நகர்ப்புற நக்ஸல் வலைப் பின்னல் சிதறடிப்பு!
ராஜநந்தகாம் (சத்தீஸ்கர்) டிசம்பர் 26
நகர்ப்புற நக்ஸல் தொடர்பு சங்கிலியில் ஒரு ‘கண்ணி’ சத்தீஸ்கர் காவல்துறையினரிடம் சிக்கியது. போலீசாரிடம் சிக்கிய நக்ஸல் கூட்டாளி மத்திய அரசின் ஒரு துறையில் உயர் பதவி வகித்தவன் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. என். மூர்த்தி, என். வெங்கடராவ் போன்ற பெயர்களில் அந்த நபர் நடமாடி வந்துள்ளான். காவல்துறை விரைவில் கூடுதல் தகவல் தரக்கூடும். இந்த ஆசாமி திரைமறைவில் இருந்தபடி நக்ஸல்களின் வலைப்பின்னலை இயக்கினான். 2017ல் பகார்ஜோலா என்ற ஊரில் மூன்று நாட்கள் தங்கி நக்ஸல்களின் கூட்டம் நடத்தியுள்ளான். நீண்ட நாட்களாக காவல் துறையின் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டிருக்கிறான். துர்க் வட்டார ஐஜி ஜி.பி. சிங், வெங்கட் என்பவன் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். அந்த நபரிடம் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட் பல ஆண்டுகளாக தெலுங்கானா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நக்ஸல் பயிற்சி முகாம்கள் நடத்தி இயக்கம் கட்டமைத்து வந்திருக்கிறான் என்று கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள வெங்கட், பாரத அரசின் ஜியோ பிஸிகல் துறையிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவன். 1980 லிருந்தே நக்ஸல்ளின் நகர்ப்புற வலைப்பின்னலை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறான்.
எல்லோரும்தான் டிவி பார்க்கிறார்கள்...
சில்பகுண்டா (தெலங்கானா), டிசம்பர் 26
சூர்யாபேட் மாவட்டம் சில்பகுண்டா கிராமத்தில் வசிக்கும் ராமச்சந்திரய்யா இளம்பிள்ளை வாதத்தால் அவதிப்படுபவர். இவரை கவனித்துக் கொண்ட இவருடைய 93 வயது தாய் முதுமையால் படுத்த படுக்கையாகி விட்டார். பிழைப்புக்கு வேறு எதுவும் செய்ய இயலாத நிலையில் பிச்சை எடுத்து வந்தார் ராமச்சந்திரய்யா. இவரது வீடு கூரை இல்லாத குடிசை. இந்த சோக சித்திரத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரச்சகொண்டா போக்குவரத்து காவல் ஆய்வாளர் அஞ்சமல்லு உடனே புறப்பட்டு அந்த ஊருக்கு போனார். ராமசந்திரய்யா குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்க அவருக்கு ஆசை. அதற்கு ஆகும் தொகை இவரிடம் இல்லை. தன்னிடம் இருந்த மோதிரத்தையும் சங்கிலியையும் தன் மகள் வளையல்களையும் விற்றார். வீடு கட்டிக் கொடுத்தார். புதுமனை புகுவிழாவில் அந்த தாய்க்கும் மகனுக்கும் இரண்டு செட் புத்தாடை பரிசளித்தார். பிறகுதான் ஊர் திரும்பினார். இவருடைய சொந்த மாவட்டம் சூர்யாபேட் என்பது கூடுதல் தகவல். மக்களுக்கு இதமான விதத்தில் காவல் பணி புரிய வேண்டும் என்று மேலதிகாரிகள் கூறுவதுதான் தனக்கு இது போல செய்ய ஊக்கம் என்கிறார் இவர்.
ஒரு சிறுவன் புன்னகைப்பதும் இவருக்கு முக்கியம்!
இம்பால் (மிசோரம்), டிசம்பர் 26
மிசோரம் மாநிலம் ஜெதேத் கிராமத்தில் வசிக்கும் 11 வயது சிறுவன் லைரிந்திகா. இவனுக்கு பிறவியிலேயே பிளவுபட்ட உதடு. இவன் நண்பர்கள் இவனை கேலி செய்வார்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மணிப்பூர் மாநிலத்தில் இருந்து தேர்தல் பணியாக அந்த ஊருக்குப் போன மணிப்பூர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்ம்ஸ்ட்ராங் பாமே, அறுவை சிகிச்சை மூலம் இந்தக் குறைபாட்டைத் தீர்க்கலாமே என்று சிறுவனின் குடும்பத்திற்கு யோசனை சொன்னார். அது மிகவும் ஏழ்மையான குடும்பம் என்று தெரிய வந்தது. பணம் கொடுத்து குடும்பத்தை மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு அனுப்பி வைத்தார். அங்கே இவரது நண்பர்கள் அந்த சிறுவன் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள துணை புரிந்தார்கள். மருத்துவச் செலவு முழுவதையும் அந்த ஐஏஎஸ் அதிகாரியே ஏற்றுக்கொண்டார். லைரிந்திகா இப்போது தைரியமாக நண்பர்கள் முன் புன்னகைக்க முடிகிறது. “இந்த உதவிக்காக அவரை நாங்கள் மறக்கவே மாட்டோம். கடவுளே அனுப்பி வெச்ச மாதிரிதான் இருக்கு” என்கிறார் சிறுவனின் தந்தை வன்லசியமா நன்றி பொங்க. நல்ல பணி செய்வது ஆர்ம்ஸ்ட்ராங் பாமேக்குப் புதிது அல்ல. 2012 ல் ஊர்மக்கள் கைக்காசு போட்டு 100 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைப்பதை சாத்தியமாக்கி செய்தியில் அடிபட்டவர் தான் இவர்.
அந்தமானில் 3 தீவுகள் பெயர் மாற்றம்:
தேசபக்தர் ஆன்மாக்கள் ஆனந்தம் அடைய...
போற்ட் பிளேயர் (அந்தமான்-நிகோபார்), டிசம்பர் 26
வருகிற ஞாயிறு (டிசம்பர் 30) அன்று அந்தமான் நிக்கோபார் தீவு தலைநகர் போர்ட் பிளேயரில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று தீவுகளின் பெயர்களை மாற்றி புதுப் பெயர்கள் அறிவிப்பார் என்று பாரத அரசின் உள்துறை துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமானில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் சுதந்திர அரசாங்கம் பிரகடனம் செய்ததன் 75வது ஆண்டு நிகழ்ச்சிகளை முன்னிட்டு அங்கே பிரதமர் தேசியக்கொடி ஏற்றுகிறார். பெயர் மாற்றப்பட இருக்கிற தீவுகள்: ராச், நீல், ஹாவ்லாக். அன்னிய ஆட்சியாளர்கள் வைத்திருந்த அந்தமான் நிக்கோபார் என்ற பெயர் மாற்றப்பட வேண்டும் என்று நேதாஜியே கூட முன்பு யோசனை கூறியது உண்டு. 1857 சுதந்திரப் பேரெழுச்சியின் போது ஜான்சி ராணி லட்சுமிபாயை படுகொலை செய்த வெள்ளைக்கார ராணுவ தளபதியின் பெயர் அந்தமான் தீவுக்கூட்டங்களில் ஒரு பெரிய தீவுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரப் பேரெழுச்சியில் போரிட்டு உயிர்த் தியாகம் செய்த தேசபக்தர்களின் பெயர்களை தீவுகளுக்கு சூட்ட வேண்டும் என்று ராஜ்யசபாவில் பாஜக உறுப்பினர் இல கணேசன் மார்ச் 2017 ல் கோரிக்கை எழுப்பியிருந்தது நினைவிருக்கலாம்.
0 Comments