சிம்லா (ஹிமாச்சல்), டிசம்பர் 7
இமயத்தின் மடியில் ’கௌரி’க்கு கொண்டாட்டம்!
தென் தமிழகத்தில் சில ஊர்களில் மலைமாடு என்ற வகை சிறுரக சுதேசி பசுக்கள் இருந்தன. இப்போது வெகுவாக குறைந்து விட்டன. அவை இனஅழிவுக்கு உள்ளாகாமல் காப்பாற்ற சிலர் முயற்சி செய்தார்கள். அது போல ஹிமாச்சல் பிரதேசத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் வெறுமனே ’பஹாடி ரகம்’ என்று மட்டும் அறியப்படும் பசுக்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. மற்ற இன சேர்க்கையால் கலப்பின பசுக்கள் அதிகரித்தன. பாலம்பூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மலை மாடுகளை அழிய விடக்கூடாது என்று எச்சரித்திருந்தார்கள். மலை மாடுகளின் சாணம், கோமியம் இவற்றால் விளைநிலத்தில் மண்புழு அதிகரித்து நல்ல உரம் உருவானது. தரமான விளைச்சல் கிடைத்தது. அது இப்போது குறைந்துவிட்டது. அதனால் விளைநிலங்கள் தரிசாக மாறி வருகின்றன. மாநில ஆளுநர் சத்யவிரதன் மலைமாடுகளுக்கு ’கௌரி’ என்று பெயர் சூட்டி இந்த வகை பசு இனம் அழியாமல் இருக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் காங்கேயம் காளைகளை ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று வாங்கிச் சென்று அதற்கு பிரம்மா என்று பெயரிட்டு அந்த இனத்தை வளர்ப்பதாக செய்தி வெளியானது. இப்போது ஹிமாச்சல் மலை மாடுகளுக்கு கௌரி என்ற பெயர் கிடைத்துவிட்டது. கிடைக்கவேண்டியது அந்த இனத்திற்கு மறுவாழ்வு. அதன் மூலம் மக்களுக்கு நல வழ்வு.
பிருந்தாவன் (உத்தரப் பிரதேசம்), டிசம்பர் 7
“அயோத்தி ராமர் கோயில்: பிரம்மாண்டம் மட்டுமல்ல,
அது பண்பாலயமும் கூட“: ஆர்.எஸ்.எஸ்
“மக்கள் மனதில் ராமபிரான்வாழ்ந்த அறநெறி சார்ந்த வாழ்க்கை ஆழமாக பதிந்திருக்கிறது. ராமபிரானுக்கு அயோத்தியில் கோவில் கட்டவேண்டும் என்று சொல்லும்போது குறிப்பிடுவது கட்டிடத்தை மட்டும் அல்ல, சமுதாயத்தை ராமபிரானின் நற்பண்புகளுக்கு அடையாளமாக நிலை நிறுத்தவே விரும்புகிறோம்” என்று “ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத இணை பொது செயலர் கிருஷ்ண கோபால் பிருந்தாவனத்தில் கேசவதாம் அன்னகூட பிரசாதி திருவிழாவில் கலந்துகொண்டு பேசுகையில் கூறினார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது: “முகலாயர் ஆட்சிக்காலத்தில் சமுதாயத்தில் நற்பண்புகளை நிலை நிறுத்த துளசிதாசர் ராமபிரான் வாழ்க்கையை ராமாயணமாக வடித்து அளித்தார்..அயோத்தியில் ராமர் கோயில் வரவேண்டும் என்பது நம் அத்தனை பேருடைய ஆசை. ஆனால் 68 ஆண்டுகளாக நீதிமன்றம் தீர்ப்பு எதுவும் தராமல் இருந்து வருகிறது எனவே இந்து சமுதாயம் மக்கள் நீதி மன்றத்தை நாடுகிறது.. தாங்கள் விழித்துக் கொண்டு விட்டோம் என்று இந்துக்கள் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவ்வப்போது விஸ்வரூப தரிசனத்தையும் காட்ட வேண்டியுள்ளது.. ராமர் கோயில் விஷயத்தை ஏன் தீர்க்காமலே வைத்துவர வேண்டும் என்று இந்து சமுதாயம் கேள்வி எழுப்ப வேண்டிய நிலை வந்திருக்கிறது..” பிருந்தாவனத்தின் கேசவ தாம் பள்ளியில் வடகிழக்கு மாநிலங்களின் மாணவர்கள் வந்து தங்கி படித்து. திரும்ப தங்கள் தங்கள் ஊர்களுக்குப் செல்கிறார்கள் ஆனால் இங்கே கிடைக்கிற அன்பு பதிவு அவர்கள் மனதில் நிலைத்து விடுகிறது. ஒரே தேசம் என்ற எண்ணம் மனதில் இடம் பிடிக்கிறது. இங்கே படிக்கும் போது பயங்கரவாத சூழலில் இருந்து விலகியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பகுதிகளில் நற்பண்புகளால் தங்கள் சமுதாயத்திற்கு நல்வழி காட்ட முடிகிறது. இளம் தலைமுறை வாயிலாக இவ்வாறு மாற்றம் ஏற்படுகிறது”. இவ்வாறு கிருஷ்ண கோபால் பேசினார்.
அமிர்தசரஸ் (பஞ்சாப்), டிசம்பர் 7
மக்கள் கண்ணீர் துடைக்கும்
ஆர்.எஸ்.எஸ் மரபு தொடர்கிறது
எங்கு பேரிடர் நேர்ந்தாலும் அங்கு முதல் ஆளாக ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் சென்று, விரைவாக திட்டமிட்டு பல குழுக்களாக அணிதிரண்டு, உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பைப் பெற்று, மீட்பு - நிவாரண - மறுவாழ்வுப் பணிகள் முழுமை பெறச் செய்வது தேசத்தில் மரபாகி உள்ளது இதற்கு மிக சமீபத்திய உதாரணம் அமிர்தசரஸ் நகரில் விஜயதசமி அன்று நடந்த ஒரு சம்பவம். பெரும் கூட்டமாக மக்கள் ராமலீலா திருவிழா பார்க்க ரயில் பாதை மீது நின்று கொண்டு இருந்தார்கள். திடீரென ரயில் வந்து விட்டது. 50 பேருக்கு உயிரிழந்தார்கள். ஏராளமான மக்களுக்கு படுகாயம். செய்தி கேட்ட மறு நிமிடமே அமிர்தசரஸ் மகாநகர் ஆர்.எஸ்.எஸ் செயலர் கன்வல் கபூர் சம்பவ இடத்தை ஒட்டிய பகுதியின்ஆர்.எஸ்.எஸ் கிளை ஸ்வயம்சேவகர்களை அணிவகுக்க செய்து, அவர்கள் மூலமாக மகாநகர் முழுவதும் இருந்து 175 ஸ்வயம்சேவகர்கள் ஒன்றுகூட செய்து, அவர்களை மூன்று அணிகளாக பிரித்து, நகரின் மூன்று பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்கள் காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதிலும் அவர்களின் உறவினர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதிலும் இரவு முழுவதும் ஈடுபட்டார்கள். ரத்த தானம் செய்ய இன்னொரு அணி ஸ்வயம்சேவகர்கள் மருத்துவமனை வாசலில் வரிசையாக நின்றார்கள். மறுநாள் தொடங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊர் பெருமக்களின் உதவியோடு நிதி உதவி ஏற்பாடு செய்து, அரசு நிதி உதவி பெற ஆவணங்களை நிரப்புவதற்கும் அவர்கள் உறுதுணை புரிந்தார்கள். விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துடனும் அறிமுகம் செய்துகொண்டு நீடித்த அளவில் நிவாரணம் அளித்தார்கள் அமிர்தசரசின் ஆர்எஸ்எஸ் அன்பர்கள். இதற்கு நேர்மாறாக விபத்து நடந்து பல மணி நேரம் வரை அரசியல்வாதிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மசூலிப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), டிசம்பர் 7
மொபைல் மோகத்தால் வந்த விபரீதம்
மசூலிப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் சிலநாட்களுக்கு முன் ’மீ கோஸம்’ என்ற வாராந்திர குறைகேட்பு நிகழ்ச்சிக்கு வந்த ஒரு விவசாயி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். கடந்த 10 மாதங்களாக தன்னுடைய நிலத்தகராறு புகாரை யாரும் கவனிப்பதில்லை என்று விரக்தி வந்து அவர் இந்த முடிவெடுத்தார் என்று கூறப்படுகிறது. விழுந்தவரை அங்கிருந்தவர்கள் பலரும் மொபைலில் படம் எடுத்தார்களே தவிர உதவவில்லை. வெகு நேரம் சென்றபின் ஒரு காவலர் வந்து அந்த விவசாயியை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த வரப்பிரசாத் என்ற அந்த 52 வயது விவசாயிக்கு நேர்ந்த பரிதாபத்தை மக்கள் வேடிக்கை பார்த்தது மட்டும் அல்ல, செய்தி சேனல்கள்அந்த மானுடத் துயரை காட்சிப்படுத்தி பரபரப்பு ஏற்படுத்துவதிலேயே கவனம் செலுத்தியது பரவலான கண்டனத்துக்கு உள்ளானது. மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கிறா. தவறிழைத்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை மாற்றுவது எப்படி இனிமேல்தான் யோசிப்பார்களோ?
0 Comments