புதுடில்லி (டில்லி), டிசம்பர் 5
1984: காங்கிரஸிற்கு சிம்ம சொப்பனமான ஒரு விசாரணை
இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து 1984ல் மிகப் பரவலாக சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். டில்லியில் மட்டும் 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ஜனவரி 11 அன்று உச்ச நீதிமன்றம் அந்த படுகொலைகள் பற்றி விசாரிக்க இரண்டு பேர் கொண்ட ஒரு சிறப்பு குழு விசாரணை குழுவை நியமித்தது. அந்தக் குழு விசாரணை நடத்தி வந்தது. அதில் ஒருவர் பதவி விலகியதால் மத்திய அரசு இரண்டு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை பரிந்துரைத்தது. அதை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 3 அன்று ஏற்றுக்கொண்டது. அரசு நியமித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என் திங்கரா,பணியிலுள்ள ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் துலார் ஆகிய இருவரும் விசாரணையை தொடர்ந்து மேற்பார்வையிடுவார்கள். சீக்கியர் படுகொலை குறித்து 186வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஒரு பெரிய ஆலமரம் விழுந்தால் ஏராளமான உயிரினங்கள் பாதிக்கப்படுவது சகஜம் என்று பேசி படுகொலைகளை அன்று காங்கிரஸ் தரப்பு நியாயப்படுத்தியது மக்கள் மனதில் வடுவாகப் பதிந்தது. காங்கிரசே உருவாக்கிய பிந்தரன்வாலே என்ற பயங்கரவாதியை ஒழிக்க ராணுவம் சீக்கியர்களின் அமிர்தசரஸ் பொற்கோவில் முற்றுகையிட்ட போது கோவில் சேதமடைந்தது. இதையடுத்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது இரண்டு சீக்கிய பாதுகாவலர்களே கொன்றார்கள். அடுத்து நடந்த பரவலான கலவரத்தில் சீக்கியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டார்கள். நாடு நெடுக மொத்தம்3,000 க்கும் அதிகமான சீக்கியர்கள் உயிரிழந்தார்கள். அதன்பின் பல பத்தாண்டுகள் நடந்த காங்கிரஸ் அரசுகள் அந்தப் படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்க தவறின என்பது குறிப்பிடத்தக்கது.
கோரக்பூர் (உத்தரப் பிரதேசம்), டிசம்பர் 5
“ஆர்.எஸ்.எஸ் நூறாண்டு காண்பதற்கு முன்
தேசத்தை உலக குரு ஆக்குவோம்”: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்
“முழு உலகமும் இன்று பாரதத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவது போலவே பாரத சமுதாயம் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்ஸை) நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறது சமுதாயத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு சங்க ஸ்வயம் சேவகர்களுக்கு உண்டு”. இவ்வாறு உத்தரப் பிரதேசம் கோரக்பூர் நகர ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பேரணியில் பேசுகையில் ஆர்எஸ்எஸ் அகில பாரத சாரீரிக் (உடற்பயிற்சி) பொறுப்பாளர் சுனில் குல்கர்ணி கூறினார். மேலும் அவர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் கடந்த 94 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் நாட்டில் எத்தனையோ அமைப்புகள் உருவாக்கப்பட்டன அவற்றில் பல காணாமல் போய்விட்டன, மேலும் பல சிதறிவிட்டன. ஆனால் ஆர்எஸ்எஸ் உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு வளர்ந்து வருகிறது. சங்க ஸ்வயம்சேவகர்கள் செய்யும் தொண்டுகளால் சங்கத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. சமுதாயத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஸ்வயம்சேவகர்களுக்கு ஏற்பட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை ஸ்வயம் சேவகர் ஆக்குவது பிறகு ஸ்வயம்சேவகர்களை காரியகர்த்தா ஆக்குவது - இதுதான் ஆர்.எஸ்.எஸ் செயல்படும் முறை. பாரதத்தை உலகின் குருவாக்க உயர்த்துவது தான் ஆர். எஸ். எஸ்ஸின் லட்சியம். சங்கம் 100 ஆண்டுகளை அடைவதற்கு முன் இந்த லட்சியத்தை அடைய வேண்டும். அதற்கு ஸ்வயம்சேவகர்கள் அதிகமதிகமாக நேரம் கொடுத்து சங்கப் பணிபுரிய வேண்டும் - இவ்வாறு சுனீல் குல்கர்ணி பேசினார். சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் பிருத்விராஜ் சிங் நிகழ்ச்சியில் உடனிருந்தார்.
இம்பால் (மணிப்பூர்), டிசம்பர் 5
உலகை ஈர்க்கும் ’சங்காய் திருவிழா’, மணிப்பூர்
நவம்பர் 21 முதல் 30 வரை ’சங்காய் திருவிழ”, மணிப்பூர் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது. மாநில சுற்றுலாத் துறை திருவிழாவை நடத்துகிறது மணிப்பூரில் மட்டுமே காணப்படும் சங்காய் மானின் நினைவாக சங்காய் திருவிழா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மான் மணிப்பூர் மாநில விலங்கு.. இந்த திருவிழாவின் போது உள்ளூரில் தயாரான கைவினைப் பொருட்களும், கலை வேலைப்பாடுகள் நிறைந்த ஓவியங்களும், உணவு வகைகளும் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் திருவிழாவை வண்ண்மயமாக்குகின்றன. சங்காய் திருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த ஜப்பானிய சுமோ குஸ்திப் போட்டி நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங், “அன்பையும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் நிகழ்ச்சி சங்காய்.. இந்த திருவிழாவில் கடந்த இரு ஆண்டுகளாக ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகள் ஆர்வத்துடன் பங்கேற்பது சிறப்பு” என்றார். சங்காய் திருவிழா மணிப்பூருக்கு சுற்றுலா பயணிகளை அதிகமதிகமாக ஈர்த்து வருகிறது என்று அவர் சொன்னார்.2014-15ல் மாநிலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 300-400. கடந்த 2017 – 18ல் இந்த எண்ணிக்கை 4,000 ஆனது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஜப்பானியர்கள் மணிப்பூரில் ஆர்வம் காட்டுவதை அவர் வரவேற்றார். மீன் வளர்ப்புத் தொழிலுக்கும் இம்பால் – கோஹிமா சாலை திட்டத்திற்கும் அவர்கள் தோள் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள் என்றார் பிரேன் சிங்.
மங்களூரு (கர்நாடகா), டிசம்பர் 5
“நல்ல தொண்டு செய்பவர்களுக்கு எத்தனையோ அமைப்புகளும் கல்வி நிலையங்களும் விருதுகள் வழங்குவது உண்டு. விருதுக்கு தகுதியானவர்கள் கிடைக்காமல் போவதும் உண்டு..காரணம் உண்மையான சமூக சேவகர்கள் சந்தடியில்லாமல் சேவை செய்வதுதான் வழக்கம்..புகழ் வெளிச்சத்தை விரும்பாத அப்படிப்பட்டவர்களை கண்டுபிடிப்பதும் சிரமம். அவர்கள் செய்யும் தொண்டுகளால் பயன் அடைகிற மக்களும் தங்களுக்கு பயன் கிடைக்கச் செய்த சமூக சேவகரை மறந்து விடுகிறார்கள். பயனை மட்டும் அனுபவிக்கிறார்கள். மங்களூருவில் உள்ள நித்தே பல்கலைக்கழகம். உண்மையான சமூக சேவகர்களை கண்டறிந்து கௌரவிக்கும் அரும்பணியை செய்துள்ளது” என்று நாகாலாந்து ஆளுநர் பத்மநாப ஆச்சார்யா கூறினார். அண்மையில் வடகிழக்கு மாநிலங்களில் தொண்டாற்றும் இரு சமூக சேவகர்களுக்கு அந்த பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆச்சாரியா, “தன்னலமற்ற தொண்டர்களை இது போல் ஊக்குவிப்பது மேலும் பலரை சேவையில் ஈடுபட ஊக்குவிக்கும், நமது கலாச்சார பாரம்பரியம், சுற்றுச்சூழல் தேசத்தின் சுபிட்சம் ஆகியவற்றுக்காக பாடுபட தூண்டும். எனவே எல்லா பல்கலைக்கழகங்களும் இதுபோல உண்மையான சமூக சேவகர்களை கௌரவிக்க முன்வர வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற அந்த இருவர்: 1 பொறியாளர் லட்சாம் கிமும், அருணாச்சல பிரதேசம், 2 ராம்குயி ஜெமே, அஸ்ஸாம். (உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு லோக்சபா சபாநாயகராகவும் இருந்த கே எஸ் ஹெக்டே தொடங்கிய பல்கலைக்கழகம் அவரது சொந்த ஊரான நித்தே என்ற பெயரைத் தாங்கியுள்ளது).
0 Comments