந்து துபுல் வழியாக ஜிரிபாம் வரையிலான இந்த 111 கிலோ மீட்டர் புதிய இருப்புப் பாதை தடத்தில் தான் மேற்சொன்ன உயர்ந்த ரயில் பாலம் அமைந்துள்ளது பாலத்தின் நீளம் 703மீட்டர். பாலத்தின் தூண்கள் 141 மீட்டர் உயரமானவை. “தற்போது ஐரோப்பாவில் உள்ள 139 மீட்டர் உயர ரயில் பாலம் உலகிலேயே உயரமானது என்று கருதப்படுகிறது அந்தப் பெருமிதத்தை பாரதத்திற்கு கிடைக்கச் செய்துள்ள வடகிழக்கு எல்லை ரயில்வேயைப் பாராட்டுகிறேன்” என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்தார். 

பார்மேர் (ராஜஸ்தான்) டிசம்பர் 11
கோசாலை: தொழிலுக்குத் தொழில், புண்ணியத்துக்குப் புண்ணியம்!
கோமாதா மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் அமைத்த முதல் மாநிலம் ராஜஸ்தான். ஆனால் மாநிலத்தில் பார்மேர் நகரில் ஸ்ரீ கோபால் கோசாலை அரசின் கையை எதிர்பார்க்காமல் 1,258 பசுக்கள் உள்ள பசுமடத்தை கார்ப்பரேட் நிறுவனத்தின் நேர்த்தியுடன் லாபகரமாக நடத்தி வருகிறது. என்பது செய்தி. இந்த ஆண்டு விற்றுமுதல் மூன்றரை கோடி ரூபாய். நிகர லாபம் 50 லட்ச ரூபாய் பசும்பால், சாணம், கோமியம் விற்பனை மூலம் மட்டும் வந்த வருமானம் 11 லட்ச ரூபாய். தற்போது இந்த கோசாலை நிறுவனம் இந்த கோசாலையை விட பெரிதாக ஒன்றை பக்கத்திலேயே நிறுவத் தொடங்கியிருக்கிறது. 1998ல் இந்த கோசாலையை 31 பேர் தலா ஒரு லட்ச ரூபாய் முதல் போட்டு தொடங்கினார்கள். அந்த உறுப்பினர்கள் கோசாலையை நிர்வாகம் செய்யும் குழுவை தேர்வு செய்கிறார்கள். இந்த கோசாலையின் பிரம்மாண்டத்தை தெரிந்து கொள்ள பசுக்களுக்கான தீவனத்தை சேமித்து வைக்கும் கொட்டகையின் அளவை தெரிந்து கொண்டால் போதும். பெரிய விமானம் ஒன்றை அந்தக் கொட்டகைக்குள் நிறுத்த முடியும். கோசாலையில் நாள்தோறும் உற்பத்தியாகிற 600 லிட்டர் பால், பார்மேர் நகரில் விற்பனையாகிறது. கன்று ஈன்ற பசுக்கள், கன்றுகள், காளைகள், நோய்வாய்ப்பட்ட பசுக்கள் என்று இவை தனித்தனி வளாகங்களில் தங்குகின்றன. கோசாலையின் நடுவில் கண்ணனுக்கு ஒரு திருக்கோயில் காட்சியளிக்கிறது. பெரிய தராசின் ஒரு தட்டில் கன்றுடன் பசு மறு தட்டில் எடைக்கு எடை தர ஏதாவது பொருள் (வெல்லம், மாட்டுத் தீவனம் ...)! இந்த கோமாதா துலாபாரம் கோசாலையின் வருவாய்க்கு ஒரு வழி.

Post a Comment

0 Comments