SETU-16

ஆக்ராவில் தேசிய மகளிர் சிந்தனை அரங்கம்
ஆக்ரா (உத்தரப் பிரதேசம்) டிசம்பர்  19


இரண்டு நாள் சிந்தனை அரங்கம் மகளிர் மகா கும்ப மேளா ஆக்ரா டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தேச நலனுக்காக களப்பணியாற்றி வரும் மகளிர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து கலந்து கொண்டார்கள். அவர்களிடையே பேசுகையில் உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மௌர்யா, கண்ணனின் புனிதபூமி பிருந்தாவனத்தில் ராதைக்கே முக்கியத்துவம் என்று குறிப்பிட்டு அந்த தலம் மகளிர் சக்திக்கு மகத்தானதொரு எடுத்துக்காட்டு என்றார். மகளிர் சுய மரியாதையுடனும் வரம்பு கட்டிக் கொண்டும் தங்கள் இலக்கை தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் அரவிந்த் தீட்சித், தேசப் பாதுகாப்பில் பெண்கள் மகத்தான பங்கு வகிக்கிறார்கள் என்று கூறி மகளிர் சாதனைகளுக்கு தலை வணங்குவதாக தெரிவித்தார். ’நாரி கும்ப’ என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வளாகத்தில் ஜான்சிராணி லக்ஷ்மி பாய், அவந்தி பாய் போன்ற வீராங்கனைகளின் சாதனைகளை ஓவியங்களாக தீட்டி காட்சிப்படுத்தியிருந்தார்கள். நாரி கும்ப நிகழ்ச்சியை ராஷ்ட்ர சேவிகா சமிதி பொறுப்பாளர் கீதா தாயி வழிநடத்தினர். சாத்வி ரிதம்பரா, மகளிர் ஆணைய தலைவி சுஷ்மா சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். நமிதா சர்மா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

பசு தேசிய விலங்கு: ஹிமாச்சல் சட்டமன்றம் தீர்மானம்
சிம்லா (ஹிமாச்சல் பிரதேசம்), டிசம்பர் 19

ஹிமாச்சல் பிரதேச மாநில சட்டமன்றம் டிசம்பர் 13 வியாழனன்று கோமாதாவை (பசுவை) “தேசிய விலங்கு” என்று பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு முன் தேசத்திலேயே முதல் முறையாக இதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது உத்தராகண்ட் மாநில சட்டமன்றம். ஹிமாச்சல் பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம். எல்.ஏ அனிருத் சி!ங் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். பாஜக எம்.எல்.ஏக்கள் தீர்மானத்தை ஆதரித்தார்கள். பால் மரத்த பசுக்களை மக்கள் கைவிட்டு விடுவதால் இந்த தீர்மானம் அவசியமாகி விட்டது என்றார் அனிருத். பிராணிகள் நலத் துறை அமைச்சர் வீரேந்திர கன்வர், மாநில அரசு கோடிக்கணக்கில் செலவிட்டு பல மாவட்டங்களில் பசுக்களுக்கான சரணாலயங்களை அமைத்து வருவதை சுட்டிக் காட்டினார். ஹிமாச்சல் பிரதேசத்தில் வளர்த்தெடுக்கப்படும் மலைமாடு வகையை சேர்ந்த ’கௌரி’ பசுக்களை கொண்டு வந்து விருத்திபண்ண வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கோரினார்கள். இன்னும் சில எம். எல். ஏக்கள் ராஜஸ்தான் மாநிலத்தைப் பின்பற்றி பசு பாதுகாப்புக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்றார்கள். கோயில் காணிக்கைகளிலிருந்தும் பசு பாதுகாப்பு தீர்வையிலிருந்தும் கிடைத்த 25 கோடி ரூபாயை கோமாதா நலனுக்காக மாநில அரசு செலவிட்டுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ கிஷோரி லால் தெரிவித்தார்.

“விதவைகள் காலனி” தெரியுமா?
டில்லி (புது டில்லி), டிசம்பர் 19
சீக்கியர்களைக் குறி வைத்து 1984ல் படுகொலை நடத்திய காங்கிரஸ் பிரமுகர்களில் ஒருவரான சஜ்ஜன் குமாருக்கு சென்ற வாரம் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தபோது தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள ’விதவைகள் காலனி’ யில் வசிக்கும் சீக்கியப் பெண்கள் நீதி கோரி தொடர்ந்து போராடி வருபவர்களுக்கு நன்றி சொன்னார்கள். உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட ஜகத்சிங் என்ற சீக்கியருடைய மனைவி மாயா கௌர் (வயது59), “என் குடும்பத்துல அஞ்சு பேர உயிரோடு தீ வச்சு எரிச்சுக் கொன்னாங்க “ என்கிறார். கொலைகாரக் கும்பலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் பெரிய காங்கிரஸ் தலைவர்கள் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். “கொலைகாரப் படுபாவிகள் அத்தனை பேரையும் தூக்கில் போடுங்கள்” என்றார் ஜானகி கௌர் (65)கோபம் கொப்பளிக்க. இவர் கணவர் ஹக்கம் சிங் 1984 ல் எரித்துக் கொல்லப்பட்ட சீக்கியர்களில் ஒருவர். கொலைகாரக் கும்பலில் பலரும் இந்திரா காந்தி வம்சத்தாரின் பாதுகாப்பில் பெரிய பதவிகளில் இருந்து வருவதாக விதவைகள் காலனியில் பலர் தெரிவித்தார்கள். போன மாதம் 1984 சீக்கியர் படுகொலை சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதற்கு முன் 1996ல் ஒரு கசாப்புக் கடைக்காரன் சீக்கியர் படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதோடு சரி. 1984 ல் தலைநகர் டில்லியில் மட்டும் மொத்தம் 3,000 சீக்கியர்கள் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது பழைய செய்தி.

ஆர்.எஸ்.எஸ் அன்பர்களின் “பலனை எதிர்பாராமல் பணி செய்யும்” பண்பு
புணே (மகாராஷ்ட்ரா), டிசம்பர் 19

புணேயில் ஒரு ஆன்மிகப் பத்திரிகையின் வெள்ளி விழாவில் தலைமை உரை ஆற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ’லட்சியம், அதற்கான பணி, பணிபுரிபவர், அவர் செய்யும் முயற்சிகள் எல்லாம் இருந்தாலும் விரும்பிய பலன் கிடைக்க உரிய நேரம் வர வேண்டும்’ என்ற கருத்தில் அமைந்த “அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச” என்ற கீதை செய்யுள் (அத்யாயம் 18 செய்யுள் 3) பற்றி குறிப்பிடுகையில் பின்வரும் சம்பவத்தை விவரித்தார்: “அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில் (1975-1977) ஆர்.எஸ்.எஸ். தடைசெய்யப்பட்டது. சங்க.ஸ்வயம்சேவகர்கள் சத்தியாகிரகம் செய்தோம். அப்போது ’நாம் நல்ல வேலதானே செய்கிறோம், நமக்கு ஏன் இப்படி இடைஞ்சல் வருகிறது? கடவுளுக்கு கண் இல்லையா?’ என்று மூத்த பிரச்சாரகர்களிடம் கேட்போம். சங்க வேலை செய்வதை கைவிடக் கூடாது என்று மட்டும் பெரியவர்கள் சொல்வார்கள். இன்று ஆர்.எஸ்.எஸ் அடைந்துள்ள இந்த நிலையை அன்று நாங்கள் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை. சங்கத்திற்கு இது போன்ற நிலை வரும் என்று அன்றைக்கு யாராவது சொல்லியிருந்தால் அவரைக் கேலி செய்திருப்போம்! தனிநபரோஅமைப்போ என்னதான் திறம்பட செயல்பட்டாலும் உரிய நேரம் வரும் போதுதான் பலன் கிடைக்கிறது”. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

Post a Comment

0 Comments