SETU-20

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏபிவிபி மாநாட்டில்
ஆமதாபாத் (குஜராத்), டிசம்பர் 28
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் 64-வது மூன்று நாள் தேசிய மாநாடு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் டிசம்பர் 27 அன்று தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ கே கிரண் குமார் துவக்கி வைத்தார். முதலமைச்சர் விஜய் ரூபானி, ஏ.பி.வி.பி அகில பாரதத் தலைவர் டாக்டர் எஸ். சுப்பையா, பொதுச் செயலாளர் ஆசீஷ் சவான் உள்ளிட்ட பிரமுகர்கள் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலிருந்து: “அரசியல், சமுதாய மாற்றத்துடன் எதிர்கால கொள்கை உருவாக்கம் குறித்து இளைஞர்களான மாணவர்கள் சொல்லும் யோசனைகளும் அளிக்கும் ஒத்துழைப்பும் பயனுள்ளவை. நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், உயிர்ப்புடன் ஒத்துழைத்ததால் கதந்த சில ஆண்டுகளில் நாம் பல்வேறு துறைகளில் மதிப்பார்ந்த சாதனைகள் படைக்க முடிந்தது. தேசம் வளர்ச்சிப் பாதையில் இடையறாமல் முன்னேறி வருகிறது. 2022 பாரத சுதந்திரத்தின் 75வது ஆண்டு. அந்த ஆண்டிற்குள் புதிய பாரதம் என்னும் நமது கனவு நனவாகிடுவதில்இளைஞர் பங்களிப்பு மகத்துவம் வாய்ந்தது. இளைஞர்களான மாணவ-மாணவிகளின் நலனிலும் தேசிய நலனிலும் வித்யார்த்தி பரிஷத் தீவிரமாக ஈடுபடுவது பாராட்டுக்குரியது. இந்த மாநாட்டில் மாறிவரும் காலத்தின் சவால்கள், தேசத்தின் வளர்ச்சி, சமுதாயத்திடம் கொண்டுள்ள பொறுப்புணர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆக்கபூர்வமாக, ஆழ்ந்து சிந்தனை செய்து, பலன் தரும் கலந்துரையாடல்கள் நிகழும் என்று நம்புகிறேன்” - இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அது மதமாற்றமல்ல,அவர்கள் தாய்மதம் திரும்பினார்கள்
மயின்புரி (உத்தரப் பிரதேசம்), டிசம்பர் 28

ஆக்ராவை அடுத்த மயின்புரியில் கிறிஸ்துமஸ் அன்று பலர் ஹிந்து மதமாம் தாய்மதம் தழுவினார்கள். இவர்கள் தலித் குடும்பங்களை சேர்ந்தவர்கள். அண்மையில் ஆசைகாட்டப்பட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டவர்கள். இப்போது ஹிந்து மதம் திரும்பிவிட்டார்கள். பஜ்ரங்தள் அமைப்பு ஹோமம் ஒன்று நடத்தி சுத்திகரண சடங்கு செய்து அவர்களை ஹிந்து மதத்தில் மறுபடியும் சேர்த்தது. அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுசீல் யாதவ். கூறினார்: “ஈஸ்டர் தினத்தன்று ’நகலா ராம்சிங்’ கிராமத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் நடந்தது. மாற்றப் பட்டவர்களில் தலித் குடும்பத்தினரும் உண்டு. அந்த ஊருக்கு நாங்கள் போன போது கடுமையான விவாதம் நடந்தது. அப்போது முதற்கொண்டு நாங்கள் அந்த குடும்பங்களோடு இடைவிடாமல் தொடர்பு கொண்டி ருந்தோம். அவர்களுக்கு விஷயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்த பின் அவர்கள் தாங்களாக சமய நம்பிக்கை கொண்டு தாய் மதம் திரும்ப விருப்பம் தெரிவித்தார்கள். இதையடுத்து தான் கிறிஸ்மஸ் அன்று ஹோமம் நடத்தி அந்தக் குடும்பங்கள் தாய்மதம் திரும்பிட துணை புரிந்தோம். அந்த குடும்பங்களின் பிரமுகர் உள்பட 20 பேர் இந்துக்க ளானார்கள்.” “நாங்கள் ஒருபோதும் மதமாற்றம் செய்தது இல்லை” என்றார் ஹோமத்தில் கலந்துகொண்ட சஞ்சய். “தாய்மதம் திரும்பியவர்கள் தங்களுக்கு உரிய சமூகத்தில் மீண்டும் இணைந்து கொள்ள ஹோமத்தின் போது சங்கல்பம் செய்து கொண்டார்கள்” என்றார் ஹோமத்தை நடத்திவைத்த அதுல் துவிவேதி.

“விண்வெளியிலும் கைகொடுக்கிறது யோகா”:
ராம்நாத் கோவிந்த்
மும்பை (மகாராஷ்டிரா), டிசம்பர் 28
மும்பை சாந்தாகுரூஸ் அருகில் உள்ள ”யோகா இன்ஸ்டிட்யூட்’ நூறு ஆண்டுகளாக நடக்கிறது. நூற்றாண்டு நிகழ்ச்சிகளை தொடக்கி வைத்த பாரத குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், “யோகா என்பது பாரதத்தின் மென் திறனை உலகத்திற்கு எடுத்துக் காட்டும் வல்லமை கொண்டது. யோகாவை முன்னெடுத்து செல்ல யோகப் பயிற்சி நிலையங்களை வலுப்படுத்தி யோக ஆசிரியர்களை உருவாக்குவது மிகவும் அவசியம்” என்று சொன்னார். பள்ளி பாடத்திட்டத்தில் யோகா இடம்பெறச் செய்த மகாராஷ்டிர மாநில அரசையும் அது போன்ற பிற மாநிலங்களையும் அவர் பாராட்டினார். பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் யோகா கை கொடுக்கிறது என்று கூறிய அவர் விண்வெளிப் பயணம் செய்த முதல் இந்தியரான ராகேஷ் சர்மாவின் அனுபவத்தை விவரித்தார். விண்வெளிப் பயணத்தின் போது ஏற்பட்ட உடல் பாதிப்பை யோகா மூலம் சரி செய்து கொண்டதாக ராகேஷ் சர்மா சொல்லியிருந்தார். யோகா இன்ஸ்டிட்யூட்டை 1918 ல் யோகா குரு யோகேந்திரர் லாப நோக்கமின்றி நிறுவினார். இந்த நிலையம் 120 நாடுகளில் 55,000 யோகா ஆசிரியர்களை பயிற்சி கொடுத்து உருவாக்கியிருக்கிறது. இந்த அமைப்பிற்கு மத்திய அரசின் ’ஆயுஷ்’ அமைச்சகத்தின் பிரதமர் விருது வழங்கப்பட்டது. மாநில முதல்வர், ஆளுநர்,இன்ஸ்டிட்யூட்டின் இன்றைய இயக்குனர் ஹம்ஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

தேசிய ’ஜோதி’யில் சங்கமிக்கிறது கேரளம்
திருவனந்தபுரம் (கேரளா), டிசம்பர் 28
புதனன்று (டிசம்பர் 26) திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை மாநிலம் நெடுக நடைபெற்ற ’ஐயப்ப ஜோதி” அறப் போராட்டத்தில் ஆண்களும் பெண்களுமாக 22 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் சமய மரபுகளைத் தகர்க்க மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு சதி செய்வதை எதிர்த்து நடந்த இந்த பிரமாண்டமான மக்கள் எழுச்சியில் ஏராளமான மார்க்சிஸ்டுகளின் குடும்பத்துப் பெண்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் மார்க்சிஸ்டுகளுக்கு பயந்து தங்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று தடுத்தார்கள். இவ்வாறு மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தார். நாங்கள் எப்போதும் பக்தர்கள் பக்கமே என்று சொல்லி வந்த தேவசம் போர்டு இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது. ஜோதி நிகழ்ச்சியை அடுத்து பெரிய மாற்றங்கள் வரும் என்று ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்தார். ஏராளமான காங்கிரஸ்காரர்களும் மார்க்சிஸ்டுகளும் பாஜகவில் சேர விருப்பம் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

Post a Comment

0 Comments