பத்திரிகை செய்தி
சபரிமலையில் காவல்துறையை ஏவி விட்டு அப்பாவி அய்யப்பன்மார்களை தாக்கி கைது செய்கின்ற மக்கள் விரோத கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை கண்டித்து நாடு தழுவிய மாபெரும் போராட்டம்.
**************************
விரதமிருந்து இருமுடியேந்தி சபரிமலைக்கு தரிசனம் செய்ய கூட்டம் கூட்டமாக வருகின்ற ஐயப்பன்மார்களின் நம்பிக்கையையும் மரபுகளையும் தகர்த்தெறிந்து, அவர்களுடைய வழிபடும் உரிமையை கேள்விக்குறியாக்கி நிஜமான மனிதஉரிமை மீறல் நடத்தியுள்ளது கேரளா காவல்துறை. கிருத்துவர்களான மனோஜ் ஆப்ரஹாம், யதீஷ் சந்திரா போன்ற காவல்துறை அதிகாரிகளை நியமித்து பக்தர்களை தாக்கும் படி ஏவி விட்டுள்ளார் உள்துறை பொறுப்பையும் கைவசம் வைத்துள்ள கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் பதவியில் வீற்றிருக்கின்ற விஜயன் ஒரு கம்யூனிஸ்ட் குண்டர் போன்று பேசுகின்றார்.
ஆட்சியே பறிபோனாலும் பரவாயில்லை, இளம் பெண்களை எப்படியாவது சபரிமலையில் தரிசனத்திற்கு அழைத்து செல்வதே எமது தலைமையிலான அரசின் முதற்பணி என கொக்கரிக்கின்றார் அவர்.
கடந்த செப்டம்பர் 28 ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதிலிருந்தே, அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டுமென்று அய்யப்ப பக்தர்களால் ஆரம்பிக்கப்பட்ட அறவழி போராட்டமானது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சபரிமலையில் தொன்மையாக பின்பற்றி வருகின்ற மரபுகளும் ஆச்சார அனுஷ்டானங்களும் தொடரவேண்டும் என நடைபெற்று வருகின்ற இப்போராட்டத்தில், அரசாங்கத்தின் கணிப்பை பொய் ஆக்கி பல்லாயிரக்கணக்கில் பெண்களும் ஆர்வமுடன் பங்குபெற்று வருகின்றார்கள். நாட்டின் அனைத்து மாநிலங்களையும் கடந்து பல வெளிநாடுகளிலும் கூட அய்யப்ப பக்தர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி போராட்டம் நடத்துகின்றார்கள். பக்தர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த உச்சநீதிமன்றம், மறுபரிசீலனை கோரி சமர்ப்பித்த நாற்பத்திற்கும் மேற்பட்ட மனுக்களையும் ஏற்றுக்கொண்டதுடன், புதியதாக தாக்கல் செய்த ரிட் பெட்டீஷன்களும் நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டு ஜனவரி 22 அன்று திறந்த நீதிமன்றத்திலேயே விசாரிக்க ஒத்துக்கொண்டுள்ளது.
ஆனால், இதற்க்கு முன் உச்சநீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளையும் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போட்டு சாக்கு போக்கு கூறிய பினராயி அரசு, அய்யப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல், உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்துவோம் என கூறிக்கொண்டு அசுரவேகத்தில் செயல்பட துடிக்கிறது. அய்யப்ப பக்தர்கள் அல்லாத கடவுள் நம்பிக்கையற்ற பிறமதங்களை சேர்ந்த இளம்பெண்களை காவல்துறை உதவியுடன் சபரிமலைக்கு அழைத்துச்செல்ல பினராயி விஜயன் தீட்டிய திட்டத்தினை பக்தர்கள் ஒன்றுசேர்ந்து முறியடித்தனர்.
இப்பொழுது மண்டல மகர ஜோதி திருவிழாவிற்க்காக கோயில் திறந்தது முதல் பக்தர்களை துன்பக்கடலில் மிதக்க விட்டுள்ளது இந்த அரசு. நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் 144 தடை உத்தரவை அறிவித்துவிட்டது. பதினைந்தாயிரம் காவல்துறையினரை பணியில் அமர்த்தி ஒரு யுத்தபூமியை போல் ஆக்கிவிட்டது புனிதமான சபரிமலையையும் அதன் பூங்காவனத்தையும். பெண் காவல்துறை அதிகாரிகளை சன்னிதானத்தில் பணிக்கு அமர்த்தியுள்ளது. பதினெட்டாம்படிக்கு மீதும், கோயில் வளாகத்திலும் பணியிலுள்ள காவல்துறையினரை தவிர மற்ற எல்லா போலீஸ்காரர்களும் ஷூ, லாத்தி உட்பட முழு சீருடையில் இருக்கவேண்டும் என்றும் அய்யப்பபக்தர்களை பார்த்து சாமி என்றோ அய்யப்பா என்றோ அழைக்க கூடாது என்றும் உத்தரவு போட்டுள்ளது.
சபரிமலை வரலாற்றில் இதத்தனையும் புதுமையானது, சன்னிதானத்தில் பக்தர்கள் ஓய்வெடுத்திடக்கூடாது என அவ்வப்பொழுது தண்ணீர் பாய்ச்சி ஈரம் நிலைநிறுத்தி வைத்துள்ளார்கள். மலையேறி களைப்புற்ற பக்தருக்கு சற்று அமர்ந்து ஓய்வெடுக்க முடியாதபடி அரக்கத்தனத்துடன் போலீஸ் செயல்படுகின்றது. ஆறு மணி நேரத்திற்குள் பம்பைக்கு திரும்பி விட வேண்டுமென அனைவருக்கும் நோட்டீஸ் அளிக்கிறார்கள். பக்தர்களால் தங்கி நெய் அபிஷேகம் கூட செய்ய அனுமதியில்லை.. நாம் இருப்பது சுதந்திர பாரதத்திலா அல்லது பாகிஸ்தானிலா என்று சந்தேகம் வந்து விட்டதாக பல பக்தர்களும் சொல்கின்றார்கள்.
சன்னிதானத்தில் ஒன்றாக சேர்ந்து சரணம் போடுவதற்க்கோ அமர்ந்து பஜனை செய்யவோ 144 தடை உத்தரவை கூறி போலீசார் அனுமதிப்பதில்லை. யாரவது மீறிவிட்டால் அவர்களை கைதுசெய்து ஜாமீன் கிடைக்காத பிரிவில் சிறையில் அடைக்கின்றார்கள். கோயிலை சுற்றி சயன பிரதிக்ஷணம் செய்யவும் அனுமதிப்பதில்லை. இப்படி சொல்லொணா துயரத்தில் பக்தர்களை தவிக்கவிடுகின்ற நவீன இரணியகசிபுவாக பினராயி உள்ளார்.
நிலக்கலிலிருந்து பம்பைக்கு பைக் உட்பட எந்த தனியார் வாகனத்துக்கும் அனுமதியில்லை. கொள்ளை லாபத்துடன் இயக்குகின்ற அரசாங்க பேருந்தில் போக வர கட்டணம் வசூலித்து 48 மணி நேரத்திற்குள் திரும்பி வர வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறார்கள். தவறி விட்டால் பயணசீட்டினை புதியதாக வேறு வாங்க வேண்டும். கிட்டத்தட்ட அமெரிக்காவிற்கு சென்று வருவதை விட கட்டுப்பாடுகளும் சட்டங்களும் போட்டு ஐயப்ப பக்தர்களை வாட்டி வதைக்கிறது பினாரயி விஜயனும் அவருடைய காவல் துறையும்.
ஒரு புறம் பக்தர்களுக்கு தேவையான தங்குமிடம், கழிவறை,உணவு என போதுமான எந்த அடிப்படை வசதிகளும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் என எங்கும் ஏற்பாடு செய்யவில்லை. மறுபுறம் உண்மையான பக்தர்களை துன்புறுத்தி நம்பிக்கையற்ற இளம் பெண்களை அழைத்துச்செல்ல முயற்சிக்கிறார் பினராயி விஜயன்.
இதை தட்டி கேட்டால் சிறை உறுதி. அமைதியாக சபரிமலைக்கு தரிசனம் செய்ய இருமுடி சுமந்து சென்ற ஹிந்து ஐக்யவேதியின் மாநில தலைவர் திருமதி.கே.பி.சசிகலா டீச்சர் அவர்களை கைது செய்தார்கள். அதே போன்று இருமுடியுடன் சென்ற மாநில பா.ஜ.க.பொதுச் செயலாளர் திரு.கே.சுரேந்திரனை கைது செய்து பொய் வழக்கு போட்டு இருமுடியுடன் கொட்டாரக்கரை சிறையில் அடைத்துள்ளது இந்த ஹிட்லர் அரசு. சன்னிதானத்தில் சரணகோஷம் போட்ட ஒரே காரணத்திற்க்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொய் வழக்கு போட்டு ஜாமீன் கிடைக்காத படி பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார். சரணம் கூறிய குற்றத்துக்காக பெரும்பாவூரை சேர்ந்த ராஜேஷ் என்ற ஐயப்ப பக்தரை சிறையிலடைத்ததுடன் அரசாங்க வேலையிலிருந்தும் சஸ்பெண்ட் செய்திருக்கிறது இந்த அரசு.
ஐயப்ப பக்தர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த பாதகங்கள் அத்தனையும் பெரும் கண்டனத்திற்குரியதாகும். அங்கு வந்த பக்தர்களின் மனித உரிமை பறிபோய் விட்ட சம்பவங்களை உலகினருக்கு தெரியப்படுத்த நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடை பெறுகின்றது. தமிழகத்திலுள்ள துறவியர்,சான்றோர்கள், கோயில் அறங்காவலர்கள், ஜாதிசங்க தலைவர்கள், ஆன்மீக இயக்கங்கள், ஹிந்து அமைப்புகள், ஐயப்ப பக்த அமைப்புகள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து
" சபரிமலை பாதுகாப்பு இயக்கம்" (SABARIMALA PROTECTION COUNCIL) என்ற பொது அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் பெயரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
Chennai
0 Comments