SETU-2

ஆக்ரா (உத்தரப் பிரதேசம்) டிசம்பர் 4
ஆயுஷ்மான் பாரத் இந்த ஆக்ராவாசிக்கு வரப்பிரசாதம்

ஆக்ரா அரசு மருத்துவமனையில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த தேவேந்திரா என்ற 50 வயது இதய நோயாளிக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. பாரத அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் மட்டும் இல்லாமலிருந்தால் தேவேந்திரா இந்த சிகிச்சை செய்து கொண்டிருக்க முடியாது, அது அவருக்கு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது என்று ஆக்ரா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி முகேஷ் வத்ஸ் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் இதுவே மாநிலத்தின் முதல் இதய அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா மாநிலம்தான் தேசத்திலேயே ரொக்கமில்லாத,காகிதம் இல்லாத,மருத்துவ சேவை வழங்கி உள்ளது. அந்த மாநிலத்தில் கர்னால் நகரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தையின் சிகிச்சைக்கான செலவு முதல் தவணை 9,000 ரூபாய் செலுத்தப்பட்டது. செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் மூன்றரை லட்சம் ஏழை எளிய மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். 10 கோடிக்கும் அதிகமான வறிய குடும்பங்களின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்ளும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

வடோதரா (குஜராத்) டிசம்பர் 4

சவிதா பென்னுக்கு, தேச வளர்ச்சி முக்கியம் சொத்து அல்ல


தேசத்தின் முதல் புல்லட் அதிவிரைவு ரயில் தடம் அமைக்கும் பணிக்கு சவிதா பென் தனது மூதாதையர் பூமியை தானமாகத் தந்திருக்கிறார். 80 வயதைத் தாண்டிய அவர் அளித்துள்ள நிலம் சுமார் 12 ஹெக்டேர். அதற்கு வெறும் 30,000 ரூபாய் மட்டும் பெற்றுக்கொள்ள சம்மதித்திருக்கிறார். குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்தில் உள்ள சன்சத் கிராமத்தை சேர்ந்த சவிதா பென் தற்போது ஜெர்மனியில் வசிக்கிறார். அங்கு இந்திய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். புல்லட் ரயில் திட்டத்துக்காக மாநிலத்தில் கையகப்படுத்தப்படும் முதல் துண்டு நிலம் இது என்று திட்டத்தின் செய்தித் தொடர்பாளர் தனஞ்ஜய் குமார் தெரிவித்தார். ஆமதாபாத்தில் இருந்து மும்பை வரையிலான 508 கிலோ மீட்டர் புல்லட் ரயில் தடம் அமைக்க 1,400 ஹெக்டேர் நிலம் தேவை. அதில் சுமார் 1,200 ஹெக்டேர் தனியாரிடம் இருந்து தான் பெற வேண்டும். உலகப் புகழ்பெற்ற சுவாமிநாராயண் ஆன்மீக இயக்கத்தின் தலைவர் பிரமுக் சுவாமி பிறந்ததும் சன்சத் கிராமத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை (மகாராஷ்டிரா) டிசம்பர் 4

“ராமர் கோயில் கட்ட அரசுதான் வழிவகை செய்ய வேண்டும்”:

ஆர்.எஸ்.எஸ் அறைகூவல்


அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் அமைக்கும் தீர்மான மசோதாவை (டிசம்பர் 11 அன்று தொடங்கும்) நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் அரசு அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அகில பாரத இணை பொதுச் செயலர் (ஸஹசர்கார்யவஹ) தத்தாத்ரேயா கூறினார். மும்பையில் டிசம்பர் 2 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான பொதுககூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். ராம ஜென்ம பூமியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் கீழ் கோயில் இருந்ததற்கு அகழ்வாராய்ச்சி சான்று கிடைத்திருக்கிறது என்பது அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிலேயே தெளிவாகிவிட்டது. ஆனாலும் ராமர் கோயில் கட்ட இன்றும் நிலம் கிடைத்தபாடில்லை. வாமன அவதாரத்தில் விஷ்ணு மூன்றடி வைத்தே மூவுலகையும் அளந்தார். ஆனால் விஷ்ணுவின் அடுத்த அவதாரமான ராம பிரானுக்கு கோயில் எழுப்ப இந்துக்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது. ராமஜென்ம பூமியில் கோயில் இருந்ததற்கான போதிய ஆதாரம் கிடைத்திருப்பதால் மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி அங்கே கோயில் கட்ட நிலம் தர வேண்டும்..கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயத்தில் உச்சநீதிமன்றம் முன்னுரிமை அளிக்காததால் மத்திய அரசுதான் ராமர் கோயில் கட்ட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு தத்தாத்ரேயா கூறினார். கூட்டத்தில் துறவியர்கள் பலரும் பங்கேற்றார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் கலந்து கொண்டார். பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்ட அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி பெங்களூரு, நாகபுரி போன்ற பெருநகரங்களில் பரிஷத் இதுபோன்ற பிரம்மாண்டமான கூட்டங்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 9 அன்று மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ராம பக்தர்கள் கூடும் மாபெரும் பொது நிகழ்ச்சி ஒன்றையும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்து வருகிறது என்று சுரேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
                                                                                                         (விஸ்வ சம்வாத் கேந்திரம்)


ராஜமுந்திரி (ஆந்திரப் பிரதேசம்) டிசம்பர் 4

“கோதாவரி கோயில் வாசலில் மதமாற்றத்திற்கு இடம் கொடுத்தது 

ஆந்திர அரசின் சட்டவிரோத செயல்”: ஹைதராபாத் 
என்ஜிஓ




இந்தியாவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வருவது பற்றி பல மட்டங்களில் விவாதம் நடைபெற்று வரும் இந்த வேளையில் ஆந்திர பிரதேசம் ராஜமுந்திரி நகரை ஒட்டிய கோதாவரி கட்டத்தில் மார்க்கண்டேயர் சுவாமி திருக்கோயில் சன்னிதியில் கிறிஸ்தவ குழுக்கள் ஞானஸ்நானம் என்ற பெயரில் இந்துக்களை ஒட்டுமொத்த மதமாற்றம் செய்வதற்கு முயன்ற போது பக்தர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்கள். காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள். அந்த மதமாற்ற குழுவினரும் தங்கள் சட்டவிரோத மதமாற்ற நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கொடுக்க கோரி அரசை அணுகினார்கள். புகார் கொடுத்த ஹிந்துக்களிடம் அப்பகுதி சப்-கலெக்டர் நீர் நிலை எல்லோருக்கும் பொதுவானது தானே என்று விபரீதமாக விளக்கம் அளிக்கவே, அந்த ஞானஸ்நான நிகழ்ச்சிக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்தது. இது நடந்து நவம்பர் 15 அன்று. மறுநாள் பக்தர்கள் தங்கள் சமய உரிமை பாதுகாப்பு போராட்டத்தை அரசின் உயர் மட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல கோதாவரி படித்துறை ஒன்று கிறிஸ்தவர்களுக்கு என ஒதுக்கப்பட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. இந்து சைதன்ய வேதிகா அமைப்பு இதை கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையில் ஹைதராபாத்தில் இருந்து இயங்கும் சட்ட உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு என்ற என்ஜிஓ, மதமாற்றம் செய்ய இடம் ஒதுக்கிக் கொடுத்து உத்தரவு போட சப் கலெக்டருக்கு ஏது அதிகாரம் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியது.
                                                                                                          (விஸ்வ சம்வாத் கேந்திரம்)

Post a Comment

0 Comments